

ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் முதல் பத்து வருடங்களிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும் என்பார்கள். இருக்கலாம் ஆனால் முழுக்க உண்மை இல்லை. எந்த வயதிலும் அனுபவம் பெறலாம்.
அனுபவத்தின் மூலம் வாழ்க்கையின் திசையை மாற்றலாம். விழிப்பு நிலையே இதில் மிகவும் அவசியம். ஆனால், எப்போதும் எதையாவது செய்து கொண்டே, எதையாவது சிந்தித்துக் கொண்டே இருந்தால் போதுமா? நிச்சயம் நிறைய நிறைய நினைவுகளைச் சேகரிக்க வேண்டும்.
பிடித்ததும் பிடிக்காததும்
நினைவுகளைச் சேகரிப்பது என்றால்? செயல்களைச் செய்வது. செயல்பாடுகளை முன்னெடுப்பது. வளரிளம் பருவத்தைச் சேர்ந்த உங்களுக்கு இருக்கும் உடல் மற்றும் மன ஆற்றல் அசாத்தியமானது. அதேபோல நிறையக் குழப்பங்களும் இருக்கும். அது இந்த வயதிற்கே உண்டான இயல்பு. குழந்தை என்ற நிலையில் இருந்து பெரியவர் என்ற நிலைக்குத் தாவும் இடைப்பட்ட காலம் இது.
எல்லோரையும் பிடிக்கும் அதே சமயம் எல்லோரையும் பிடிக்காது. அறிவுரை சொல்பவர்களை அறவே பிடிக்காது. உடலில் நிகழும் மாற்றங்கள் மகிழ்வையும் தரும் குழப்பத்தையும் பயத்தையும் தரும். போதிய தெளிவான வழிகாட்டல் தேவை. இதே வயதில் இரண்டு பொதுத்தேர்வுகளைச் சந்திப்பீர்கள். ஏராளமான அழுத்தங்களைப் பள்ளியும், வீடும் உங்களுக்குக் கொடுக்கும்.
இதெல்லாம் மீறியே நினைவுகளைச் சேகரிக்க வேண்டும். புதிய முயற்சிகள் எல்லாமே நினைவுகள்தான். அதில் வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம். அசாத்தியமான முன்னெடுப்புகள் இந்த வயதில் சாத்தியம். சக மாணவனின், நண்பனின், பார்க்கும் தம்பி தங்கைகளின், பள்ளியின், வசிப்பிடத்தில் வயதானவர்களின் நலனுக்காக முன்னெடுக்கும் எல்லாச் செயல்களும் முக்கியமானவை.
பொக்கிஷமாக மாறும் பயணங்கள்
பயணங்கள் அற்புத நினைவுகள் தரவல்லவை ஏதுமில்லை. சுற்றி இருக்கும் ஊர், பேசப்படும் தளங்கள், பேசாத தளங்கள், ஏதுமற்ற நிலம் என எங்கும் நண்பர்களுடன் பாதுகாப்பாக பயணிக்கலாம். இந்த குட்டிக்குட்டி பயணங்கள் உங்கள் சிந்தனை ஓட்டத்தையே மாற்றிவிடலாம். இந்தப் பயணங்கள் எல்லாமே வாழ்விற்கான பொக்கிஷங்களாக மாறும். உலக வரலாற்றில் ஆளுமைகளின் மாற்றங்கள் எல்லாம் ஏதோ ஒரு பயணத்திலேயே தொடங்கியுள்ளது. அன்றாடம் நிகழக் கூடிய புதுமையான நடவடிக்கைகள் எல்லாமே நினைவுகளை கொடுக்கும். கூடுகைகள், சந்திப்புகள் எல்லாமே அவற்றுக்கு வழிவகுக்கும்.
நினைவுகளைச் சேகரியுங்கள் அது நிச்சயம் பின்னாளில் அசைபோட உதவும். நமக்கான நினைவுகள் மட்டுமல்ல, நமது குடும்பத்திற்கான, நண்பர்களுக்காக, சமூகத்துக்கான நினைவுகளை உருவாக்கிட முனையுங்கள்.
(நிறைவுற்றது)
கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர்.
தொடர்புக்கு: umanaths@gmail.com