

கனவுகளை நனவாக்கும் நூலகம்
நூலகம் என்பது ஏராளமான கனவுகளை உருவாக்கும் மந்திரச்சாவி.சென்னைப் புத்தகக் கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது. வாங்கும் நபர்களின் கைப்பிடித்து வீடுசென்றிருக்கும் புத்தகங்கள் கூட ஏதேனும் கனவு கண்டிருக்கும் இல்லையா? புத்தகங்களின் கனவு என்னவாக இருக்கும்?
காரியின் கனவு
கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் காரியின் பெற்றோர். காரி பதினோறு வயது சிறுவன். காரியை கவனித்துக்கொள்ள அவனுடைய தாத்தா சென்னைப் பூங்காவிற்கு வந்திருக்கிறார். அந்தப் பூங்காதான் அவனுடைய வீடு. அங்குள்ள அறையில்தான் காரியும், அவன் பெற்றோரும் தங்கியுள்ளனர். காரியின் தந்தை பூங்காபாதுகாவலர். தாய் அந்தப் பகுதி தூய்மைப் பணியாளர்.
காரியின் தாத்தா சொந்தக் கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் காய்கறிவண்டியின் உதவியுடனே சென்னையிலி ருந்து தன்னுடைய பெயரனை, கிராமத்திற்கு அழைத்துச் செல்ல வருகிறார். தாத்தாவும், பேரனும் கிராமத்தை அடைகிறார்கள். தூய்மைப் பணியாளரான தாய்க்கு அடிக்கடி விடுமுறை கிடைக்காது என்பதால், எப்போதோ ஒருமுறைதான் தாத்தா வீடு சென்றிருக்கிறான் காரி. இந்தமுறைதான் நிறைய நாட்கள் தங்கிக்கொள்ளும் அனுமதியுடன் கிராமத்திற்கு வந்திருக்கிறான்.
கோபாலனின் நூலகம்
கோபாலன் காரியின் தாய்மாமன். தாய் சுகந்தியின் அண்ணன். மாற்றுத் திறனாளி. சக்கர நாற்காலியின் உதவியுடன் பயணிப்பவர். கிராம நூலகப் பொறுப்பாளர். காரி வீட்டிற்கு வந்தநாள் முதல், கரோனா தொற்றில் இருக்கும் தாய் தந்தையின் நினைவு வராதபடிக்கு, காரியை தன்னுடனே எப்போதும் வைத்துக்கொள்கிறார்.
கோபாலன் கிராமத்திலுள்ள ஊர்ப்புற நூலகத்திற்கு பொறுப்பாளராகயிருப்பதால், பகல் முழுவதும் காரியும் கோபாலனும் நூலகத்தில் இருக்கிறார்கள்.நூலகத்திற்கு யாருமே வராததால், காரி மனம் சோர்வடைகிறான். நூலகத்திலுள்ள புத்தகங்களை தூசுத்தட்டி அடுக்கிவைக்கிறான். யாராவது நூலகத்திற்கு வரமாட்டார்களா என்று ஏங்குகிறான்.
விதையாகிய செந்தாழை
காரி நூலகத்தின் புத்தகங்களை யெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, நூலக வாயிலில் இருசக்கர வாகனம் நிறுத்தும் சத்தம் கேட்டு எட்டிப்பார்கிறான். செந்தாழை எனும் பெண், உள்ளே வரலாமா? கிராமங்களுக்கு தேவையான உதவிசெய்யும் நிறுவனத்திலிருந்து இங்குவந்தபோது, இந்த ஊரில் நூலகம் இருப்பதாக பெண்கள் கூறினர்.
பார்த்துவிட்டுச் செல்ல வந்தேன் என்று கூறிவிட்டு, நூலகப் புத்தகங்களையெல்லாம் பார்வையிட்டுவிட்டு, நூலகம் ஏன் சிறப்பாக செயல்படவில்லை என்ற கோபாலின் தரப்புகாரணத்தை பொறுமையாக கேட்டறிகிறார். காரி செந்தாழையிடம், நூலகம் என்றால் எப்படி இருக்கணும்? என்று கேட்டறிகிறான். செந்தாழை நூலகத்தின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சொல்கிறார். காரி நூலகத்தை உயிர்ப்பிப்பது என்று முடிவுசெய்கிறான்.
புத்தகச் சிறகு
காரி தங்கியிருக்கும் பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு வரும் மாமாவும், அவருடைய குழந்தைகளும், பூங்காவிற்கு வரும்போது புத்தகங்களைக் கொண்டுவந்து பரப்பி, படித்துவிட்டு திருப்பி தரலாம் என்பார்கள். ஒருமுறை காரியை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அழைத்துச்சென்றனர்.
மாமாவின் வீடு அருகிலேயே இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் புத்தகங்கள் படிக்க வீட்டிற்கு வரலாம் என்று அழைத்திருந்தார். கிராமத்து நூலகத்தை உயிர்ப்பிக்க, அந்த மாமாவிடம் புத்தகங்கள் கேட்கலாமே என்று காரிக்கு யோசனை வருகிறது. தந்தையை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு புத்தக மாமாவின் தொடர்பெண்ணை பெற்று, பேசுகிறான்.
செந்தாழையின் முயற்சி
ஊரிலுள்ள படித்தவர்களிடம் புத்தக உதவி கேட்க, செந்தாழை ,காரி, கோபாலன் முயற்சி செய்கின்றனர். புத்தக மாமா கோபாலனுக்கு கால்செய்து புத்தகங்கள் அனுப்பியுள்ளதாக கூறவும், காரி கூரியர் அலுவலகம் சென்று புத்தகங்கள் பெற்று, நூலகத்தை உயிர்ப்பிக்கும் கனவில் தூக்கத்தை இழக்கிறான். மறுநாள் கோபா லனும் காரியும் கூரியர் அலுவலகம் செல்கின்றனர். 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வந்துள்ளதை அறிந்து காரி ஆனந்தம் அடைகிறான்.
நூதன அழைப்பு
நூலகத்தில் புதிய புத்தகங்கள் வந்துள்ளன வாசிக்க வாங்க என்று வீடு வீடாகச்சென்று அழைக்கின்றனர் காரியும் கோபாலனும். நூலகத்தில் மக்கள் வரவிற்காக காத்திருக்கின்றனர். ஏமாற்றமே கிடைக்கிறது. செந்தாழை சிறிய மைக் செட் வாங்கி வந்து தருகிறார். நூலகம் அமைதியாக இருக்க வேண்டிய இடம் என்கிறார் கோபாலன்.குழந்தைகள் கூடவேண்டிய இடம். குழந்தைகள் கதைகள் கூறவும், பாட்டுகள் பாடவும் மைக் இருந்தால் உற்சாகமாய் இருக்கும் என்கிறார் செந்தாழை.
காரி நூலகத்திற்கு மக்களை வரவழைக்க, நூதன முயற்சிகளை மேற்கொள்கிறான். அவனே குட்டி குட்டி வாசகங்களை கண்டுபிடித்து தாள்களில் எழுதி,கலர்பேனாக்களைக் கொண்டு வண்ணம்தீட்டி, படம் வரைந்து அழகுபடுத்துகிறான். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அறிவிப்புத் தாளைக் கொடுத்து நூலகத்திற்கு குழந்தைகளை அனுப்பிவைக்குமாறு கூறுகிறான்.
இறுதியில் காரி நினைத்தவாறு நடந்ததா? நூலகத்திற்கு மக்கள் வந்தனரா? என்பதை புத்தகத்தை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர்,
ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,
திருப்புட்குழி, காஞ்சிபுரம்.
தொடர்புக்கு:udhayalakshmir@gmail.com