

காக்குரோ என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? சுடோகு பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருப்போம். காக்குரோ, சுடோகுவின் உறவினர் முறைதான். இரண்டும் கணித விளையாட்டுகள்.இரண்டின் பிறப்பிடமும் ஜப்பான் நாடுதான். இது ஆங்கிலம் மற்றும் தமிழில் குறுக்கெழுத்து போட்டி விளையாடுவது போல எண்களை வைத்து ஒரு குறுக்கெழுத்து.
இந்த விளையாட்டுகள் அனைத்தும் பத்திரிக்கைகள், இதழ்கள் மற்றும் தினசரிகளின் வருகையால் பரபரப்பாக மக்களிடம் சென்று சேர்ந்தன. முழுக்க எண்களை, குறிப்பாகக் கூட்டலை அடிப்படையாகக் கொண்ட புதிர்கள். விளையாடுவதற்கு எளிதாகவும் இருக்கும். தீர்வு கண்டுவிட்டால் ஒருவித வெற்றி மகிழ்ச்சி வந்தும் சேரும். நவீனக் கணிப்பொறி மற்றும் தொழில்நுட்பம் மூலம் எளிதான முதல் கடினமான புதிர்களை எளிதில் உருவாக்கிட முடியும். எத்தனை கட்டங்கள் மற்றும் கடின அளவினைக் கொடுத்தாலே போதும் டக்டக்கென புதிர்கள் வந்துவிழும்.
எண்களின் கூட்டுத்தொகை
இந்த விளையாட்டின் அடிப்படைகளைப் பார்த்துவிட்டு அடுத்த சுற்றுக்குச் செல்வோம்.
விதி 1: ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களைக் கொண்டு இடமிருந்து வலம் (கருப்பு பெட்டி இருக்கும் வரையில்) நிரப்ப வேண்டும். அதன் கூட்டுத்தொகை இடது ஓரத்தில் இருக்கும் தொகையாக வர வேண்டும். படத்தில் முதல் வரிசையில் 9 என இருக்கிறது. ஆகவே அடுத்த இரண்டு பெட்டிகளில் இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 9 ஆக இருக்க வேண்டும்.
விதி 2: இடமிருந்து வலம் போல மேலிருந்து கீழாக மேலே குறிப்பிட்டிருக்கும் எண்ணின் கூட்டுத்தொகை வரும்படி எண்களை நிரப்ப வேண்டும்.
9 = 2 7
8 = 3 5
7 = 1 6
அதே போல
6 = 2 3 1
18 = 7 5 6
முதலில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். 9 என்ற எண்ணை வரவழைக்க என்னென்ன வகையில் கூட்டலாம் 1 8, 2 7, 3 6, 4 5, 5 4, 6 3, 7 2, 8 1. இதே போல ஒவ்வொரு எண்ணிற்கு (8,6,7, 18) எழுதலாம்.சின்ன எண்ணில் இருந்து ஆரம்பிக்கலாம். முதல் வரிசை முதல் எண் 4க்கும் குறைவாக இருக்க வேண்டும் ஏனெனில் கீழே இன்னும் இரண்டு பெட்டிகள் இருக்கு. இப்படி ஒவ்வொரு எண் ணாக முயன்று விடையைப் பூர்த்தி செய்யவும்.
நீங்களே உருவாக்குங்கள்
எளிமையான 3 X 3 அல்லது இதே போல 2 X 3 அல்லது வேறு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் நீங்களே ஒரு தாளில் கோடு போட்டு எண்களை நிரப்புங்கள். கூட்டுத்தொகையை எழுதிவிட்டு மற்ற எண்களை அழித்துவிடவும்.
உங்கள் நண்பர்களிடம் கொடுத்து விடையை கண்டுபிடிக்க சொல்லுங்கள். யார் விரைவாகக் கண்டுபிடிக்கின்றார்கள் என்றும் பாருங்கள். இந்த விளையாட்டில் எளிதாக எண்களைக் கூட்டுவது கைகூடும். தர்க்கச் சிந்தனையும் வலுப்பெறும். இது இங்க வந்தா இது சாத்தியமில்லை என மனம் வேகமாகக் கணக்கிடும். எளிதான கணக்குகள் வந்துவிட்டால் இதனையே மெல்ல மெல்ல கடினமாக மாற்றி அமைக்கலாம்.10 X 10 வரைந்து சில பெட்டிகளை கறுப்படித்து எண்களை நிரப்பி புதிர்களை உருவாக்கலாம். உங்கள் பள்ளி இதழுக்கோ, பள்ளி அறிவிப்புப் பலகையிலோ புதிர்களை ஒட்டி பள்ளியையே இதில் பங்குபெறச்செய்யலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’
ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்.
தொடர்புக்கு: umanaths@gmail.com