

அமலன், 1980களில் தொடக்கப்பள்ளியில் படித்தார். அப்போது மாணவர்களுக்கு அரசு இலவசமாக தென்னம்பிள்ளை கொடுத்தது. அமலனின் தந்தை தோட்டத்தில் பெரிய குழி வெட்டி நட்டு வைத்தார். பாத்தி கட்டுவது, தண்ணீர் விடுவது, பாளையை சுத்தம் செய்வது என தென்னை மரத்தை நண்பன்போல அமலன் பராமரித்தார்.
காய்க்க ஆரம்பித்த நாள்முதலாக, மரமேறி காய் பறிப்பதும் அமலன்தான். இன்று காலையில், தன் மகளை தோட்டத்துக்கு அழைத்துச் சென்ற அமலன், மரம் ஏற மகளுக்கு கற்றுக் கொடுத்தார். அருகில் நின்ற மனைவி, “எம் புள்ள மரம் ஏறுதோ இல்லையோ! கண்டிப்பா மலை ஏற கத்துக்கொடுக்கனும்” என்றார். “என்ன! அஷிமாவின் பேட்டி பார்த்த பிறகு வந்த புது கனவா!” என்று கேட்டு புன்னகைத்தார் அமலன்.
துணிவோடு முன்னேறு
ஜப்பான் தம்பதியருக்கு 2001-ல்அமெரிக்காவில் பிறந்தார் அஷிமாஷிராய்ஷி. ஒரே குழந்தை என்பதால் செல்லமாக வளர்ந்தார். அப்பாவோடு 6 வயதில் நியூயார்க் நகரத்தின் சென்ரல் பார்க் சென்றார். பூங்காவில் சிறிதும் பெரிதுமாக உள்ள பாறைகளில் மனம் லயித்தார். அப்பாவின் உதவியுடன் பாறைகளின் முகடுகளைப் பற்றிப் பிடித்து லாவகமாக ஏறினார். தடுமாறினாலும் உறுதியுடன் முன்னேறினார்.
அஷிமாவின் ஆர்வத்தையும் கற்றுக்கொள்ளும் வேகத்தையும் தோட்டப் பராமரிப்பாளர் கவனித்தார். ஏறி விளையாடுவதற்கு வசதியாக அருகில் எங்கெல்லாம் பாறைகள் இருக்கின்றன என்பதைச் சொன்னார். அஷிமா ஆர்வமானார். மகளின் மகிழ்ச்சிக்காக அப்பா அழைத்துச் சென்றார். அடிப்படை விதிகளைக் கற்றுக் கொடுத்தார். இணையத்தில் தேடி வாசித்த அஷிமா நுணுக்கங்களை அறிந்தார்.
செயற்கையாக உருவாக்கப்பட்ட முகடுகளைப் பற்றிப் பிடித்து ஏறும் பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார். கைகளை லாவகமாக நீட்டியும் கால்களைக் கவனமாக உயர்த்தியும் சிறிது சிறிதாக ஏறினார். ஏறும் உயரத்தை அதிகரித்தார். சவால்மிகுந்த பாதைகளைத் தேர்ந்தெடுத்தார். வலிமை, சமயோசித அறிவு, நுணுக்கம் மற்றும் நிதானத்துடன் முன்னேறினார். இயற்கையான பாறைகளையும் தேடி ஏற தொடங்கினார். 7 வயதில் போட்டியில் பங்கேற்றார்.
“அப்பாவுக்காக, அம்மாவுக்காக அல்ல, எனக்குப் பிடித்திருந்தது எனவே ஏறுகிறேன். உங்கள் ஆற்றல் அனைத்தையும் ஒரு செயலில் குவிக்கும்போது அபரிமிதமான ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும். சவால்களைச் சமாளிக்க முடியும்” என்றார். மகளுக்கு ஏற்ற ஆடைகளை அப்பா வாங்கினார். மகளுக்கு ஏற்றவாறு அம்மா தைத்தார். “ஒவ்வொரு பேண்ட்ஸ்க்கும் ஒவ்வொரு கதைஉள்ளது. அந்த நினைவே வாழ்க்கையை அழகாக்குகிறது” என்று சொல்லும் அஷிமா, பெற்றோர் அருகில் இல்லாத நாள்களில்கூட அவர்களின் ஆதரவையும், சக்தியையும் உணர்ந்தார்.
புது சரித்திரம் எழுது!
பாறைகளில் ஏறுவதை அளவிட வெர்மின் (John Vermin Sherman) என்பவர் அமெரிக்காவுக்கு என விதியை உருவாக்கியுள்ளார். அது V Scale என அழைக்கப்படுகிறது. அஷிமா 8 வயதில் Power of Silence தடையைக் கடந்து V 10 அடைந்தார். 9 வயதில் V 12 நிலைக்குச் சென்றார். 10 வயதில் V 13 சென்றபோது, குறைந்த வயதில் இந்த நிலைக்கு உயர்ந்தவர், மற்றும் இச்சிக்கலான பாதையைத் தேர்வு செய்த சில பெண்களுள் ஒருவர் என அறியப்பட்டார்.
மலையேற்றத்துக்கு புகழ்பெற்ற Red River Gorge பகுதியில் 2012-ம் ஆண்டு 11 வயதில் ஏறினார். 13 வயதில் V 14 சென்றபோது, இந்நிலைக்குச் சென்ற இரண்டாவது பெண் ஆனார். மலையேற்ற போட்டியில் (IFSC - International Federation of Sport Climbing) தொடர்ந்து 2015, 2016, 2017-ஆம் ஆண்டுகளில் தங்கம் வென்றார். 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வெற்றி பெற இயலாவிட்டாலும், தனக்குப் பிடித்ததைச் செய்து மகிழ்ந்திருக்கிறார்.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
தொடர்புக்கு:sumajeyaseelan@gmail.com