வாழ்ந்து பார்! - 25: இதுவே போதும் என ஒருபோதும் நினைக்காதே

வாழ்ந்து பார்! - 25: இதுவே போதும் என ஒருபோதும் நினைக்காதே
Updated on
2 min read

எத்தனை பேர் ஒன்பது புள்ளிகளையும் கையை எடுக்காமல் நான்கு நேர்கோடுகளால் இணைத்தீர்கள்? எனக் கேட்டுக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தார் ஆசிரியர் எழில். பலர் கைகளை உயர்த்தினர். அவர்கள் ஒவ்வொருவரின் குறிப்பேட்டையும் தனித்தனியே வாங்கிப்பார்த்தார். பின்னர், வெண்பலகையில் இருந்த ஒன்பது புள்ளிகளையும் இணைத்துக் காட்டும்படி பாத்திமாவை அழைத்தார். அவள் அவற்றைப் பின்வருமாறு இணைத்தாள்.

மாணவர்கள் அனைவரும் அவளைப் பாராட்டிக் கைதட்டினர். விடையைக் கூர்ந்து கவனித்த முகில், கோடுகள் கட்டத்தைத்தாண்டி வெளியே நீண்டிருக்கின்றனவே? என்றான். அவனது கேள்விக்கு விடையளிக்க அருளினியனை அழைத்தார் எழில். அவன், கட்டத்திற்கு வெளியே கோடுகள் நீளக் கூடாது என்று விதியில்லையே என்றான் புன்னகையோடு.

கட்டத்துக்கு வெளியே

ஆமாம். ஆனால், நான் ஏன் அப்படியொரு விதியிருப்பதாய் நினைத்துக் கொண்டேன்!? என்றான் முகில் சிந்தனைவயப்பட்ட குரலில். புள்ளிகள் இருக்கும் பகுதியை ஒரு கட்டமாக உனது மனம் எண்ணிக் கொண்டது. அதனால்தான் கோடுகள் அக்கட்டத்தைத் தாண்டி கோடுகளை நீட்டக் கூடாது என்று உனது மனம் உனது கைக்கு கட்டளை இட்டது. அதன் விளைவு, உன்னால் அப்புள்ளிகளை இணைக்க முடியவில்லை என்று விளக்கினான் அருளினியன்.

என்னால் மட்டும்தான் இணைக்க முடியவில்லையா? என்று பாவமாக ஆசிரியரிடம் கேட்டான் முகில். நீ மட்டுமில்ல பத்திமாவையும் அருளினியனையும் தவிர மற்ற யாராலும் இணைக்க முடியவில்லை என்றார் எழில்.

அவர்கள் இருவர் மட்டும் எப்படி கட்டத்தைத் தாண்டிச் சிந்தித்தார்கள்? என்று வினவினாள் கயல்விழி. முதலில் நானும்கட்டத்திற்குள்தான் இணைக்க முயன்றேன். சில முயற்சிகளுக்குப் பின்னர் எனது மனத்தைத் திறந்து கட்டத்தைத் தாண்டிச் சிந்தித்தேன். பொறுமையாய், நேரஞ்செலவிட்டு, வெவ்வேறு வழிகளில் முயன்றேன்.

முடிவில் வென்றேன் என்றான் அருளினியன். அதாவது, திறந்த மனம், பொறுமை, தவறுகளிலிருந்து பாடங்கற்றல், புதிய கோணத்தில் சிந்தித்தல், சோதித்தறியும் மனநிலை, அறிந்துகொள்ளும் ஆர்வம், முன்முடிவுகளைத் தவிர்த்தல், கற்பனை செய்தல் இவை போன்றவை ஆக்கச் சிந்தனையை வெளிப்படுத்தத் தேவையான தன்மைகள் என்று எடுத்துரைத்தார் எழில்.

இதே ஒன்பது புள்ளிகளை வேறுமாதிரியும் இணைக்கலாமா? என்று வினவினான் அழகன். இணைத்துக்காட்டு என்றார் எழில். அழகன் பின்வருமாறு இணைத்துக் காட்டினான்:

விடையை மற்றவர்கள் வியந்து பார்த்துக் கைதட்டினர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இவ்வாறுதான் இணைத்திருக்கிறார்கள் என்றார் எழில்.

ஆக்கச் சிந்தனையின் ஊற்று

ஏன் இக்கோடுகளை வேறுமாதிரி இணைக்கலாமா என்ற வினா எழுந்தது அழகன்? என்று கேட்டாள் மணிமேகலை. தெரியவில்லை என்பதற்கு அடையாளமாக உதட்டைப் பிதுக்கி இரண்டு கைகளின் விரல்களையும் திருப்பிக் காட்டினான் அழகன். அவ்வாறு வினா எழுவதற்கு அறியுமார்வம் (Curiosity) என்று பெயர். அந்த ஆர்வந்தான் ஆக்கச் சிந்தனையின் ஊற்று என்று விளக்கினார் எழில்.

இந்த அறியுமார்வம் எங்களிடம் இல்லையோ என்றான் சுடர். உங்களிடமும் இருக்கிறது. அதனால்தான், ஆக்கச்சிந்தனையின் வகைமாதிரிகள் ஒவ்வொன்றையும் எண்ணிப்பார்த்து, இதுதான் ஆக்கச்சிந்தனையா? என்று வினவினீர்கள் என்று தெளிவுபடுத்தினார் எழில்.

ஆக்கச்சிந்தனையை எவையெல்லாம் தடை செய்கின்றன? என்று வினவினாள் இளவேனில். இதுவே போதும் எனத் திருப்தியடைதல்,’ ‘ஐயோ, சிக்கல்’ என விலகிச்செல்லல், ‘என்னால் முடியாது’ என்கிற எண்ணம், ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்’ என்னும் தயக்கம், ‘இது சிறுபிள்ளைத்தனம்’ என்னும் சலிப்பு, ‘தவறு நிகழ்ந்துவிடுமோ’ என்னும் அச்சம் ஆகியன போன்றவையே ஆக்கச் சிந்தனைக்குத் தடையாக இருக்கின்றன என்றார் எழில். சுருங்கச்சொன்னால், ‘இப்படிச் செய்தால் அல்லது இருந்தால் என்ன?’ என்னும் வினாவே ஆக்கச் சிந்தனைக்கு அடிப்படை என்றார்.

ஏன் இப்படி இருக்கிறது என வினவினால்? என்று வினவினான் கண்மணி. அதற்கு ஆய்வுச்சிந்தனை எனப் பெயர் என்றார் எழில்.

(தொடரும்)

கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்

தொடர்புக்கு: ariaravelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in