

நாளிதழ்கள், பருவ இதழ்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள், ஆன்லைன் செய்தி ஊடகங்கள் என நம்மைச் சுற்றி செய்திகளை வாரி வழங்கும் தகவல் யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். படிப்பு முதல் வேலைவாய்ப்புவரை சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத இந்த துறையில் வேலைவாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை.
கலை அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., அல்லது பி.எஸ்சி., என பட்டப்படிப்பாக மட்டுமன்றி, பல்கலைக்கழகங்கள் நேரடியாக வழங்கும் டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளும் மாஸ் கம்யூனிகேஷன் துறையில் உள்ளன. இதர பட்டப்படிப்புகள் முடித்தவர்களும் கூடுதல் தகுதியாக மாஸ் கம்யூனிகேஷன் சார்ந்த டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்ளலாம்.
பிளஸ் 2-ல் எந்தப் பாடம் படித்தவர்களும் கலை அறிவியல் கல்லூரிகளின் மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளை மேற்கொள்ளலாம். பல்வேறு பல்கலைக்கழகங்கள் வேறுபட்ட பாடத்திட்டங்களையும், சிறப்புப் பாடங்களையும் வழங்குகின்றன. சில முன்னணி கல்வி நிறுவனங்கள் நுழைவுத்தேர்வு வாயிலாகவும் சேர்க்கை மேற்கொள்கின்றன.
வேலைவாய்ப்புக்கான துறைகள்
வளர்ந்து வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகளில் மட்டுமன்றி இணையதளங்கள் வாயிலாகவும் புதிய தலைமுறையினருக்கான ஊடகங்கள் பெருகி உள்ளன. நேரடியாக இந்த ஊடகங்களில் சேர்ந்து பணியாற்றுவதற்கு இணையாக, அந்த ஊடகங்கள் செயல்படும் தொழில்நுட்ப துறை சார்ந்தும் பணியாற்ற வாய்ப்புள்ளன.
இவை தவிர்த்து சினிமா, தொலைக்காட்சி, விளம்பர உலகம் போன்ற கலைத்துறைகளில் சேரலாம். பண்பலை வானொலிகள், மக்கள் தொடர்பாளர்கள், சமூக ஊடகத் துறை பொறுப்பாளர்கள் என நாளுக்குநாள் புதிய பணி வாய்ப்புகள் பெருகி வருகின்றன.
‘மாஸான’ படிப்புகள்
மாஸ் கம்யூனிகேஷனில் பெரும்பாலானோரின் தேர்வு பி.ஏ., படிப்பாக உள்ளது. கூடுதலாக அறிவியல் வழிமுறைகளிலான சிறப்புப் பாடங்களுடன் பி.எஸ்சி., பட்டப்படிப்பு உள்ளது. இவற்றுக்கு அப்பால் டிசைனிங், நுண்கலை சார்ந்தும் பரவலான பட்டம், பட்டய, சான்றிதழ் படிப்புகள் உள்ளன. மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளை பொறுத்தளவில் வழக்கமான கலை அறிவியல் கல்லூரிகளை விட அதற்கென செயல்படும் உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்தும் படிக்கலாம்.
உதாரணமாக, புனேயில் இயங்கும் எஸ்சிஎம்சி கல்வி மையம் (scmc.edu.in/) ‘மாஸ் கம்யூனிகேஷன் இன் ஜர்னலிசம் இன்ப்ரிண்ட், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்’ என்ற இளங்கலைப் பட்டப்படிப்பை வழங்குகிறது. டெல்லி ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த திட்டமாக தருகிறது. டெல்லி குருகோபிந்த் சிங் பல்கலைக்கழகம் (ipu.ac.in/) ஜர்னலிசம் அண்ட்மாஸ் கம்யூனிகேஷன் படிப்பினை வழங்குகிறது.
இவை தவிர்த்து பிரபல ஊடக நிறுவனங்களின் பிரத்யேக உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்தும் படிக்கலாம். இவை பெரும்பாலும் முதுநிலை பட்டயப் படிப்புகளை வழங்கி வருகின்றன. இந்தியா டுடே (indiatoday.intoday.in/itmi/) ‘மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் பிராட்காஸ்டிங்’ முதுநிலை பட்டயப் படிப்புகளை வழங்குகின்றது. இதைப்போன்று எக்ஸ்பிரஸ் (exims.in/), என்டீடிவி உள்ளிட்ட ஊடக நிறுவனங்களும் முதுநிலை பட்டயப் படிப்புகளை வழங்குகின்றன.
திரைத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் ஆர்வமுள்ளோர் அதற்கான தொழில்நுட்ப படிப்புகளில் சேரலாம். அனிமேஷன் மற்றும் டிசைனிங் தொடர்பான படிப்புகளை ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்’ (nid.edu/index.html) நிறுவனத்தின் அகமதாபாத் மற்றும் பெங்களூரு மையங்கள் வழங்குகின்றன.
புனே ‘எம்.ஐ.டி ஸ்கூல் ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் நிறுவனம்’ (mitsft.in/) ஃபிலிம் மேக்கிங் பட்டப் படிப்பையும், மும்பை பல்கலைக்கழகம் (mu.ac.in/portal/) பி.ஏ., ‘ஃபிலிம், டெலிவிஷன் அண்ட் நியூ மீடியா புரொடக்ஷன்’ படிப்பையும், கொல்கத்தா செயிண்ட் சேவியர்ஸ் ‘மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் வீடியோகிராபி’ பி.எஸ்சி., ஹானர்ஸ் படிப்பையும் வழங்குகின்றன. சென்னை எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கலைத்துறைக்கான படைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுக்கான பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்குகிறது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com