

இந்திய மாநிலங்களில் பரப்பளவில் மிகப் பெரியது எது? தமிழ்நாடு? ஆந்திரா? மகாராஷ்டிரா?
இவை எல்லாம் இல்லை. ‘க்ளூ’ தரட்டுமா? வடமேற்குல இருக்கு. இதனை ஒட்டி பாகிஸ்தான் எல்லை தொடங்குது. பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்த மாநிலம். இப்ப கண்டுபிடிச்சிருக்கணுமே… சரி, தார் பாலைவனம்.
ஆமாம் ராஜஸ்தான். இந்தியாவுலயே அதுதான் பெரிய மாநிலம். இதன் தலைநகரம், ஜெய்ப்பூர். இதனை பிங்க் நகரம்னும் சொல்லுவாங்க. இங்கேதான் ஹவாய் மாகால் என்கிற கட்டிடம் இருக்கு. இந்தியில ‘ஹவாய்’னா காற்று. மகால்னா கட்டிடம். கட்டிட சுவர்ல ஜன்னல் போன்ற திறப்புகள் நிறைய இருக்கு. இது வழியா எப்பவும் நல்ல காற்றோட்டம் இருக்கறதால இது காற்றுக் கட்டிடம் ஆச்சு. நாம கூட இதை நம்ம வீட்டுல முயற்சி செஞ்சு பார்க்கலாம் இல்லையா?
ராஜஸ்தான் மாநிலம் பற்றி நாம தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு செய்தி இதன் மேற்கு, வட மேற்கு எல்லைகள் பாகிஸ்தான் நாட்டை ஒட்டி உள்ளன. இந்தப் பகுதியில்தான் சட்லெஜ் ஆறு பாய்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் சிதைந்த மிச்சங்கள் இந்த மாநிலத்தில் காளிபங்கன், பலாதல் ஆகிய இடங்களில் காணக் கிடைக்கின்றன.
850 கி.மீ. நீளும் ஆரவல்லி மலைத் தொடர், அதன் மீதுமவுண்ட் அபு எனும் மலைவாச ஸ்தலம் உள்ளது. இந்த மண்டலத்தில் தேக்கு மற்றும் உலர்ந்த இலை மரங்கள் அதிகம் கொண்ட காடுகள் உள்ளன. கங்கை நதியின்கிளை ஆறுகளான பனஸ், சம்பல் ஆறுகள் இம்மாநிலத்தின், கிழக்கு தென்கிழக்குப் பகுதியில் வளம் சேர்க்கின்றன.
பாலை உருவானது எப்படி?
அடுத்து தார் பாலைவனம் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில்,பாகிஸ்தானுக்கு உள்ளும் நீண்டு செல்கிறது தார் பாலைவனம். தென்மேற்குப் பருவமழை செல்லும் பாதைக்கு இணைகோட்டில் ஆரவல்லி மலைத் தொடர் இருப்பதால், அதன் மறுபக்கம், மழை மறைவுப் பகுதியாகி விட்டது. ஆண்டுக்கு 40 செ.மீ.க்கும் குறைவான மழையே பெய்கிறது. அதனால் உண்டானது பாலைப் பகுதி. இங்கே, கோடை, குளிர் இரண்டுமே கடுமையாக இருக்கும்.
இந்த மண்டலத்தில் உள்ள பெரிய நகரம் ஜோத்பூர். இந்த நகரில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே, விமானப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆறுகள் பொதுவாக கடலில் கலக்கும். ஆனால், இங்குள்ள கக்கார் நதி, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, தார் பாலைவனத்தின் ஒரு மூலையில் மணலில் மறைந்து போகிறது. ஒரு காலத்தில், இந்த நதியின் கரையில்தான் சிந்து சமவெளி நாகரிகம் தழைத்து விளங்கியது.
தார் பாலைவனம், இந்தியா – பாகிஸ்தான் இடையே சிறந்த பாதுகாப்பு மண்டலமாக இருந்து நம்மைக் காக்கிறது. 2 லட்சம் சதுர கி.மீ. அளவுக்குப் பரந்துள்ள தார் பாலைவனம், நமக்கு வேண்டுமானால் பெரியதாக இருக்கலாம். பரப்பளவில் இது உலகின் 20-வது இடத்தில் உள்ளது. ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனம் 92 லட்சம் ச.கி.மீ. பரப்பளவுடன் உலகின் மிகப் பெரிய வறண்ட பாலைவனம் ஆகும். துருவப் பாலைவனமான அண்டார்டிகா 142லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் முதலிடத்தில் உள்ளது.
இனி… உத்திரப் பிரதேசம்!
இந்த வாரக் கேள்வி:
பாலைவனங்களை சோலை நிலங்களாக மாற்றுவதில் உள்ள தீமைகள் என்ன?
(வளரும்)
கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com