

அபுதாபியில் ஆரம்பித்து கேரளாவின் பல்வேறு பள்ளிகளில் மாறி, மாறிப் படித்தவர் குடிமைப்பணி தேர்வின் முதல் முயற்சியில் ஐஏஎஸ் பெற்றுள்ளார் ஸ்ரீலட்சுமி. பியூஎம்எஸ் பட்டதாரியான அவர் 2017 பேட்ச்சின் அதிகாரியாகி உத்தரப்பிரதேசம் மீர்சாபூரின் முதன்மை வளர்ச்சி அதிகாரியாக உள்ளார்.
கேரளாவின் திருச்சூரிலுள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்த பொறியாளர் தம்பதி வி.எஸ்.ஷாஜி, வீணா ஷாஜி. இவர்களுக்கு மகள் ஸ்ரீலஷ்மி, மகன் கிருஷ்ண தேவ் என இரண்டு பிள்ளைகள். பெற்றோர் வெளிநாட்டின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதால், பிள்ளைகள் இருவருமே ஐக்கிய அரபி அமிரகத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் கேரளாவில் உள்ள பல தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் மாறி, மாறி பயின்றுள்ளனர். இதில், ஆங்கிலவழி சிபிஎஸ்இ கல்வி முறையில் பயின்ற ஸ்ரீலட்சுமி, ப்ளஸ் 2வில் முதல் குரூப் முடித்தார். 10, பிளஸ் 2 வகுப்புகளில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார்.
தாத்தா காட்டிய வழி
கேரளாவின் பிரபல கோட்டக்கல்லில் விபிஎஸ்.வேரியர் ஆயுர்வேதிக் கல்லூரியில் பிஏஎம்எஸ் 4 வருடம் பயின்று 2009-ல்முடித்தார். பிறகு, பாலக்காட்டின் அஹல்யா ஆயுர்வேதிக் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியானார். இதனிடையில், கட்டிடப் பொறியாளரான பினு.சி.ஜே என்பவருடன் 2012-ல் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தம் மூத்த மகனுக்கு 2 வயது இருக்கும் போது, குடிமைப்பணி தேர்வு எழுத 2015-ல் முடிவு செய்தார் ஸ்ரீலட்சுமி. தன் மருத்துப் பணியை ராஜினாமா செய்தவர், யூபிஎஸ்சி எழுதுவதற்காக முயற்சியில் இறங்கினார். முதல் முயற்சியிலேயே அவருக்கு ஐஏஎஸ் கிடைத்தது. இதில், 2017-ம் ஆண்டு பேட்ச்சின் உபி அதிகாரியானார் லட்சுமி.
இது குறித்த நினைவுகளை அதிகாரி ஸ்ரீலட்சுமி பகிர்ந்தபோது, “பல்வேறு பள்ளிகள் மாறினாலும் அதன் தாக்கம் ஒரு குறையாக எனக்கிருந்ததில்லை. ஏனெனில் எத்தனை பள்ளி மாறினாலும் பாடங்களை படிக்க ஒரு வரைபடம் போட்டு திட்டமிட்டு பின்பற்றி வந்தேன். இதேமுறையை யூபிஎஸ்சிக்கு படிக்கவும் பின்பற்றினேன். தொடக்கத்தில் ஆயுர்வேத மருத்துவராக விரும்பி அதை பெற்றேன். பிறகு, குடிமைப்பணி பெறும் உந்துதல் ஏற்பட்டு யூபிஎஸ்சி தேர்வு எழுத முடிவு செய்தேன். இதில் வெற்றி கனியை பறிக்க கணவரும் அவரது குடும்பத்தாரும் பெரிதும் உதவினர்” என்றார்.
குடிமைப்பணி தேர்வு குறித்த அறிமுகம் ஸ்ரீலட்சுமிக்கு அவரது ஒன்றுவிட்ட தாத்தாவான ஐஆர்எஸ் அதிகாரி ஏ.ஆர்.சங்கர் நாராயண் மூலமாக இளம் வயதிலேயே கிடைத்தது. ஸ்ரீலட்சுமி தாயாரின் தாய்மாமாவான அவர், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றினார்.
ஓய்விற்கு பின் பேத்தி ஸ்ரீலட்சுமியிடம் தொடர்ந்து குடிமைப்பணி பற்றி எடுத்துக் கூறி வந்துள்ளார். இவ்வாறு ஊக்கம் பெற்ற ஸ்ரீலட்சுமி டெல்லியில் வாஜிராம் அண்ட் ரவியில் பயிற்சி பெற்றார். அப்போது கூடுதல் மதிப்பெண் பெறும் பாடமாகவும், தன் தாய்மொழியாகவும் இருந்தமையால் மலையாள இலக்கியம், ஸ்ரீலட்சுமியின் விருப்பப்பாடமானது.
மருத்துவரும் அதிகாரி ஆகலாம்!
தனது வெற்றிக்கான சூத்திரம் பற்றி ஸ்ரீலட்சுமி கூறுகையில், “பள்ளிக் கல்வியில் படித்த என்சிஆர்டி பாட நூல்கள் யூபிஎஸ்சி தேர்வின் அடிப்படையாக இருந்தன. பள்ளியில் நன்கு புரிந்துகொண்டு படித்தது வெற்றிக்கு அடித்தளமானது. பணி செய்தபடி யூபிஎஸ்சி எழுதுவது கடினம் என்பதால் ராஜினாமா செய்தேன். இத்தேர்வுக்கு முறையாக தயாராக டெல்லியில் பயிற்சி பெற்றேன்.
இருப்பினும் இந்தப் பயிற்சி ஓரளவுதான் உதவும். மீதப் பாடங்களை நாம் தான் படிக்க வேண்டும் என்பதால், அதை நன்கு திட்டமிட்டு படித்தேன். திருப்புதலுக்கு போதுமான நேரம் ஒதுக்கி திட்டமிட்டு படித்தேன். பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்முகத் தேர்விற்காக பல மாதிரி பயிற்சி தேர்வுகளையும் எழுதிப் பழகினேன். கடந்த 10 வருடங்களுக்கான வினாத்தாள்கள் இதில் இடம் பெற்றிருந்தது வெற்றிக்கான காரணமானது” என்றார்.
உயிர்காக்கும் மருத்துவப் பணியில் இணைந்த பிறகு அதை விடுத்து குடிமைப்பணி வந்ததை இழப்பாக ஸ்ரீலட்சுமி கருதவில்லை. மாறாக, மருத்துவக் கல்விக்கு பின் ஐஏஎஸ் அதிகாரியனது பொதுமக்களுக்கு அதிக பலனை தர முடியும் எனக் கருதுகிறார். இக்கல்வியால் பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் மீது, கூடுதல் கவனம் செலுத்துகிறார் ஸ்ரீலட்சுமி. உபியில் முதல் பணியாக பதேபூரில் பயிற்சி அதிகாரியாக இருந்தார். 3 மாத பயிற்சியுடனான பணி காலத்தில், மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையின் உதவி செயலாளராகவும் செயலாற்றினார். பிறகு 2 வருடங்கள் கான்பூரில் இணை ஆட்சியராக இருந்துள்ளார்.
உபி அரசு அதிகாரியான பின் தனது மருத்துவ சேவையில் கவனம் செலுத்த அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. என்றாலும், மருத்துவம், சுற்றுச்சூழல், சுயதொழில் பயிற்சி போன்ற பிரிவுகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். குடிமைப்பணி தேர்வெழுதி அதில் வெல்ல திருமணம் ஒரு தடையல்ல என ஸ்ரீலட்சுமி நிரூபித்திருப்பது பாராட்டுக்குரியது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in