

தொலைதூரக் கல்வியில் பல பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டிருந்தாலும், இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள் மிக முக்கியமானவை. வேலை வாய்ப்பினை மையப்படுத்தியே அனைத்து பாடத்திட்டங்களும் இந்த பல்கலைக்கழகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில் படிக்கும் மாணவர்கள் பாடத்திட்டங்களை எளிதில் புரிந்து கொள்வதற்காக பல்வேறு ஊடகங்களின் ஊடாக அவர்களை நாடி வருகிறது இக்னோ. அதில் ஒன்றுதான் ஞாந்திரா (Gyandhara). ஞாந்திரா என்பது இக்னோ வழங்கும் இணையம் ஊடாக குரல் வழி ஆலோசனை சேவையாகும். மாணவர்கள் அன்றையதலைப்பில் ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களின் நேரடி விவாதங்களை இதில் கேட்கலாம். மேலும் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் அரட்டை (Chat) முறை மூலம் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
அரட்டை வசதி உண்டு
நேரலை அமர்வுகள் இல்லாதபோது, ஞானவாணி டெல்லி, இந்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும். ஞாந்திரா உலகில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இணையம் வழியாகக் கிடைக்கிறது. ஞானவாணி மூலம் ஒலிபரப்பப்படும் முக்கியமான நிகழ்ச்சிகள் ஞாந்திரா ஊடாக அனைத்து ஞானவாணி நிலையங்களாலும் ஒலிபரப்பப்பட்டு வந்தது. ஆனால், சமீப காலமாக இந்த நிலையங்கள் மூடப்பட்டதால், இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையம் மற்றும் கைப்பேசி செயலிகளின் ஊடாகவே ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
இதுதவிர மாணவர்களின் நலனுக்காக 21 வானொலி ஆலோசனை மையங்களை (Interactive Radio Counselling - IRC) இக்னோ நடத்திவருகிறது. STRIDE, RSD மற்றும் IGNOU போன்ற பிரிவுகளின் பங்கேற்புடன் தினமும் திட்டமிடப்பட்டு, ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு இரண்டு நேரலை அமர்வுகள், ஒவ்வொரு நாளும் சமுதாய வானொலிகள் மூலமாகவும், கியாந்தரா மூலமாகவும் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 5:30 முதல் இரவு 7:30 வரை மீண்டும் ஒலிபரப்பப்படுகின்றன. கூடுதலாக, ஒவ்வொரு வியாழக்கிழமையும், மாலை 4-5 மணிக்கு மாணவர் ஆதரவு சேவைகளுக்காக ஒரு சிறப்பு வானொலி ஆலோசனை மையத்தின் அமர்வு நடத்தப்படுகிறது.
அன்றைய தலைப்பில் ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களின் நேரடி விவாதங்களை மாணவர்கள் இதில் கேட்கலாம் மற்றும் அவர்களுடன் தொலைப்பேசி, மின்னஞ்சல் அல்லது கியான் தாராவில் அரட்டை முறைமூலமும் தொடர்பு கொள்ளலாம். இந்தியாமுழுவதும் கல்வி ஒலிபரப்பிற்காக மட்டுமேபிரத்தியேகமாகத் தொடங்கப்பட்ட வானொலியாக ஞானவாணியைக் கூறலாம்.
500 நேயர்கள்
தொடங்கப்பட்ட புதிதில் தமிழகத்தில் நான்கு வானொலி நிலையங்கள் முறையே சென்னை, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் செயல்பட்டு வந்தது. அதில் கோவை நிலையமும், திருநெல்வேலி நிலையமும், பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டன. நேயர் சந்திப்புகளை நெல்லை நிலையம் நடத்தியது. அதில் 500-க்கும் மேற்பட்ட நேயர்கள் வந்து கலந்து கொண்டது ஒரு சாதனை என்றே கூறலாம்.
நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்து இயங்கும் கல்வி பண்பலை வானொலிகளின் வலையமைப்பாக 2001-ல் இந்தஞானவாணி உருவாக்கப்பட்டது. கற்பித்தல்-கற்றல் செயல்முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஒவ்வொரு ஞானவாணி நிலையமும் சுமார் 60 கி.மீ. சுற்றளவில் உள்ள நேயர்களைச் சென்றடைந்தது. இதனால் அருகிலுள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களும் பயன்பெற்றனர்.
மக்களின் உள்ளூர் கல்வி, வளர்ச்சி மற்றும் சமூக-கலாச்சார தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய பணியை ஞானவாணி செயல்படுத்தியது. ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி, வயது வந்தோர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி, உயர்கல்வி, தொலைதூரக் கல்வி மற்றும் விரிவாக்கக் கல்வி போன்றவற்றின் ஒட்டுமொத்த உள்ளடக்கமாக நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. மாணவர்கள் ஆசிரியர்களுடன் தொடர்புகொள்வதற்கு ஞானவாணி வழிவகை செய்ததது. கல்வி ஆலோசகர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். நேரடி தொலைப்பேசி வழி நிகழ்ச்சிகள் ஊடாக பல நேயர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொண்டனர். உண்மையிலேயே ஞானவாணி இந்தியாவில் ஒரு முன்மாதிரி வானொலி.(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்புக்கு: bbcsakthi@gmail.com