

சொந்த வீடு என்பது பெரும்பாலானோரின் வாழ்நாள் கனவு. மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்றான இருப்பிடம், அதாவது வீடு என்பது ஒரு நிரந்தமான சொத்து. எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அழியாத, அசையாத சொத்து. அதனால்தான் முன்னோர்கள் மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
நிலத்தில் முதலீடு செய்தால் அதன் மதிப்பு காலத்திற்கேற்றவாறு உயர்ந்து கொண்டே செல்லும். எனவே வாடகை வீட்டில் அல்லல்படும் ஏழை, நடுத்தர வகுப்பினருக்கு வீடு ஒரு நல்ல முதலீடு. 6 மாதத்திற்குள் அதன் மதிப்பு கணிசமாக அதிகரிக்கும். இந்த முதலீட்டுக்கு ஆபத்தும் மிகக் குறைவு. நிலத்தின் விலைவாசி ஏற்றம், ரியல் எஸ்டேட் வீழ்ச்சி, வீட்டின் மூலம் வரும் வருமானம் குறைவு, செலவினம் அதிகம் என பல காரணங்களை அடுக்கினாலும், சமூகத்திலும் குடும்பத்திலும் ஒரு வீட்டுக்கு இருக்கும் மதிப்பு அவற்றைவிட உயர்வானது.
கனவு காணுங்கள்
உங்களுக்கு பிடித்தமான சொந்த வீட்டை இப்போதே கனவு காணுங்கள். அதனை வடிவமைக்க தொடங்குங்கள். அத்துடன் உங்களின் நிதி குறிக்கோளில் அதனை சேருங்கள். கனவு வீட்டை அடைய கால அளவை நிர்ணயித்து கொள்ளுங்கள். நிதி குறிக்கோளை முறையாக வகுத்து, நிதி ஒழுக்கத்தை பின்பற்றினால் வேலைக்கு சென்ற 5-வது ஆண்டிலே சொந்த வீட்டை அடைந்துவிட முடியும்.
அரசின் வீட்டு வசதி திட்டங்கள்
`அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்திருக்கின்றன. வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் வகுப்பினர் அந்த திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம், முதல்வரின் பசுமை வீடு திட்டம் ஆகியவற்றின் மூலம் ரூ.1.8 லட்சம் முதல் ரூ. 3 லட்சம்வரை மானியமாக பெறலாம்.
வீட்டு கடன் எவ்வளவு வாங்கலாம்?
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீட்டுக் கடன் (6.5%) வட்டி விகிதமும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் 90%-க்கும் அதிகமானோர் தங்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். வீட்டுக் கடனுக்கு கட்டும் வட்டிக்கு பிரிவு 24-ன் கீழ் ரூ.2 லட்சம் வரையும், அசலுக்கு பிரிவு 80சியின்கீழ் ரூ.1.5 லட்சம் வரையும் வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது.
வீட்டு வாங்குவதற்கோ, கட்டுவதற்கு 100% கடனாக வாங்குவது சரியான முடிவாக இருக்காது. ஏனென்றால் வங்கியில் ரூ.50 லட்சம் கடன் வாங்கினால் 20 வருடங்களில் நாம் கட்டும் வட்டியே இன்னொரு ரூ.50 லட்சத்தை கடந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே வீடு வாங்க செலவிடும் மொத்த தொகையில் குறைந்தபட்சம் 50% தொகையை முதலில் சேமித்து வைக்க வேண்டும். 50% தொகையை மட்டும் கடன் மூலம் வாங்கினால், மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணையை எளிதில் சமாளிக்க முடியும்.
பெண்களுக்கு முன்னுரிமை
வீட்டுக் கடன் பெறும்போது இல்லத்தரசியின் பெயரிலோ, இணை உரிமையாளராகவோ (co-owner) சேர்த்து வாங்கினாலோ பல சலுகைகள் கிடைக்கிறது. குறைந்த வட்டிவிகிதம், குறைந்த மாதாந்திர தவணைஉள்ளிட்டவற்றை வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இதுதவிர முத்திரை வரி, சொத்து ஆவணங்களின் பதிவு கட்டணம் ஆகியவற்றிலும் 6% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இணை உரிமையாளராக இருந்தால் கணவன், மனைவி இருவரும் ரூ.2 லட்சம்வரை வரி விலக்கு கோர முடியும்.
ஏல வீடுகளை கவனியுங்கள்
நியாய விலைக்கு வீடு வாங்க நினைப்பவர்கள் வங்கிகள் ஏலம் விடும் வீடுகளை பரிசீலிக்கலாம். கடன் செலுத்த முடியாமல் ஜப்தி செய்யப்பட்ட வீடுகளை வங்கிகள் சந்தை மதிப்பை காட்டிலும், குறைந்த விலைக்கு ஏலம் மூலம் விற்பனை செய்கின்றன. இந்த வீடுகளை வறுமை கோட்டுக்குக்கீழே இருப்பவர்களுக்கும், பெண்களுக்கும், சொந்த வீடு இல்லாதவர்களுக்கும் விற்பதில் வங்கிகள் முன்னுரிமை வழங்குகிறது. இத்தகைய ஏல விற்பனைகள் வங்கிகளுக்கும், வீடுகளை வாங்குவோருக்கும் லாபகரமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனாலே ஒரு முறை ஏலத்தில் பங்கேற்று சொத்து வாங்கியவர்கள் மீண்டும் ஏல விற்பனையைத் தேடி சென்று வாங்குவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in