

ஊடகங்களில் அயல்நாட்டு விண்வெளி வீரர்களை பார்க்கும்போது, விண்வெளி வீரர் ஆகும் கனவு உங்களுக்குள் முளைக்கக் கூடும். விண்வெளி வீரராக என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் விண்வெளி பயணத்திற்கு விமானப்படை விமானிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர், ராகேஷ் ஷர்மாவும் இந்திய விமானப்படை விமானியாக இருந்து, விண்வெளி வீரராக தேர்வானவர்தான்.
இஸ்ரோ செலுத்த இருக்கும் ககன்யான்- 3 இந்திய விண்வெளி வீரர்களை சுமந்து பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் சில நாட்கள் சுற்றுப்பாதையில் சுற்றி பிறகு பாராசூட் உதவியுடன் கடலில் இறங்கும். இந்திய விண்வெளி வீரர்கள் வியோமனாட் (Vyomanaut) எனக் குறிப்பிடப்படுகிறார்கள். வியோமன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு வானம் என்று அர்த்தம். இந்திய விமானப்படையின் விமானிகளில் தேர்வாகும் விமானிகளே ககன்யான்திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். தேர்வாகும் வீரர்களுக்கு பல கட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
உயிரியல் படித்தாலும் வாய்ப்புண்டு
அமெரிக்காவின் நாசாவில் போர் விமானிகள் மட்டுமின்றி பொறியியல், உயிரியல், இயற்பியல், கணினி அறிவியல், கணிதம் இவற்றில் பட்டம் பெற்று மூன்றாண்டு வேலை அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பித்து விண்வெளி வீரராக தேர்வாகலாம். தேர்வானவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்.
புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில் இயங்குவதற்கான பயிற்சியிலிருந்து நீச்சல் பயிற்சி வரை விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படும். கூடவே விண்கலத்தை இயக்குவதற்கான பயிற்சியும், விண்வெளியில் செய்ய வேண்டிய அறிவியல் பரிசோதனைகளுக்கான பயிற்சியும் வழங்கப்படும்.
இந்தியாவில் விண்வெளி பயணத்திற்கு விமானப்படை விமானிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள் எனில் எப்படி இந்திய விமானப்படையில் விமானியாவது?
போர்விமானியாக வழி
பிளஸ் 2 முடித்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது விமானி உரிமம் பெற்றவர்கள் என பல வழிகளில் போர் விமானியாகலாம்.
பிளஸ் 2-ல் இயற்பியல், கணித பாடங்களை படித்தவர்கள் தேசிய பாதுகாப்பு கல்விநிலையத்தில் (National Defence Academy - NDA) சேர்ந்து பயிற்சி பெற்று விமானியாகலாம். மத்திய பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission -UPSC) என்.டி.ஏ. நுழைவுத்தேர்வை நடத்துகிறது.
பிளஸ் 2-ல் இயற்பியல், கணித பாடங்களை படித்து பின்பு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்களும் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர்களும், யூபிஎஸ்சி நடத்தும் ‘கூட்டு பாதுகாப்புப் பணிகள் தேர்வை’ (Combine Defence Services Examination) எழுதி விமானிப்பணியில் சேரலாம்.
தேசிய சாரணர் படையில் – விமானப்படைப் பிரிவில் முதுநிலை பகுதி-சி சான்றிதழ் பெற்றவர்களுக்காகவும் வர்த்தக விமானி உரிமம் பெற்றவர்களுக்காகவும் சிறப்பு நுழைவுத்தேர்வு உண்டு. இந்தத் தேர்வை இந்திய விமானப்படை நடத்துகிறது.
அடுத்த வழி, விமானப்படை பொது நுழைவுத்தேர்வு (Airforce Common Admission Test- AFCAT). இந்தத் தேர்வையும் இந்திய விமானப்படை தான் நடத்துகிறது. இந்த இரண்டு தேர்வுகளையும் எழுத பிளஸ் 2-ல் இயற்பியல், கணித பாடங்களோடு ஏதேனும் ஒரு பட்டம் அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வருங்காலத்தில் விண்வெளி வீரராகி நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள்!
(கனவுகள் தொடரும்)
கட்டுரையாளர், ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com