

பள்ளி, கல்லூரியில் படிக்கும் பருவமென்பது உளவியல் ரீதியாக தங்களுக்கென ஒரு சுய அடையாளத்தை உருவாக்க முனையும் வயது. நண்பர்கள் வேண்டும், எதிர் பாலின தோழமை வேண்டும், நிறையப் பகிர வேண்டும், “நான் யார்?” என்ற அடையாளத்தை உருவாக்க வேண்டும், பல கேள்விகள், ஏகப்பட்ட குழப்பங்கள் இப்படி மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.
இதை புரிந்துகொண்டு நல்ல ஆலோசனை சொல்ல பெரியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆசிரியர்கள், பெற்றோர் மதிப்பெண்கள், ரேங்குகள் தவிர வேறு எதைப் பற்றியும் பேசமாட்டார்கள். இப்படிக் குழம்பிய மாணவர்கள் விடைதேடிச் செல்லும் இடம் ‘இணையம்’.
இணையத்தில், மாணவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று கேட்டால், பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதெல்லாம், “இண்டர்நெட்டில் எல்லாம் கெட்டது... அதில் டைம் வேஸ்ட் பன்றாங்க” என்ற ஒற்றை வரிதான்.
ஆனால், உண்மையில் இணையத்தில் இளைஞர்கள் தங்கள் சுயத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பல ஆயிரம் கால மனித சமூகத்தின் வரலாற்றில் குழந்தைகளின் சுய அடையாளத்தை உருவாக்குவதில் யார் தாக்கம்செலுத்தினார்கள்? குழுவாக ஆதிமனிதர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் அந்த சமூகமே பிள்ளைகளை வளர்த்தது. அந்த மக்கள் கூட்டம் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரின் சுயஅடையாளங்கள் உருவாகுவதில் தாக்கம்செலுத்தியது. பின்னாட்களில், மனிதர்கள் குழுவிலிருந்து பிரிந்து போக சமூகம் இருந்த இடத்தை புத்தகங்கள், பள்ளிகள்,வானொலி, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி எடுத்துக்கொண்டன.
கால சக்கரத்தில் சுழன்று டிஜிட்டல் யுகத்தில் இன்று சமூக வலைத்தளங்கள் அந்த வேலையை செய்து கொண்டிருக்கின்றன.
ஆனால், சமூக வலைத்தளங்கள் தாக்கம் செலுத்தி உருவாக்கும் சுய அடையாளத்தில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. சைபர் குற்றங்கள் நடைபெற மிக முக்கிய காரணம் இதுதான். சைபர் பாதுகாப்பில் உளவியல், தொழில்நுட்பம் சார்ந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை இனி வரும் நாட்களில் பார்ப்போம்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com