

தமிழ்நாடு அரசின் செக்காபட்டி, வத்தலகுண்டு அரசு பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் படித்த பொன்னம்பலம், குடிமைப்பணி தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆகியுள்ளார். தமிழ்வழிக்கல்வி ஒரு தடையல்ல எனக் கூறும் இவர், மேற்குவங்க மாநிலத்தின் 2012 பேட்ச் அதிகாரியாகி டார்ஜிலிங் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.
வத்தலகுண்டு அருகிலுள்ள செக்காபட்டியின் விவசாய தம்பதி, சோனைமுத்து-காளியம்மாள். இவர்களின் ஒரே மகன் பொன்னம்பலம், செக்காபட்டியின் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரையும், அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் படித்தார். வத்தலக்குண்டுவிலும் அரசு பள்ளியில் முதல் குரூப் எடுத்து பிளஸ்-2 வையும் முடித்துள்ளார்.
தமிழ்வழிக் கல்வியிலேயே படித்தவர் பிளஸ்-2-வில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்றார். பள்ளிக்கல்வி முதல் வகுப்பில் நடத்திய பாடங்களே போதுமானதாக இருந்துள்ளன. தேர்வுகளுக்கு சற்று முன்பாக பாடங்களை நினைவுகூரும் வகையில் படித்தவர் தொடர்ந்து முதல் மாணவராகவே திகழ்ந்துள்ளார்.
இத்தனைக்கும், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பொன்னம்பலம் அதிக முக்கியத்துவம் அளித்து விளையாடி வந்துள்ளார். இதன் பிறகும் அனைத்து வகுப்புகளிலும் முதல் ரேங்க் பெற்றமைக்கு காரணம், வகுப்புகளில் அதன் ஆசிரியர் கூறுவதை ஆர்வமாக கவனிப்பதுதான். கோவில்பட்டியின் நேஷனல் பொறியியல் கல்லூரியில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பி.இ 2006-இல் முடித்தார். கல்லூரியில், ஒரு சராசரி மாணவராகவே இருந்தவருக்கு ஆங்கிலவழிக்கல்வி, ஒரு சிக்கலாக இருக்கவில்லை.
இது குறித்து, ‘வெற்றிக்கொடி’ நாளேட்டிடம் தன் நினைவுகளை பகிர்ந்த அதிகாரி பொன்னம்பலம் கூறும்போது, ‘கல்லூரியில் வேலைக்கு தேர்வு செய்ய அதிகமாக ஐ.டி நிறுவனங்கள் வந்தது எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. இதற்கு மாற்றை தேடத் தொடங்கியபோது, ராணுவ அதிகாரியாக விரும்பினேன்.
இதற்கான கம்பைன்டு டிபன்ஸ் சர்வீசஸ் தேர்வு(சிடிஎஸ்) மற்றும் சர்வீசஸ் செலக்ஷன் போர்டு (எஸ்எஸ்பி) ஆகியவற்றின் அனைத்து பிரிவுகளில் ஏழு முறை எழுதியும் பலன் இல்லை. எனவே, குடிமைப்பணி தேர்வுகள் பற்றி அறிந்து அதை எழுத முடிவு செய்தேன். இதற்கு எனது பெற்றோர், நண்பர்களுடன், அரசு பள்ளி ஆசிரியர்களான மொக்கசாமி, ராஜாமணி, நாகராஜன் உள்ளிட்டோர் ஊக்குவித்ததும் காரணமானது.’ என்றார்.
குடிமைப்பணியுடன் எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி, வங்கி உள்ளிட்ட இதர அரசு, தனியார் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளையும் பொன்னம்பலம் எழுதியுள்ளார். 2007-இல் சென்னை அண்ணாநகரின் அரசு பயிற்சி நிலையத்திற்கான நுழைவுத்தேர்வில் தேர்வாகி இருந்தார். இது அவருக்கு குடிமைப்பணி தேர்வை எழுதுவதில் தீவிரம் காட்ட ஒரு திருப்புமுனையானது.
இதனால், சென்னைக்கு இடம் மாறி குடிமைப்பணி தேர்வை தொடர்ந்துள்ளார். 2009-ல் குடிமைப்பணிக்கான முதல் முயற்சியில் பிரிலிம்ஸில் மட்டுமே வெல்ல முடிந்தது. இடையில் சென்னையில் தனியார் வங்கியில் 2 மாதங்கள் மட்டும் பணி செய்துள்ளார். இதற்கு அவர் குடிமைப்பணி தேர்விற்கு தீவிரமாகப் படித்து எழுத முடிவு எடுத்தது காரணமானது.
முயற்சிகள் தோற்பதில்லை
தொடர்ந்து 2010-ல் இரண்டாவது முயற்சியிலும் அனைத்து தேர்வு எழுதியவருக்கு யூபிஎஸ்சியில் நேர்முகத்தேர்வு வரை சென்றார். அதிலும், எந்த பணியும் கிடைக்கவில்லை. எனினும், அதற்கும் முன் எழுதிய எஸ்எஸ்சி தேர்வினால், மத்திய பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் உதவி அலுவலர் பணி 2011-ல் கிடைத்தது.
உடனடியாக இதன் டெல்லி அலுவலகத்தில் இணைந்தவர் தன் யூபிஎஸ்சி முயற்சியை கைவிடவில்லை. பணியாற்றியபடி படித்து மூன்றாவதாக முயன்றவருக்கு 2012 இல் ஐஏஎஸ் கிடைத்தது. மேற்குவங்க மாநிலத்தின் 2012 ஆவது பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியானார் பொன்னம்பலம். இவருடன் மனைவி நிவேதிதா ராஜ், மகன் யுவின் மகள் ரித்தன்யா ஆகியோர் உள்ளனர்.
தனது வெற்றி குறித்து தொடர்ந்த அதிகாரி பொன்னம்பலம், ‘அரசு பயிற்சியில் இணைந்த பின் அங்கு குடிமைப்பணியில் சுமார் 200 பேர் காட்டிய தீவிரம் என்னை ஈர்த்தது. அவர்களது படிக்கும் முறை மற்றும் திறன் எனக்கு புதிதாக அறிந்து, நானும் அவர்களை போல் காட்டிய தீவிரத்திற்கு பலன் கிடைத்தது. இதற்கு நான் தமிழ்வழிக்கல்வியில் அரசு பள்ளியில் படித்தது ஒரு தடையாக இருக்கவில்லை.
விருப்பப்பாடங்களாக நான் வரலாறு, புவியியல் பாடங்களை எடுத்திருந்தேன். எனது வெற்றிக்காக நான் அதிகமாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவில்லை. அரசு பள்ளியின் காரணமாக சுயமாக மனப்பாடம்செய்யும் திறனும் உதவியது.’ என விவரித்தார்.
கரோனா சவால்
ஐஏஎஸ் அதிகாரியான பின் பொன்னம்பலத்திற்கு பயிற்சி அதிகாரியாக மேற்குவங்க மாநிலத்தின் மேற்கு மிட்னாபூர் கிடைத்தது. பிறகு சார்-ஆட்சியராக மால்டாவிவின் சான்சல், அவுராவின் உளுபேரியா ஆகிய இரண்டு இடங்களில் பணியாற்றினார். கூடுதல் ஆட்சியராக அலிபூர் துவாரில் பணிசெய்தார். சிலிகுரி, ஜல்பாய்குரி வளர்ச்சி ஆணையத்தின் ஆணையராகவும் பொன்னம்பலம் இருந்துள்ளார். தற்போது அம்மாநிலத்தின் முக்கிய சுற்றுலா மாவட்டமான டார்ஜிலிங்கில் ஆட்சியராக உள்ளார்.
இங்கு, ஏப்ரல் 2020-ல் பதவி ஏற்றது முதல் கரோனா பரவலை சமாளிப்பது அதிகாரி பொன்னம்பலத்திற்கு பெரிய சவாலாக இருந்தது. இப்பணியை தன் மாவட்டத்தில் தலைமையேற்று தீவிரமாக கரோனாவை அவர் எதிர்கொண்டார். இதையே தம் சாதனையாகக் கருதும் ஆட்சியர் பொன்னம்பலத்திற்கு, அம்மாநிலத்தின் பெங்காலி மொழிப் புலமையும் உள்ளது. அரசியல் விழிப்புணர்வு அதிகம் கொண்ட அம்மக்களிடம் சட்ட, திட்டங்களுக்கு அதிகமாகக் கட்டுப்படும் குணம், நிர்வாகம் செய்யவும் சாதகமாக உள்ளது.
தன்னை போல், பள்ளியின் முதல் மாணவர்களும், விளையாட்டுக்களில் அதிக கவனம் காட்டுபவர்களும் தம் திறமையை வீணாக்காமல், குடிமைப்பணி தேர்வு எழுத வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது. அரசு பள்ளிகளில் படித்தாலும் அவர்கள் தம் இளம்வயது முதலாகவே குறி வைத்தால் வெற்றி நிச்சயம் என கூறும் ஐஏஎஸ் பொன்னம்பலம் வாழ்த்துக்கு உரியவரே!
கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in