

பங்குச் சந்தையின் சரிவு, பண மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் முதலீட்டாளர்களின் பார்வை, உறுதியான லாபம் தரும் தங்கத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் தங்கத்தின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் அத்தியாவசிய தேவைக்காக கூட தங்கம் வாங்க முடிவதில்லை.
ஒரே சமயத்தில் மொத்தமாக பணம் சேர்த்து தங்கத்தை நகையாகவோ, நாணயமாகவோ வாங்குவது சிரமமான ஒன்று. எனவே கையில் இருக்கும் குறைந்த பணத்தைக் கொண்டு தங்கத்தை வாங்குவதற்கு சில அங்கீகரிக்கப்பட்ட மாற்று வழிகளும் இருக்கின்றன. அவை, தங்க இ.டி.எஃப். (Gold ETF), தங்கப் பத்திரம் (SGB), டிஜிட்டல் தங்கம் ஆகியவை ஆகும்.
பணத்தை பெருக்கும் முதலீட்டு நோக்கில் தங்கத்தை வாங்க நினைப்பவர்களுக்கு இவையே சிறந்த வழி. ஏனெனில் நகையாகவோ, நாணயமாகவோ வாங்கினால் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். அவற்றை லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருக்க செலவு செய்ய வேண்டும்.
குழந்தைகளின் திருமணத்திற்காக சேர்க்கும் நகைகளின் டிசைன் எதிர்காலத்தில் அவர்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதை விற்கும்போது சேதாரம், பழுது ஆகியவற்றால் நஷ்டம் ஏற்படும். அதேவேளையில் தங்கப் பத்திரம், தங்க இ.டி.எஃப்., டிஜிட்டல் தங்கமாக வாங்கினால் மேற்கூறிய பிரச்சினையெல்லாம் இல்லை. தேவைப்படும்போது விற்று, நகையாகவும் வாங்கி கொள்ள முடியும். ஆபரண தங்கத்தைப்போலவே, அவசரத் தேவைக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறவும் முடியும்.
ரூ.47-க்கு வாங்கலாம் தங்க இ.டி.எஃப்: தங்க இ.டி.எஃப்., Gold Exchange Traded Funds என்பது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தங்கத்தை வாங்கும் முறை. டீமேட் கணக்கு (வர்த்தகக் கணக்கு) ஆரம்பித்து அதன் வழியாகவே தங்கத்தை யூனிட்டாக வாங்க முடியும். குழந்தைகள் பெற்றோருடன் இணைந்து கூட்டுக் கணக்கு தொடங்கி தங்க இ.டி.எஃப்., வாங்கலாம்.
ஒரு இ.டி.எஃப்., யூனிட் என்பது 1 கிராம் தங்கத்தைக் குறிக்கிறது. ஒரு யூனிட்டின் தற்போதைய விலை 47 ரூபாய். இதை எப்போது வேண்டுமானாலும் வாங்கி, எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதற்கு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி போன்றவை இல்லை என்றாலும், ஸ்டாம்ப் செலவு, தரகர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
ரூ.1-க்கு கிடைக்கும் டிஜிட்டல் தங்கம்: ஃபோன் பே, கூகுள் பே, பேடிஎம் மூலமாக கூட இந்த டிஜிட்டல் தங்கத்தை (E-Gold) வாங்கலாம். இதில் குறைந்தபட்சமாக ரூ.1-க்கு கூட தங்கம் வாங்க முடியும். அதிகபட்ச உச்ச வரம்பாக ரூ.2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் 24 காரட் தரமான தங்கம் இந்தியா முழுவதுக்கும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் வாங்கப்படும் தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு பின் தங்கமாகவோ, பணமாகவோ அன்றைய தங்கத்தின் விலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். நாணயமாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
லாபம் தரும் தங்கப் பத்திரம்: தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond) இந்திய ரிசர்வ் வங்கியால் விற்கப்படுகிறது. எனவே 100 சதவீதம் உத்தரவாதமிக்கது. தங்க நகைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பத்திரங்களுக்கு, அரசு வட்டியும் வழங்குகிறது. ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியும் அளிக்கப்படுகிறது. பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த முதலீடாக தங்க பத்திரங்கள் விளங்குகிறது.
வங்கி, அஞ்சலகம் ஆகியவற்றில் இந்த பத்திரங்கள் கிடைக்கின்றன. இதில் ஒருவர் 1 கிராம் முதல் 4 கிலோ வரையிலான அளவுக்கு முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட பணமாக மாற்றிக் கொள்ளலாம். 8 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் முதிர்வு தொகைக்கு வரி விலக்கும் வழங்கப்படுகிறது.
இதில் 10 வயதுள்ள பெண் குழந்தையின் திருமணத்துக்காக தங்க பத்திரம் வாங்கினால், 18வது வயதின்போது அதன் மதிப்பு அன்றைய தங்கத்தின் விலைக்கு ஏற்ப உயர்ந்திருக்கும். கூடவே 2.5 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.
அதுவே, நகையாக வாங்கி சேமித்து இருந்தால் அந்த மதிப்பு இதற்கு இணையாக உயர்ந்திருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 21 சதவீதம் வரை கூடுதல் லாபம் கிடைத்திருக்கிறது. ஆக, தங்கத்தை நகையாக வாங்குவதை விட மாற்று வழியில் வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும்.
(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in