

ஒரு காலத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கல்வி ஒலிபரப்பினை இரவு நேரத்தில் கேட்பதற்காகவே காத்திருந்தவர்கள் பலர் இருந்தனர். அந்த அளவிற்கு அந்த அறிவிப்பு பாணியும், அந்த நிகழ்ச்சியின் தரமும் அமைந்து இருந்தது.
ஞாண் தர்ஷன் (ஜிடி) எனும் தொலைக்காட்சி அலைவரிசை இந்தியாவின் கல்வித் தொலைக்காட்சித் துறையில் ஒரு முக்கிய மைல்கல். இது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD), தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (I & B அமைச்சகம்), பிரசார் பாரதி மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் (IGNOU) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக 2000-ல் தொடங்கப்பட்டதாகும்.
24 மணிநேர சேவை: தொடக்கப் பள்ளி, ஆரம்ப, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள், கல்லூரி/பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் வாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களுக்கான கல்வி, இல்லத்தரசிகள் மற்றும் பணிபுரிந்து கொண்டே படிப்பவர்களுக்கும் வாய்ப்பினை 24 மணிநேர கல்வி தொலைக்காட்சியான ஞாண் தர்ஷன் வழங்குகிறது. இதற்கான பாடத்திட்டம் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.
இதுபோக தினமும் இரண்டு மணிநேர நேரடி அமர்வுகளையும் நடத்துகிறது. ஆசிரியர்கள் மற்றும் இக்னோ பிராந்திய மைய நிர்வாகிகள் மாணவர்களுடன் கல்வி மற்றும் நிர்வாக விஷயங்களில் தொடர்பு கொள்ள இது வழிவகை செய்கிறது.
சமீப காலமாக ஞாண் தர்ஷன் வெப்காஸ்டிங்கிலும் கிடைக்கிறது. இதனால் இக்னோ நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
இக்னோ வழங்கும் பாடங்கள் அனைத்தினையும் இந்த தொலைக்காட்சி ஊடாக இலவசமாகவே பார்க்க முடியும். இக்னோவில் சேர்ந்தால் மட்டுமே இதனைப்படிக்க முடியும் என்றில்லாமல், படிப்பில் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த தொலைக்காட்சியைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இக்னோவை பார்வையாளர்கள் எனும் இணையதளத்தில் காணலாம். இந்திய அரசின் அரசிதழ் அறிவிப்பின் படி ஞாண் தர்ஷன் அலைவரிசையை அனைத்து டி.டி.ஹெச்., இயக்குபவர்களும் கட்டாயம் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், பல தனியார் டி.டி.ஹெச்./கேபிள் இயக்குபவர்கள் தங்கள் கேபிள்களில் ஞாண் தர்ஷனை எடுத்துச் செல்கிறார்கள். மேலும் ஞாண் தர்ஷன் இப்போது சுயம் பிரபாவின் ஒரு பகுதியாகவும் உள்ளது மற்றும் MHRD சேனல் எண் 25 -ல் இதனைப் பார்க்கலாம்.
தமிழில் இதழியல்: இந்தியாவில் முதல் முறையாக சமுதாய வானொலியில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்காக ஒரு பாடத் திட்டத்தை வடிவமைத்து இக்னோ வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆண்டு முதல் முற்றிலும் தமிழ் மொழியிலேயே முதுகலை இதழியல் மற்றும் தொடர்பியல் படிப்பினைத் தொடங்கியுள்ளது. இதற்கான பாடபுத்தகங்களும் தயார் செய்யப்பட்டு இப்பொழுது வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளைப் பற்றி விபரங்களை shorturl.at/jvILU மற்றும் shorturl.at/djMOS எனும் இணைய தள முகவரிகளுக்கு சென்று அறிந்து கொள்ள முடியும்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com