

எதையாவது உண்ணத் தோன்றும் பைக்கா உணர்வு பற்றி கடந்த வாரம் தெரிந்து கொள்ளத் தொடங்கினோம். இத்தகைய உணர்வுடன் எப்போதும் சோர்வாகவே இருப்பது, பலவீனமாக உணர்வது, அடிக்கடி தலைச்சுற்றல் மற்றும் படபடப்பு ஏற்படுவது, கவனச்சிதறல் ஏற்படுவது, நெஞ்சு வலி அல்லது வயிற்று வலி ஏற்படுவது, தோல் மற்றும் முடி வறண்டு காணப்படுவது, மூச்சுத்திணறல் அல்லது கால்களில் வீக்கம் ஏற்படுவது போன்றவை ஒரு பெண்ணுக்கு இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை அதிகரித்து வருகிறது என்பதற்கான அறிகுறிகளாகும். மருத்துவ ஆலோசனைகளை உடனடியாகப் பெறுவதற்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக இந்த அறிகுறிகளுடன் பைக்கா உணர்வும் உள்ளவர்களுக்கு, மருத்துவர்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பரிசோதிப்புடன், தேவைப்படும் போது குடல் புழுக்களை அகற்றும் பூச்சி மாத்திரையும் (Albendazole) அதனுடன் இரும்புச்சத்து மருந்து, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் மருந்துகளையும் பரிந்துரைப்பார்கள். இவற்றுடன் உணவில் இரும்புச்சத்து நிறைந்த ஹீம் (Heme), நான்-ஹீம் (Non-Heme) என இரண்டு வகை உணவுகளை தொடர்ந்து உண்பதன் மூலம் ரத்தசோகையைக் குறைக்கலாம்.
பேரீச்சம்பழம், எள், அத்திப்பழம், கீரை வகைகள், பாதாம் மற்றும் முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகள், மாம்பழம், அன்னாசி, பப்பாளி போன்ற நான்-ஹீம் (Non-Heme) வகை உணவுகளை சைவ உணவாளர்களும், மீன், முட்டை, கோழி, மட்டன் போன்ற ஹீம் உணவை (Heme) சாப்பிடும் இறைச்சி உணவாளர்களும் உண்ணலாம். இதில் ஹீம் உணவு வகைகள், நான்-ஹீம் உணவைக் காட்டிலும் உடலுக்குள் சற்று அதிகம் நுகரப்படும்.
அறிகுறிகளும் உரிய உணவும்: இந்தியாவில் 56% பேருக்கு சத்து குறைபாட்டினால் ரத்த சோகை பாதிப்பு காணப்படுகிறது. அதுவும் பெண் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ‘அனீமியா முக்த் பாரத்' திட்டத்தின் மூலம் அயர்ன்-ஃபோலிக் மாத்திரைகளும், பூச்சி மருந்தும் அட்டவணைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டதும் பைக்கா உணர்வும் பெரும்பாலும் மறைந்துவிடும். ஆனால், ஒரு சிலரில் மட்டும் இது நீடிக்கவும் செய்கிறது.
அப்படி, மண் போன்ற பொருட்களை சாப்பிட விரும்புவோருக்கு தேநீர் மற்றும் கடற்பாசி நிறைந்த உணவுகளும், சோப்பு மற்றும் சலவைப்பொடி போன்ற பொருட்களை சாப்பிட விரும்புபவர்களுக்கு உலர்பழங்கள் மற்றும் அதுசேர்க்கப்பட்ட ஐஸ்கிரீம்களும், சுண்ணாம்பு சாம்பல் சாக்பீஸ் போன்றவற்றை உண்ண விரும்புவோருக்கு கால்சியம் மாத்திரைகள் அல்லது பெர்ரி பழங்களும், பெயிண்ட் பெட்ரோல் வாசனைகளை விரும்புவோருக்கு மசாலா மணம் நிறைந்த பொருட்களை உண்ணுதல் போன்றவற்றின் மூலம் அந்த உணர்வுகளைக் குறைக்க முயலலாம்.
ஆக, உண்ணுதல் கோளாறு ஒருவரிடம் காணப்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற்று, ஆரோக்கியமான உணவு, தேவைப்பட்டால் பரிந்துரைக்கப்படும் சத்துமருந்துகள் மூலமாக குணமடையலாம்.இங்கு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு கனிவான வேண்டுகோள். விளையாட்டுபோல உட்கொள்ளப்படும் சில கூர்மையான அல்லது நச்சுத்தன்மை உடைய பொருட்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், சமயத்தில் உயிருக்கே ஆபத்தாகக் கூட பைக்கா முடியலாம் என்பது நினைவிருக்கட்டும்.
இந்தக் குழந்தைகள் விழுங்கிய கண்ணாடித் துகள்கள், ஊசி, க்ளிப், முடி போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்துதான் சரிசெய்ய வேண்டியிருப்பதுடன், அதனால் விளையும் பக்கவிளைவுகளுக்கு தொடர் சிகிச்சைகளும் தேவைப்படுகிறது என்பதால் இதைக் கண்டவுடன் உடனடியாக இவர்கள் சிகிச்சையைப் பெறச் செய்யுங்கள்.
(ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com