

வாகனப்புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு பெருநகரங்களை மிகவும் பாதித்திருக்கிறது. மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவுகளும், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் உலகளாவிய கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் எரிபொருளுக்கான ஆய்வுகளும் சோதனை முயற்சிகளும் நிகழ்ந்து வருகின்றன. பெட்ரோலிய எரிபொருட்களுக்கு ஏற்பட்டுவரும் தட்டுப்பாடு, எரிபொருள் சாராத வாகன இயக்குநுட்பத்தை நோக்கி மனிதகுலத்தை மெல்ல நகர்த்துகிறது. சூரிய ஒளியில் இயங்கும் விமானங்கள் பல நாடுகளில் பறக்க ஆரம்பித்திருக்கின்றன. மின்சார வாகனங்கள் உள்ளூர் சாலைகளில் ஓட ஆரம்பித்துவிட்டன.
மின்வாகனங்கள்: இருசக்கர வாகனம், கார் முதலிய மின்வாகனங்களின் விற்பனை படிப்படியாக அதிகரிக்கும் போக்கு, எதிர்காலத்தில் மின்வாகனத் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் என்பது நிச்சயம். மாணவ,மாணவிகள் மின்வாகனத் துறையில் ஏற்படும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக் கொள்வது?
படிப்புகள்: மின்கலம் உள்ளிட்ட மின்சார சேமிப்புமுறைகள், புதிய மின்சேமிப்பு தொழில்நுட்பங்கள், வாகன வடிவமைப்பு, வாகன பாகங்கள் உற்பத்தி, வாகன ஆராய்ச்சி சோதனைகள், வாகனப் பராமரிப்பு, மின் உதிரிபாக பராமரிப்பு, வாகன மின்சக்தி கட்டுபாட்டு மென்பொருள், வாகன மின்னேற்ற மையங்கள் (Charging Centres),செயற்கை நுண்ணறிவு என பல நிலைகளில் எதிர்காலங்களில் மின்வாகனத் துறையில் வளர்ச்சி ஏற்படும். இந்த வாய்ப்புகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், உலோகவியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்கள் மின்வாகனத் துறையில் பயன்படும். மின் பொறியியல், மின்னணுப் பொறியியல், இயந்திரப் பொறியியல், கட்டுமான பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உலோகப் பொறியியல் உள்ளிட்ட பொறியியல் துறை படிப்புகளும் மின்வாகனத் துறையில் தடம்பதிக்கப் பயன்படும். வணிக மேலாண்மை படித்தவர்களும் வாகன விற்பனை, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம்.
வேலைவாய்ப்புகள்: மின்வாகனத் துறையில் பல இளைஞர்கள், யுவதிகள் துளிர் நிறுவனங்களை (Start Ups) தொடங்கி புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி சோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். புதிய சிந்தனையில் புதியதொழில்நுட்பங்களோடு நீங்களும் துளிர்நிறுவனங்களைத் தொடங்கலாம்.
போக்குவரத்து வாகனங்களை தயாரிக்கும் பெருநிறுவனங்கள் தங்களின் மின்வாகன மாதிரிகளை சந்தையில் உலவவிட்டிருக்கிறார்கள். இந்த நிறுவனங்களிலும் மின்வாகன உற்பத்தி மற்றும் உருவாக்கத்தில் வேலைவாய்ப்புகள் உள்ளன. எதிர்காலத்தில் இவை மேலும் பெருகும். மின்வாகனப் பராமரிப்பிலும் வேலைவாய்ப்புகள் ஏற்படும்.
இவை தவிர மின்வாகனத் துறையில் ஆராய்ச்சி வாய்ப்புகளும் உள்ளன. காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், மின்கலன் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதைப் போல பல அரசு, தனியார் ஆய்வுக்கூடங்கள், பல்கலைக்கழகங்களில் மின்வாகன தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இத்தகைய ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கலாம்.
(கனவுகள் தொடரும்)
கட்டுரையாளர், ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com