

இந்தத் தொடரை படிக்கும் பல மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தக் கூடியவர்களாக இருப்பீர்கள். பள்ளி பாடங்களைப் பகிரவும், பெற்றோர் உங்களை மிக எளிதாக தொடர்பு கொள்ளவும் ஸ்மார்ட்போன் மிகப் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆனால், பதின்பருவம் என்பது நட்புக்கும், காதலுக்கும் இடையிலான வேறுபாட்டை பிரித்து புரிந்து கொள்வதில் குழம்பும் வயது. பாலியல் தேவையைக் குழப்பத்துடன் உணரும் வயது, அதைத் தேடும் வயது. ஸ்மார்ட்போன்களில் இருக்கும் நவீன ’சாட்’ வசதியினால், நட்பு, காதல் எனத் புதிய் தொடர்புகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது.
எது காதல்? எது நட்பு? - அப்படியாகக் காதல் எது, நட்பு எது என புரியாமல் பழகும் சில மாணவர்கள் ஆர்வக் கோளாறில் தவறுகள் செய்துவிடுகிறார்கள். அதில் மிக குறிப்பிட்ட தவறு தன் அந்தரங்க தகவலை, புகைப்படத்தைப் பகிர்வது. வளரிளம் வயதில் வருவது காதல் அல்ல, வெறும் இனக்கவர்ச்சி, காதல் உண்டாக உங்கள் மூளை, மனது, இரண்டும் வளர வேண்டும். ஆனால், இந்த இனக்கவர்ச்சி வயதில் அந்தரங்க படங்கள் பகிர்வது பல சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.
அழித்தாலும் படம் அழிவதில்லை: ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம், டிஜிட்டலாக பதிவாகும் தகவல்களை சில சிறப்பு மென்பொருட்கள் கொண்டு மீண்டும் உருவாக்கிவிடலாம். அதாவது நீங்கள் வேடிக்கையாக எடுக்கும் ஒரு நிர்வாண படத்தை உங்கள் போனில் அழித்துவிட்டால் கூட, டிஜிட்டல் எண்களாக அந்த படம் அழியாது. சிறப்பு மென்பொருட்கள் கொண்டு அதை மீட்டுவிடலாம். அதனால் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருக்கும் அந்தரங்க தகவலை, படங்களைப் பாதுகாப்பது என்பது மிக மிக பொறுப்பான கொஞ்சம் கடினமான வேலைதான்.
அப்படியிருக்க அந்த படங்களை நீங்கள் உங்கள் நண்பர்கள், காதலருடன் பகிர்வது பற்றி யோசியுங்கள். உங்கள் போனில் இருப்பதே ஆப்பத்து என்றால் காதலருடன் பகிர்வது?
இணையம் பொறுத்தவரை ஒரு வேளை உங்கள் படங்கள் கசிந்துவிட்டால் தேடி எடுத்து அழிப்பது மிகவும் கடினமான வேலை. அதற்கு பணமும் செலவாகும், பணம் செலவழித்தாலும் கூட சில தளங்களில் நீக்குவது மிகவும் கடினம். முடிந்தவரை வருமுன் காப்பதுதான் நலம். உங்கள் அன்புக்குரியவர்களிடம் அன்பை பகிருங்கள் அந்தரங்கப் படங்களை அல்ல.
(தொடர்ந்து பேசுவோம்)
- கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர், தொடர்புக்கு: write2vinod11@gmail.com