

டாக்டர் துவாரகநாத் சீனாவில் மருத்துவ சேவை புரிந்து வந்த காலத்தில் காயமுற்ற போர் வீரர்கள் பலரும், பொதுமக்களும் பிளேக் நோய் தாக்கி கொத்துக் கொத்தாக மடிந்தனர். அதற்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய துவாரகநாத், தமக்குத் தாமே பிளேக் தொற்றை ஏற்படுத்திக் கொண்டார். மக்களை காக்க தன்னையே அர்ப்பணித்த துவாரகநாத்தை சீன மக்கள், வாஞ்சையுடன் 'கே-ஹூவா' என்று சீன மொழியில் அழைத்தனர்.
மருந்து பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, அதீதக் குளிர் அனைத்தையும் தாண்டி, மருத்துவப் பணியில் கரைந்து போனார் துவாரகநாத். 1940-ம் ஆண்டில், 72 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் அறுவை சிகிச்சை செய்தும், தொடர்ந்து 13 நாட்கள் ஒரே இடத்தில் பணியாற்றியும், காயமுற்ற 800 வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார்.
இதன் மூலம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார். அதேசமயம் தனக்கு அனைத்துமாக வாழ்ந்த தந்தையின் மரணச்செய்தி வந்தபோதும் ஊர் திரும்பவில்லை. எங்கேயோ பிறந்த ஒருவர் தமது நாட்டு மக்களுக்கு செய்த செயற்கரிய உதவியைப் பாராட்டிய சீனத் தலைவர்கள், அவரை சிந்தனை மிக்க மருத்துவர் என்ற பொருள்படும் "ஓல்ட் கே" என்ற அடைமொழியுடன் அழைத்தனர்.
சீனாவில் பூத்த காதல்
1940-ல், துவாரகநாத்திற்கு பெரும் பக்கபலமாக இருந்த டாக்டர் நார்மன் பெத்தூன், போர் வீரர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே மரணமடைந்தார். தந்தை இறந்த அதே துக்கத்தை மீண்டும் உணர்ந்த துவாரகநாத், நார்மனின் கல்லறையில் அழுதபடி, "நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை இனி நான் வாழ்வேன்” என்று உறுதி ஏற்றார். உடன் வந்த மற்ற மருத்துவர்கள் அனைவரும் பணி முடிந்து தாய்நாடு திரும்பியபோதும் தான் மட்டும் சீனாவிலேயே தங்கி, தனது பணிகளைத் தொடர்ந்தார்.
வடக்கு சீன மாகாணத்தில் சர்வதேச பெத்தூன் நினைவு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக 1941-ல் பொறுப்பேற்று, 2000 அறுவை சிகிச்சைகள்வரை மேற்கொண்டார். அதேசமயத்தில் ராணுவத்தில் தன்னார்வலராக இணைந்து தனக்கு உதவியாளராகப் பணியாற்றிய ஜியோ க்விங்லன் என்ற செவிலியரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். 1942-ல் ஆண் குழந்தை பிறந்தபோது, ‘இந்தியாவும் சீனாவும்’ என்ற பொருள்தரும் யின்ஹூவா (Yinhua) என்று பெயரைச் சூட்டினார்.
எதிர்பாராத அதிர்ச்சி
குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, மருத்துவப் புத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தபோது, தொடர் வலிப்பு நோய் கண்டு, டிசம்பர் 8, 1942 ஆம் ஆண்டு அகால மரணமடைந்தார். சிறிய வயதிலேயே தங்களது பிரிய மருத்துவர் உயிரிழந்தபோது, அவரது மரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு கலங்கிநின்றனர் வடக்கு சீன மாகாணத்து மக்கள்.
தனது அன்புக்குரிய பெத்தூனின் கல்லறைக்கு அருகிலேயே துவாரகநாத்தின் கல்லறையும் அமைக்கப்பட, அவரது நினைவால் மருத்துவக் கல்லூரியையும், பள்ளிகளையும் ஹேபே மாகாணத்தில் தொடங்கி வைத்தது சீன அரசு. அத்துடன் தியாகிகள் பூங்கா ஒன்றையும் அமைத்து, மருத்துவக் கல்லூரியில் சிலை ஒன்றும் வடித்து, வருடந்தோறும் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர் சீன தேசத்தின் தலைவர்களும் மக்களும்.
இன்றும் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்யும் ஒவ்வொரு சீனத் தலைவரும் மும்பை சோலாப்பூருக்குச் சென்று, டாக்டர் துவாரகநாத் குடும்பத்தாரை சந்தித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துச் செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். சீனா என்றால் அதன் பட்டுத்துணிகள் என்ற அளவு மட்டுமே தெரிந்த தமது குடும்பத்தாருக்கு, இது தங்களது சகோதரனால் கிடைத்த மிகப்பெரிய மரியாதை என்று கூறியுள்ளார் டாக்டர் துவாரகநாத்தின் சகோதரியான மனோரமா.
இந்திய சீன உறவுகளுக்கு இன்றும் பெரும் பாலமாக விளங்கும் டாக்டர் துவாரகநாத்தை இந்திய அரசும் கௌரவித்திருக்கிறது. 2012-ல், சோலாப்பூரில் அவரது இல்லத்தில் நினைவகம் ஒன்றை நிறுவியதோடு, சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டுள்ளது. 'கோட்னிஸ் அமர் கஹானி' எனும் திரைப்படத்தையும், 'திரும்பவே இல்லாத மனிதன்' எனும் வாழ்க்கை வரலாற்றுப் புதினத்தையும் அவரது நினைவாக வெளியிட்டுள்ளது.
"பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே புத்தர்கள் தோற்றுவிக்கப்படுகிறார்கள்" என்பது போதி தர்மரின் வரிகள்.
அது உண்மைதான் என்று நிரூபிக்கிறது, வெறும் ஐந்தாண்டுகள் மட்டுமே ஒரு தேசத்தில் வாழ்ந்த இந்த நவீன போதி தர்மரான டாக்டர் கே ஹூவா எனும் துவாரகநாத்தின் வாழ்க்கை.
(மகிமை தொடரும்)
கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com