

முதல் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். உணவு பற்றாக்குறை பல நாடுகளை ஆட்டிப்படைத்தது. அதிலும் ஜெர்மனியில் கடுமையான உணவுத்தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதில் நமது விஞ்ஞானி பசியால் பல நாட்கள் வாட நேர்கிறது. இவரின் நிலைமை பலருக்கும் தெரியவருகிறது.
இந்நிலை அறிந்து வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவர் நிறைய வெண்ணெய் கட்டிகளை அனுப்பிவைக்கிறார். தனது குடும்பம் சில நாட்கள் பசியாற அதனை அவர் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. உடனிருந்த எண்ணற்ற சகாக்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தார். அதன் மூலம் மன நிம்மதியடைந்தார். யார் இந்த மனிதர்? அவர்தான் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி வில்ஹெம் ராண்ட்ஜன்.
1845-ல் பிறந்தவர் வில்ஹெம் ராண்ட்ஜன். தாயார் டச்சுக்காரர் என்பதால் சிறுபிராயத்தை நெதர்லாந்தில் கழித்தார். நம்மில் பலபேர் போலவே பள்ளியில் சராசரி மாணவர். யார் யாரோ செய்தகுறும்புகளுக்கெல்லாம் இவர் தண்டனை அனுபவிக்க நேர்ந்துள்ளது. அவ்வளவு ஏன்? ஆசிரியர் ஒருவரை யாரோ கேலிச்சித்திரமாக வரைய பழி இவர் தலையில் விழுந்துள்ளது. பின்னர் நெதர்லாந்து யுரேச்சட் பல்கலைக்கழகத்தில் சேர்க்க பெற்றோர் முயன்றனர். நம்மவரோ அதற்கு போதுமான அளவு மதிப்பெண் பெற்றிருக்கவில்லை.
எனவே சுவிட்சர்லாந்திலிருந்த ஃபெடரல்பாலிடெக்னிக் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். பின்னாளில் ஜூரிச் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், முனைவர்பட்டமும் பெற்றுள்ளார். அமெரிக்காவின்ஐயோவா பல்கலைக்கழகத்தில் பணி கிடைத்தது. அதற்காக அமெரிக்கா கிளம்பும் நேரத்தில் முதல் உலகப்போர் தொடங்கிவிட்டதால் ஜெர்மனியிலேயே தங்கிவிட்டார். ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் பணியில் சேர்ந்துபின்னாளில் உர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகவும் இயக்குநராகவும் உயர்ந்தார்.
இருட்டறையில் கடுமையான ஆய்வு: இவரது காலத்தில்தான் எதிர்மின்வாய்க்கதிர்கள் (Cathode Rays) குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றன. ராண்ட்ஜென் அவர்களும் இரவு பகலாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். வெற்றிடக் குழாய்களுக்குள் (குருக்ஸ் குழாய் என அழைக்கப்பட்டது) மின்சாரம் செலுத்தப்படும்போது எதிர்மின்வாயிலிருந்து மின்சாரம் உமிழப்படும். இருட்டறையில் இருந்தபடி எவ்வாறான கதிர்கள் வெளியாகின்றன என்பதை ஆராய்ந்துகொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அங்கு வைக்கப்பட்டிருந்த பேரியம் பிளாட்டினோ திரை ஒளிர்ந்துள்ளது.
ராண்ட்ஜென் இதனை கவனித்தார். இருப்பினும் அப்போது தான் வேறொன்று குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததால் இதனைப் பற்றி கவலைப்படவில்லை. கிடைத்த கதிருக்கு X கதிர் என்று பெயர்வைத்துவிட்டு அடுத்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
முதன்முதலாக ராண்ட்ஜனுடைய மனைவி ஆனா பெர்தாவின் கைகள்தான் X கதிர்களால் படம்பிடிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. அவரது இடது கைவிரல்களும் அதிலிருந்த இவர்களின் திருமண மோதிரமும்தான் பதிந்துள்ளது. இதிலிருந்துதான் எல்லாவற்றிலும் ஊடுருவும் இந்த கதிர்கள் எலும்பில் ஊருவாது என்று இவர் கண்டுபிடித்தார்.
யார் அந்த X? - அப்போதெல்லாம் உடலினுள் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய உடலைக் கிழித்துப் பார்ப்பது ஒன்றே வழியாக இருந்தது. X கதிர்களின் வரவு வெளிப்புறமிருந்தே உடலில் உள்ள பாகங்களை படம்பிடிக்க உதவிகரமாக இருந்தது. இது மருத்துவ உலகில் ஒரு மைல்கல். அவர் விரும்பியிருந்தால் அந்த கதிருக்கு அவரது பெயரை வைத்திருக்க இயலும். ஆனால், அந்தக் கண்டுபிடிப்பிற்கு பலரது அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னணியும் இருப்பதை உணர்ந்து அக்கதிர்களுக்கு X கதிர் என்றே பெயரிட்டார்.
இந்த கண்டுபிடிப்பிற்காகவே இயற்பியல் துறையில் முதல்முறையாக நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு மூலமாக பெற்ற மொத்த தொகையையும் தான் பணியாற்றிய பல்கலைக்கழகத்திற்கே கொடையாக அளித்தார். அறிஞர் மேரிகியூரி போலவே X கதிர்களுக்கான காப்புரிமையையும் செய்து கொள்ளவில்லை. மனிதகுலத்தின் நன்மைக்கு தம்மாலான உதவி என்று பெருந்தன்மையுடன் செயல்பட்டார்.
- கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com