சின்னச் சின்ன மாற்றங்கள் - 24: தீர்மானத்தை நிறைவேற்றுவது எப்படி?

சின்னச் சின்ன மாற்றங்கள் - 24: தீர்மானத்தை நிறைவேற்றுவது எப்படி?
Updated on
2 min read

புத்தாண்டு பிறந்து ஒரு வாரத்துக்கு மேலாகின்றது. புத்தாண்டு என்றாலே புத்துணர்ச்சிதான். புத்தாண்டு உறுதிமொழி எடுத்து இருப்பீர்களே!?

ஒரு வருடம் என்பது 365 நாட்கள். கறாராக சொல்லப்போனால் இன்னும் கொஞ்சம் கூடுதல் மணி நேரங்கள். பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனைத் தன் வட்டப்பாதையில் ஒரு சுற்று சுற்றிவரும் காலம் ஒரு வருடம். வட்டப்பாதை சரியான வட்டமல்ல. நீள்வட்டம். ஆகவே சூரியனிலிருந்து பூமி எப்போதும் ஒரே தூரத்தில் இருக்காது, மாறிக் கொண்டே இருக்கும். மிக அருகில் இருக்கும் நாள் ஜனவரி 03. மிகவும் தூரமாக இருக்கும் நாள் ஜூலை 4. ஆனால், நாட்காட்டியின்படி ஜனவரி 1 என்ற தினத்தை புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்கிறோம்.

இது ஆங்கிலப் புத்தாண்டு அல்ல

வழக்கமாக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தெரிவித்தால் சிலர் பதிலுக்கு “ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்துவார்கள். நாம் பின் பற்றுவது கிரிகேரியன் நாட்காட்டி. நாட்காட்டிகளின் வரலாறு சுவாரஸ்யமானது. இந்த நாட்காட்டிக்கு நகர பல நூற்றாண்டுகள் பிடித்தது.

இந்த மாதங்கள், ஒரு மாதத்திற்கு இத்தனை நாட்கள் என பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு தற்சமயம் உலகமே இந்த நாட்காட்டியை ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் மூலம் இந்த நாட்காட்டி அறிமுகமாகி இருக்கலாம்.ஆனால், ஆங்கிலப் புத்தாண்டு என சொல்வதில் அர்த்தமில்லை. இது “புத்தாண்டு” அவ்வளவே.

சரி சரி தீர்மானத்திற்கு வருவோம். மாணவர் பருவத்தினர் நிறைய தீர்மானங்கள் எடுத்திருப்பீர்கள். சீக்கிரம் எழுவது, நிறைய நேரம் படிப்பது, நூலகம் செல்வது, தினமும் 30 நிமிடம் விளையாடுவது, கருவிகளை குறைவாக பயன்படுத்துவது, புதிய மொழியைக் கற்றுக்கொள்வது, புதிய கலையைக் கற்றுக்கொள்வது என ஊருக்கு ஏற்றார்போல, சூழலுக்கு ஏற்றார்போல தீர்மானங்கள் மாறும்.

எடுத்த தீர்மானங்களை ஒரு தாளில் எழுதி நீங்கள் அடிக்கடி புழங்கும் இடத்தில் ஒட்டிவிடுங்கள். அந்த தாள் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். சில காரியங்களைச் செய்ய முடியவில்லையே என வருத்தம் கொள்ள வேண்டாம். ஆனால், இவை செய்ய வேண்டியவை என மனதில் இருந்தால் மட்டுமே அது என்றாவது நிறைவேறும்.

உங்களுக்கு நம்பகமான நண்பர்களிடம் பகிர்ந்து இருவரும் அவரவர் தீர்மானத்தின்படி ஏதேனும் நடக்கின்றதா என அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ளலாம். மெல்லமெல்ல முன்னேற்றல் நடக்கும்.

சின்ன சின்னதாக...

பெரிய காரியங்கள் அனைத்தையும் சின்னச் சின்னதாக தினசரி வேலையாக மாற்றுங்கள். வருடத்திற்கு 1000 கிலோமீட்டர் ஓட வேண்டும் என்றால் அய்யோ என பெரியதாக இருக்கும் . அதுவே வாரத்துக்கு 20 கிலோமீட்டர் அல்லது ஒரு நாளைக்கு 3 கிலோமீட்டர் என உடைத்துக் கொண்டால் எளிதாக இருக்கும். அதே சமயம் எந்த காரியத்தை எடுத்தாலும் அதைத் தொடர்ச்சியாக செய்தலே பலனளிக்கும்.

இவை எல்லாமே ஒரு வலுவான ஆளுமையை உருவாக்கும் முயற்சிகள். நீங்கள் ஒவ்வொருவரும் வலுவான ஆளுமையாக வருவீர்கள். இன்னொன்று, உறுதிமொழி எடுத்துவிட்டால் அதற்காக ஆண்டு பிறப்பு, மாதப்பிறப்பு, வாரப்பிறப்பு, நல்ல நாள் என காத்திருக்க வேண்டாம். இந்த நாளே நல்ல நாள்தான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in