கதை கேளு கதை கேளு 23: பிள்ளைத்தமிழ்

கதை கேளு கதை கேளு 23: பிள்ளைத்தமிழ்
Updated on
2 min read

நல்ல பெற்றோர் வழியே நற்சமுதாயம் பிறக்கும். நல்ல பிள்ளைகளாய் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயம், நல்ல பெற்றோராய் இருக்கிறோமா? என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்வதில்லை. குழந்தைகளின் வாழ்க்கை முழுமைக்கும் தாங்களே பொறுப்பு என்பதாக,பிள்ளைகளுக்காகவும் தானே யோசித்து முடிவு செய்யும் பெற்றோரே, குழந்தைகளை முயற்சி செய்ய ஊக்குவியுங்கள்.உங்கள் எண்ணத்தை அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்கிறார் ஆசிரியர்.

குழந்தைகளிடம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்று வற்புறுத்தும் பெற்றோர் நம்மில் பலர் உண்டு. இரண்டு மதிப்பெண் குறைந் தாலும் எங்கே அந்த இரண்டு மதிப்பெண் என்றுதான் கேள்வி கேட்போம். 98 மதிப்பெண் பெற்றதை பாராட்ட மறக்கிறோம். தோல்வி அறியாத தலைமுறையை உருவாக்க முயல்கிறோம். தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன் போன்ற சமூக அறிவை குழந்தைகள் பெறுவதற்கு பள்ளிகளுடன் பெற்றோரும் யோசிக்க வேண்டும்.

பொதுஇடங்களில் வரிசையில் நிற்பது, சாலை விதிகளைக் கடைபிடிப்பது போன்ற குடிமைப்பண்புகளை குழந்தைகள் முன்பு பெற்றோர் கடைபிடித்து முன்மாதிரியாக இருக்க வேண்டும். சில சூழ்நிலைகளில் நமக்கு வசதியாக செயல்படுவதை பார்க்கும் குழந்தைகளும், குடிமைப்பண்பின் அடிப்படை இல்லாமல்தானே செயல்பட பழகுவார்கள்.

நேரம் செலவிடுங்கள்: சிறந்த குழந்தையாக இருக்க வேண்டும் என விரும்பும் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தை செலவு செய்கிறீர்கள்?குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் நேரம் என்பது பெற்றோர் பேசுவதை குழந்தைகள் கேட்பதற்கான நேரம் என்பதாக கொள்ளாமல், குழந்தை களின் விருப்பங்கள், தேவைகள், பிடித்த விஷயங்கள் இவற்றை பற்றி அறிந்து கொள்வதற்கான நேரமாக இருக்க, குழந்தைகளுடன் வெறுமனே உரையாடுங்கள்.

குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகம் படிக்கலாம். கேரம், செஸ் விளையாடலாம், செய்தித்தாள் வாசிக்கலாம்,குழந்தை
களுடன் சேர்ந்து நடை பயிலலாம், இந்தச் செயல்பாடுகளால் பதின்பருவக் குழந்தைகளுக்கு நாளமில்லாச் சுரப்பிகளால் ஏற்படும் இயல்பான மனஅழுத்தம் மற்றும் சோர்வுகளைப் போக்கி குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க உதவும் நேரம் பயனுறு நேரமாகிறது.

கற்றல் குறைபாடு: குழந்தைகள் பாடப்புத்தகங்களை படிக்கும்போது, பெற்றோர் தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன் பார்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டால், குழந்தைகளுக்கு கவனச்சிதறல் ஏற்படும். பெற்றோரும் அந்த நேரத்தில் கதைப்புத்தகங் களை வாசிப்பதில் ஈடுபட வேண்டும். சில குழந்தைகளுக்கு கற்றலில் சிரமம் இருக்கலாம். அது கற்றல் குறைபாடே ஒழிய, நோய் அல்ல. தாமஸ் ஆல்வா எடிசன், லியனார்டோ டாவின்ஸி, பிகாஸோ என பல அறிஞர்களும் கற்றல் குறைபாடு உடையவர்களே.

அவர்கள் தங்களின் பலத்தை அறிந்து செயல்பட்டதைப் போல, நம் குழநதைகளுக்கும் சரியான முறையை வகுத்துத் தரவேண்டியது நம் கடமை. ழந்தைகளின் இயலாமையை அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இயலாமையைப் போக்க உதவ வேண்டும். புரிந்து கொள்ளாத வீடு, பள்ளிச் சூழல் தொடர்ந்தால், குழந்தைகள் கல்வி மீதே ஆர்வத்தை இழந்துவிடுவர்.

அதிக கட்டுப்பாடு ஆபத்து: குழந்தைகள் மேல் உள்ள பாசத்தால் உணவு விஷயத்தில் பெற்றோர் தாராளமாக இருக்கின்றனர். கொஞ்சம் கவனமாகவும் இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். குண்டாய் இருக்கும் குழந்தைதான் உடல்நலமாக உள்ளதாக கருதுவது தவறு. சத்தான, எளிதில் சீரணமாகும் உணவைத் தருவதில் கவனம் கொள்வதுடன், உடற்பயிற்சி செய்து உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.அதேபோல உடற்பருமனாலும் பாதிப்பு உண்டு என்பதை அறிந்து வியர் வையின் சுவையைச் சொல்லித்தர வேண்டும் என்கிறார்.

குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்று அதிகக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் அது ஒழுக்கக் கேட்டையே கொண்டுவந்து சேர்க்கும். குழந்தைகளுடன் நட்பாய் பழகுங்கள், அவர்களின் செயல்பாட்டை கவனியுங்கள். மாற்றங்களை உற்றுநோக்குங்கள், எதிர்மறையான பேச்சுகளைத் தவிருங்கள், ஆணையிடாதீர்கள், இணைந்து செயல்படுங்கள், குழந்தைகளை மதித்து கருத்து கேளுங்கள், அமைதியாக இருங்கள், குழந்தைகளுக்கு முன்மாதிரி செயற்பாட்டாளராய் நீங்கள் இருங்கள் என்று ஆலோசனைகளைக் கூறும் புத்தக ஆசிரியர் ஸ்.பாலபாரதி, குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணை மட்டுமே சார்ந்தது இல்லை.

ஆண்களும் பங்கேற்க வேண்டும் என்று முடிக்கிறார். சிறந்த சமுதாயத்தில் நாம் வாழ விரும்பினால், வருங்கால சமுதாயமான குழந்தைகளுக்கு முன்மாதிரி பெற்றோராய் நாம் இருக்க வேண்டும். பள்ளி மட்டுமே அனைத்து பண்புகளையும் வளர்த்துவிட இயலாது. பெற்றோர்கள் சமூக அறிவை தருவதில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்கிறார் பாலபாரதி.

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர்,
ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,
திருப்புட்குழி, காஞ்சிபுரம்.
தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in