

1970-ம் ஆண்டு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் கண்ணம்மா. 8-ம் வகுப்பு படித்தபோது ஒருநாள், பாவாடையில் ரத்தக் கரை பட்டுவிட்டது. வகுப்பிலிருந்த எல்லாரும் கேலியாக சிரித்தார்கள். அன்றிலிருந்து அவர் பள்ளிக்கூடமே போகவில்லை. தனது மகள் கல்லூரிக்கு செல்ல வீதியில் உற்சாகமாக அடியெடுத்துவைத்ததை பார்த்தும் பழைய நினைவுகளெல்லாம் மனதை அழுத்த கண்களில் நீர் கோர்த்தது.
அம்மாவை திரும்பி பார்த்த மகள், “என்னங்கம்மா, ஒங்க பள்ளிக்கூட நாட்கள் நினைவுக்கு வந்துடுச்சா” என்று கேட்டுக்கொண்டே, “அமிக்கா மாதிரி ஒரு பொண்ணு உங்க காலத்தில இருந்திருந்தா நல்லாருந்திருக்கும்ல” என்று சொன்னார். “அமிக்காவா, யாரது?” என்று கேட்ட அம்மாவுக்கு மாலை கல்லூரி முடிந்து வந்ததும் மகள் ஒரு கதை சொன்னார்.
இங்கிலாந்தில் மாதவிடாய் துயரம்: கேரளாவில் 1999-ல் பிறந்தவர் அமிக்கா ஜார்ஜ். பெற்றோருடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். 2017 மார்ச் 14-ம் தேதி, காலை உணவு சாப்பிட்டபடி திறன்பேசியில் செய்தித்தாள் வாசித்தார். அதில், “இங்கிலாந்தில் பதின்பருவ மாணவிகள் பலர் மாதவிடாய் பஞ்சுகள் வாங்க இயலாததால் பள்ளிக்கு விடுப்பு எடுக்கிறார்கள்” என்கிற செய்தியை வாசித்து அதிர்ந்தார்.
அது குறித்து இணையதளத்தில் தேடினார். இங்கிலாந்தில், மாதவிடாய் பஞ்சுகள் அத்தியாவசிய பொருட்களுக்கான பட்டியலில் இல்லாததால் 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. வாங்க இயலாத மாணவிகள் பலர் மாதந்தோறும் ஒருவாரம் வரைகூட விடுப்பு எடுக்கிறார்கள். ஆபத்தான முறையில் சாக்ஸ், செய்தித்தாள், கழிவறையில் பயன்படுத்தப்படும் தாள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்தார். பெற்றோர் தனக்கு வாங்கித் தராமல் இருந்தால் எவ்வளவு துயரமாக இருக்கும் என யோசித்தார்.
போராடிய இந்திய மாணவி: மாணவிகளுக்கு இலவசமாக மாதவிடாய் பஞ்சுகளை வழங்க வலியுறுத்தி 2017, ஏப்ரல் மாதம், Free Periods என இணையதளத்தில் பரப்புரை தொடங்கினார். அப்போது அமிக்காவுக்கு 17 வயது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத் திட்டார்கள். பகலில் பள்ளிக்கூடம் சென்றார். மாலையிலும், விடுமுறை நாட்களிலும் தலைவர்களைச் சந்தித்தார். மாற்றுவதற்கு பஞ்சு இல்லாதபோது பல மணி நேரம் அப்படியே இருப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றி பல்வேறு இடங்களில் உரையாற்றினார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலி நேர்காணலுக்குச் சென்றார். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மாதவிடாய் குறித்து பள்ளிக்கூடத்திலிருந்தே ஆண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். அப்போது அவர்களால் இச்சிக்கலைப் புரிந்துகொள்ள முடியும் என்று பத்திரிகைகளில் எழுதினார். தன் தொடர் முயற்சிகளால் மக்கள் இதன் அவசியம் குறித்து தொடர்ந்து பேசும்படி பார்த்துக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்தித்தார். அமிக்கா பேசுவதைக் கேட்கக்கூட அவர் தயாராக இல்லை. செவிமடுத்தே ஆகவேண்டும் என்கிற சூழலை உருவாக்கும் வரை அரசியல்வாதிகள் செவிமடுக்கமாட்டார்கள் என்பதை அந்நிகழ்வு உணர்த்தியது. 2017 டிசம்பர் மாதம் லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தார். எல்லா வயதினரும் பங்கேற்றார்கள். சிவப்பு நிற ஆடை அணிந்து பதாகைகள் ஏந்தினார்கள்.
ஊடகங்கள் பேசின. புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், செயற்பாட்டாளர்கள் குரல் கொடுத்தார்கள். மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.சம காலத்தில், இதே காரணத்துக்காக உருவான Red Box Project அமைப்புடன் சேர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தார். “பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை இங்கிலாந்து அரசு தன் கடமையாகக் கொள்ள வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும்” என சொல்லி நீதிமன்றம் சென்றார்.
2020-ம் ஆண்டு, “இங்கிலாந்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாதவிடாய் நாட்களுக்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்” என்று இங்கிலாந்து கல்வி அமைச்சகம் அறிவித்தது. இந்த வாய்ப்பை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள தொடர்ந்து விழிப்புணர்வு கொடுக்கும் அமிக்கா, 2021-ல், ‘செய்து காட்டுங்கள்’ (Make it Happen) எனும் தலைப்பில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com