வாழ்ந்து பார்! - 24: சமையல்கலையும் ஆக்கச்சிந்தனையா?

வாழ்ந்து பார்! - 24: சமையல்கலையும் ஆக்கச்சிந்தனையா?
Updated on
2 min read

ஆக்கச்சிந்தனைகளின் கூறுகளான இணைத்தல், மாற்றீடு செய்தல், வேறுபயன்பாடு ஆகியவற்றுக்கு மாணவர்கள் கூறிய எடுத்துக்காட்டுகளுக்கு, ஆம், ஆம், என்று கூறி ஆசிரியர் எழில் ஏற்றதும் வகுப்பில் உற்சாகம் ஊற்றெடுத்தது.

திரைப்படப் பாடல்களை நாங்கள் அடிக்கடி முணுமுணுப்பதைக் கவனித்த தமிழாசிரியர்பாடத்திலுள்ள செய்யுள்களை அவற்றுக்குப் பொருத்தமான திரைப்படப் பாடல் மெட்டில்எங்களைப் பாடச் செய்வதும் ஆக்கச்சிந்தனையா? என்று கேட்டான் காதர்.

கூட்டலின் சுருக்கமாக பெருக்கலையும், கழித்தலின் சுருக்கமாக வகுத்தலையும் கண்டுபிடித்ததும், விளம்பரத்தில் ஒரே அளவுள்ள பொருள்களில் ஒன்றை மட்டும் பெரிதுபடுத்திக் காட்டுவதும் ஆக்கச்சிந்தனைகளா? என்று கேட்டாள் தங்கம். தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை மாற்றுவதற்கு ஒவ்வொரு முறையும் இருக்கையிலிருந்து எழுந்து போவதற்கு மாற்றாக உட்கார்ந்த இடத்திலிருத்தே மாற்ற தொலையியக்கியைக் (Remote control) கண்டுபிடித்ததும் ஆக்கச்சிந்தனையா? என்றான் தேவநேயன்.

தனித்தனி குப்பிகளை நீக்கிவிட்டு 12 வண்ணங்களையும் இப்படி ஒரே பெட்டிக்குள் வைத்ததும் ஆக்கச்சிந்தனையா? என்று கேட்டு தனது நீர்வண்ணப் பெட்டியை (Watercolour Box) எடுத்துக்காட்டினாள் மணிமேகலை. நூலகத்தில் அகரவரிசையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நூல்களை பொருளடிப்படையில் மாற்றியடுக்கியதும் ஆக்கச்சிந்தையா? என்று வினவினான் முகில்.

அறியாமலேயே சொல்லிவிட்டீர்களே! - அனைத்துக்கும் ஆம்தான் விடை என்ற எழில், மாற்றீடுசெய்தல் (Substitute), இணைத்தல் (Combine), ஏற்றல் (Adapt),மாற்றியமைத்தல் / சுருக்குதல் / பெரிதாக்கல் (Modify / Minimise / Magnify), வேறுபயன்பாட்டைத் தருதல் (Put to otherpurpose), நீக்குதல் (Eliminate), மறுசீரமைத்தல் (Rearrange) என்று ஆக்கச்சிந்தனையின் உத்திகளை உங்களை அறியாமலேயே பட்டியலிட்டுவிட்டீர்கள் என்று பாராட்டினார்.

அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஓசை அடங்கியதும் இந்த உத்திகளின் முதலெழுத்துகள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, ‘SCAMPER’ என்னும் சொல்லைஉருவாக்கினால் அதுவும் ஆக்கச்சிந்தனையா? என்றான் முகில். இந்தச் சொல்லைத்தான் இந்த உத்திகளை நினைவுபடுத்திக்கொள்ள உருவாக்கி இருக்கிறார்கள் என்று விளக்கினார் ஆசிரியர் எழில்.

ஆக்கச்சிந்தனை என்பதே இவ்வளவுதானா! என்று வியப்படைந்தாள் கயல்விழி.இல்லை. ஆக்கச்சிந்தனை எல்லையற்றது. இவை ஆக்கச்சிந்தனையில் உள்ள சிலவகைமாதிரிகள் மட்டுமே என்றார் எழில்.அப்படியானால், வகைவகையாய் தோசைவார்ப்பதும் ஆக்கச்சிந்தனையா? என்று நக்கலாய்க் கேட்டான் சுடர்.

தோசை வார்ப்பது மட்டுமல்ல உணவுவகை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வகையான பொருள்களைச் சேர்த்தும், நீக்கியும் செய்யும் புதுப்புது உணவுகளை ஆக்கும் சமையல்கலையும் வீட்டுவாயில் நாள்தோறும் வரையப்படும் கோலங்களும் ஆக்கச்சிந்தனையின் வெளிப்ப்பாடுதான் என்றார் எழில்.

ஆக்கச்சிந்தனைக்கு என்ன தேவை? - ஆக்கச்சிந்தனை படைப்பாளர்களோடும் அறிவியல் தொழில்நுட்ப அறிஞர்களோடும் மட்டும் தொடர்புடையது இல்லையா? என்றாள் மதி. அவர்கள் மட்டுமல்லர், நாம்ஒவ்வொருவரோடும் தொடர்புடையது ஆக்கச்சிந்தனை. சிலர் அதனை இயல்பாக வெளிப்படுத்துவர். மற்றவர்கள் கொஞ்சம் முயன்றால் வெளிப்படுத்த இயலும் என்றார் எழில்.

ஆக்கச்சிந்தனையை வெளிப்படுத்த என்னென்ன தன்மைகள் தேவை? என்று காதர் கேட்டான். அதற்கு நேரடியாக விடையளிக்காமல், வகுப்பறையிலிருந்த வெண்பலகையில் பின்வருமாறு ஒன்பது புள்ளிகளை வைத்தார் எழில், இந்தப் புள்ளிகள் அனைத்தையும் கையை எடுக்காமல் பென்சிலைக் கொண்டு நான்கு நேர்கோடுகளால் இணைக்க வேண்டும் என்றார்.

மாணவர்கள் அப்புள்ளிகளைத் தங்களதுகுறிப்பேட்டில் படியெடுத்தனர். பாடவேளையின் முடிவை அறிவிக்க மணியடித்ததும், இதற்கான விடையை அடுத்த வகுப்பில் பார்க்கலாம் என்று கூறி கிளம்பிச் சென்றார் எழில். மாணவர்கள் தமது குறிப்பேட்டில் ஆர்வமாய் புள்ளிகளை இணைக்க முயன்றார்கள். நீங்களும் முயன்று பாருங்கள்.(தொடரும்)

- கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர், தொடர்புக்கு: ariaravelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in