

மீன் உற்பத்தியில் உலகளவில் இரண்டாமிடம் வகிக்கும் இந்தியாவில், அத்துறையின் முறையான படிப்புகளை முடித்தவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. குறிப்பாக மீன்வள அறிவியலாளர் தொடர்புடைய பணிகளுக்கான பிஎஃப்சிஎஸ்சி (BFSc - Bachelor of Fishery Science) பட்டதாரிகள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். பல்வேறு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மீன்வள கல்லூரிகளில் இந்த பட்டப்படிப்பு வழங்கப்பட்டாலும், இத்துறையின் முன்னணி கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்க விரும்புவோருக்காக CIFNET-CET பொது நுழைவுத் தேர்வு காத்திருக்கிறது.
கொச்சினை தலைமையிடமாகக் கொண்ட ‘மத்திய மீன்வள, கப்பல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம்’ (CIFNET -Central Institute of Fisheries, Nautical and Engineering Training), வழங்கும் கப்பல்சார் அறிவியலை (Nautical science) உள்ளடக்கியது இந்த பிஎஃப்எஸ்சி படிப்பு. ஐஐடி மற்றும் என்ஐடி கல்வி நிலையங்களில் சேர விரும்புவோர் அவற்றுக்கு அடுத்த வாய்ப்பாக CIFNET நுழைவுத் தேர்வு வாயிலான பிஎஃப்எஸ்சி படிப்புக்கும் விண்ணப்பிக்கிறார்கள்.
என்ன படிப்பு? - ஜேஇஇ உள்ளிட்ட பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், CIFNET நுழைவுத் தேர்வின் பாடத்திட்டத்தை புரிந்து கொள்வது மூலமாக அதற்கான நுழைவுத் தேர்விலும் எளிதில் பங்கேற்கலாம். இத்துறையில் மீன் வளர்ப்பு, மீன் பிடிப்பு, விற்பனை, சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதி, தொழில்நுட்பம், மீன்வளம் சார்ந்த வங்கி மற்றும் மேலாண்மை உதவிகள் என அரசு, தனியார் மற்றும் சுயதொழில் வேலைவாய்ப்புகள் ஏராளமாய் காத்திருக்கின்றன.
யாரெல்லாம் எழுதலாம்? - ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) பாடங்களுடன் பிளஸ் 2 முடித்த, 17-20 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுகிறார்கள். தேர்ச்சியுடன் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். எஸ்சி/எஸ்டி பிரிவினர் பிளஸ் 2 தேர்ச்சி அடைந்திருந்தால் போதும். விண்ணப்பிக்கும் ஆண்டில் தேர்வெழுதும் மாணவர்களும், CIFNET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுகிறார்கள்.
எப்படி விண்ணப்பிக்கலாம்? - இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கி அதில் கேட்டிருக்கும் விபரங்களை நிரப்பிய பின்னர் அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள சான்றுகளின் நகல்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப முகவரி உள்பட இதர விபரங்களை இணையதளத்தில் அறியலாம். விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்தலாம்.
தேர்வு எப்படி? - கொள்குறிவகையிலான (Objective Type)வினாக்களுடன் எழுத்துத் தேர்வு அமைந்திருக்கும். சரியான விடைக்கு 1 முழு மதிப்பெண் வழங்கப்படுவதோடு, தவறான விடைக்கு கால் (0.25) மதிப்பெண் கழிக்கப்படும். சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமன்றி பிளஸ் 2 மதிப்பெண்கள், நேர்காணல் ஆகியவை 40% 50% 10% என்ற அடிப்படையில் கணக்கிட்டு சேர்க்கைக்கான வாய்ப்பு இறுதி செய்யப்படும். நேர்காணலின் தொடர்ச்சியாக உடல்தகுதி தேர்வும் உண்டு.
- கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
| மீன்வள அறிவியல் துறை குறித்தும் CIFNET நுழைவுத் தேர்வு குறித்தும் விரிவாகத் தெரிந்து கொள்ள: cifnet.gov.in/index.php/content/index/admission |