உலகம் - நாளை - நாம் - 9: இந்தியாவின் ‘டைனசர் பார்க்’!

உலகம் - நாளை - நாம் - 9: இந்தியாவின் ‘டைனசர் பார்க்’!
Updated on
2 min read

இந்திய மாநிலங்களில் ஒரு சில மட்டும் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. தமிழ்நாடு, மகராஷ்டிரம், மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம். இந்தப் பட்டியலில் உள்ள மற்றொரு மாநிலம் குஜராத்.

மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் உள்ளிட்ட பல தலைவர்கள் தோன்றிய குஜராத் மாநிலம் இந்தியாவின் வட மேற்குப் பகுதியில், பாகிஸ்தான் நாட்டை எல்லையாகக் கொண்டு உள்ளது.

இந்தியாவின் தொன்மையான நாகரிகமாகக் கருதப்படுகிற சிந்து சமவெளி நாகரிகத்தின் பெரும் பகுதி, குஜராத் மாநிலத்தில் அமைந்து உள்ளது. உலகின் பழமைவாய்ந்த துறைமுகங்களில் ஒன்றான லோத்தல் மற்றும் தோலாவிரா, கோலா தோரோ உள்ளிட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் 23 பகுதிகள் இங்கு அறியப்பட்டுள்ளன.

மவுரிய, குப்தர் காலத்தில் பரூச், கம்பட் துறைமுகங்கள் புகழ்பெற்ற வணிக மையங்களாகத் திகழ்ந்தன என்றும் கூறப்படுகிறது.

ஆறு கோடிக்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குஜராத் மக்கள் பேசும் மொழி குஜராத்தி ஆகும். இது இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமாகும். 1600 கி.மீ. நீளம் கடற்கரை பகுதியில் 41 துறைமுகங்கள் உள்ளன. நர்மதா, தபி, சபர்மதி ஆகிய முக்கிய ஆறுகள், மாநிலத்தின் நீர் வளத்துக்கு வலிமை சேர்க்கின்றன.

பாகிஸ்தானுடன் ஒட்டிய நிலம்: சர்தார் சரோவர் அணைக்கட்டு, நர்மதாஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. சபர்மதிஆற்றங்கரை மீதுதான் மகாத்மா காந்தி வாழ்ந்த ஆசிரமம் உள்ளது. அதனால் இது சபர்மதி ஆசிரமம் என்று அழைக்கப்படுகிறது. கிழக்கே ஆரவல்லி, சஹ்யாத்ரி, விந்திய, சாபுதாரா மலைகள் உள்ளன. கிர்னார் சிகரம், சாபுதாரா மலைவாச ஸ்தலம் ஆகியன, மலையை ஒட்டிய முக்கிய இடங்களாகும்.

தார் பாலைவனத்தை ஒட்டிய, கட்ச் பாலை நிலம், பாகிஸ்தானின் எல்லையோடு குஜராத் மாநிலத்திலும் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் நிலப்பரப்பில் சுமார் 10% வரை உள்ள வனப் பகுதிகளை ஒட்டி, 4 தேசியப் பூங்காக்கள், 21 பறவைகள் சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் மாகிசாகர் மாவட்டத்தில் உள்ளது பாலசினோர் நகரம் (வாடசினோர் என்ற பெயரும் உண்டு). தாதுக்கள் அதிகம் கொண்ட இடம் இது. 1981-ல், இது தொடர்பான அகழ்வாராழ்ச்சியின் போது தற்செயலாக, ‘டைனசர்’ விலங்கின் எலும்புப் படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஆறிவியல் ஆய்வாளர்கள் இந்த இடம் குறித்துப் பரவலான ஆராய்ச்சியைத் தொடங்கி இருக்கிறார்கள். டைனசர் இனத்தின் முட்டைகள், எலும்புகள், எலும்புக் கூடுகள் என்று பல சான்றுகள் கிடைத்தன.

100% மின்சக்தி கொண்ட கிராமங்கள்: சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, 13 வகை டைனசர்கள் இங்கு வாழ்ந்து இருக்கக் கூடும்; இங்குள்ள மென்மையான மண், அரிய வகை உயிரினங்களின் முட்டைகளை அடைகாக்க உகந்ததாய் இருந்திருக்கலாம்; இதன் காரணமாக, பண்டைய உலகில், டைனசர் இனத்தின் முக்கிய வாழ்விடமாக குஜராத் இருந்து இருக்கக்கூடும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

இத்துடன், இன்றும் ஆசிய சிங்கங்கள், இந்திய சிறுத்தைகள் ஆகியன சௌராஷ்டிரா பகுதி மற்றும் தெற்கு குஜராத்தின் மலைப் பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன.

குஜராத் மாநிலத்தில் சுமார் 18,000 கிராமங்கள் உள்ளன. இவை அனைத்தும், 100% மின்வசதி பெற்ற 24 மணி நேரம் மின்சப்ளை கொண்டவையாக உள்ளன. விவசாய உற்பத்தியில் ஆண்டு தோறும் சுமார் 12% அளவுக்கு வளர்ச்சி காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

கோதுமை, பருத்தி, நிலக்கடலை மற்றும் காய் கனிகள் அதிகம் குஜராத்தில் விளைவிக்கப்படுகின்றன. கால்நடை வளர்ப்பு, பால் வளம் மிகுந்து உள்ளதால், சுதந்திர இந்தியாவில் ‘வெண்மைப் புரட்சி’ ஏற்பட வழி கோலியது குஜராத். பவாய் என்னும் கூத்துக்கலை, இந்த மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாகும்.

இனி… ‘ஒட்டக நிலம்’ பார்க்கப் போகலாமா?

இந்த வாரக் கேள்வி: மேலாண்மை படிப்புக்குப் புகழ்பெற்ற ஒரு உயர்கல்வி நிறுவனம் குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ளது. அது எது? விவரங்கள் குறிப்பிடவும்.

(வளரும்)

- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுக்கான வழிகாட்டி, தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in