நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 23: தமிழ்வழியில் தமிழக அரசு பள்ளியில் படித்து ஐபிஎஸ்

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 23: தமிழ்வழியில் தமிழக அரசு பள்ளியில் படித்து ஐபிஎஸ்
Updated on
3 min read

கோவில்பட்டியில் உள்ள கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழியில் பயின்று பின்னாளில் மத்திய அரசின் யூபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ் பெற்றுள்ளார் ஆர்.கருப்பசாமி. கேரளாவின் 2013 பேட்ச்சை சேர்ந்த இவர், அம்மாநிலத்தின் கோழிக்கோடு ஊரகப் பகுதி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக(எஸ்பி) பணியாற்றி வருகிறார்.

கோவில்பட்டி தாலுகா நாளாட்டின்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன், சண்முகத்தாய் தம்பதியின் இளைய மகன் ஆர்.கருப்பசாமி. சிங்கப்பூரில் பொறியாளராக வேலை செய்துவருகிறார் மூத்த மகன் ஆர்.கனகராஜ். ஒன்று முதல் பிளஸ் 2 வரை தமிழ்வழிக் கல்வியில் நாளாட்டின்புத்தூரில் உள்ள தனது வீட்டருகிலுள்ள கே.ஆர்.சாரதா மேல்நிலைப்பள்ளியில் படித்தார் கருப்பசாமி. சிறப்பாக படித்து வந்தவர் பிளஸ் 2-ல் கணிதம், உயிரியில் பிரிவில் தனது பள்ளியில் இரண்டாவது உயர்ந்த மதிப்பெண் பெற்றார்.

வீட்டுப்பாடம் செய்ததில்லை

இது குறித்த நினைவுகளை பகிர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கருப்பசாமி, “வகுப்பறையில் பாடம் கற்பிக்கப்படும்போது ஊன்றி கவனிக்கும் பழக்கம் இருந்ததால் வீடு சென்ற பிறகு பாடங்களை நினைவுகூரும் தேவை எனக்கு ஏற்பட்டதில்லை. இதனால் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட அறிவுத்திறன் வளர்க்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பள்ளிக்காக பரிசுகள் வெல்ல அவகாசம் கிடைத்தது. தமிழ்வழியிலிருந்து மாறி கல்லூரியில் ஆங்கிலத்தில் பயிலும்போது சற்று சிரமம் இருந்தது. இதை, இரண்டாமாண்டு சமாளித்ததன் பலன் யூபிஎஸ்சி தேர்வில் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

அடுத்தகட்டமாக கோவில்பட்டி ஆர்.கே.நகரிலுள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை 2006-ல் கருப்பசாமி முடித்தார். வளாக நேர்முகத் தேர்வில் வாய்ப்பில்லை என்பதால் சென்னையில் ஒரு சிறிய நிறுவனத்தில் 6 மாதங்கள் பணியாற்றினார். பிறகு டிசிஎஸ் பெருநிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியபோது நடந்த ஒரு நிகழ்வு கருப்பசாமிக்கு யூபிஎஸ்சியை அறிமுகப்படுத்தியது.

சில்லறை இல்லாததால் கிடைத்த வாய்ப்பு

இது குறித்து கோழிக்கோடு ஊரகப்பகுதி எஸ்பியான கருப்பசாமி கூறும்போது, “எங்களுடன் அறையில் தங்கிய ஐவரில் ஒருவரான கோபி, தபால்நிலையத்தில் ரூ.100 கொடுத்து ரூ.20-ல்யூபிஎஸ்சி விண்ணப்பம் வாங்கினார். தபால் நிலைய ஊழியர்களிடம் சில்லறை இல்லாததால் ஐந்து விண்ணப்பங்களாக வாங்கி விட்டார். அதை வீணடிக்காமல் விண்ணப்பிக்கலாமே என்ற நண்பரது ஆலோசனையால் மற்ற நால்வரும் ஏற்றோம். இதன் பிறகுதான் நான் யூபிஎஸ்சி பற்றி அறிந்தேன்” எனத் தெரிவித்தார்.

முதல்முறையாக பெயரளவில் தேர்வெழுதச் சென்ற கருப்பசாமிக்கு மற்றவர்கள் தேர்வு எழுதிய சூழல் உண்மையான ஆர்வத்தை தூண்டியது. வேலைக்கு இடையே வார இறுதி நாட்களில் அதற்கான பயிற்சிக்கும் சென்றார். ஆனாலும் இரண்டு முறை பிரிலிம்ஸ் கூட வெல்ல முடியவில்லை.

பிறகு வேலையை 2009-ல் ராஜினாமா செய்தவர், நண்பர்களுடன் பயிற்சிக்காக டெல்லி சென்றார். அப்போது அவரது தந்தை இறந்து கோவில்பட்டிக்கு திரும்பியதால் பயிற்சி முழுமை பெறவில்லை. எனினும், மீண்டும் டெல்லி திரும்பி யூபிஎஸ்சியில் இறங்கியவருக்கு விருப்பப்பாடங்களாக தமிழ் இலக்கியமும், பொது நிர்வாகமும் இருந்தன. 2011-ல் நேர்முகத்தேர்வுவரை சென்றவருக்கு 20 மதிப்பெண் குறைவால் எதுவும் கிடைக்கவில்லை. பிறகு 2012-ல் பெற்ற ஐபிஎஸ் வெற்றியில் கேரளப் பிரிவின் அதிகாரியானார். சில ஆண்டுகள் கழித்து, மருத்துவம் பயின்ற ஜெயலலிதாவுடன் மணமாகி, ஷோபனா ராம் எனும் மகள் உள்ளனர்.

கைகொடுத்த அன்பாசிரியர்கள்

இது குறித்து கருப்பசாமி கூறும்போது, “எனது தாயும், அண்ணனும் அளித்த உற்சாகம், வெற்றி அடையும்வரை யூபிஎஸ்சி தேர்வை எழுத உந்தித்தள்ளியது. கோவில்பட்டி சுற்றுப்புற கிராமங்களில் அதிக விழிப்புணர்வு இல்லாமையால் பள்ளிக்கல்வியை தாண்டுபவர்களின் எண்ணிக்கையே குறைவு.படிப்பை பாதியிலேயே கைவிட்டு பணிக்கு செல்பவர்களை தடுத்து எங்களது அரசு பள்ளி ஆசிரியர்கள் உற்சாகப்படுத்தியது பெரும்பலன் அளித்தது.

இவர்களில் இயற்பியல் ஆசிரியர்வெங்கடேஸ்வரன், வேதியியல் ஆசிரியர் சீனிவாசன் மற்றும் கணித ஆசிரியர் ஐயப்பன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதிலும் ஆசிரியை மணிமேகலை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் அறிவியல் பாடத்தில் 90 மதிப்பெண் பெறுபவர்களுக்கு ரூ.100 சொந்த பணத்திலிருந்து பரிசளித்து தன் பணிக்காலம் முழுவதிலும் மாணவர்களை படிக்கத் தூண்டினார்” என நினைவு கூர்ந்தார்.

பள்ளிப்பாடங்களில் அதிக கவனம் செலுத்துவது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் என்பதற்கு உதாரணமாகி விட்டார் ஐபிஎஸ் அதிகாரியான கருப்பசாமி. அவரது காலத்தில் இல்லாத போட்டித்தேர்வுகள் மீதான விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. எனவே, மாணவர்கள் யூபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எழுதி அரசு அதிகாரிகளாக வேண்டும் என்பது அதிகாரி கருப்பசாமியின் விருப்பமாக உள்ளது.

தனக்கு வழங்கப்பட்ட ஐபிஎஸ் அடிப்படை பயிற்சியின் அங்கமாக இஸ்ரேல் நாட்டிற்கும் சென்றுவந்துள்ளார் அதிகாரி கருப்பசாமி. கேரள மாநிலம் இடுக்கியில் அதிகாரி கருப்புசாமி பணி செய்து வந்த காலத்தில் தனியாக வாழ்ந்து வந்த நடுத்தரவயது பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலையானார். அவர் மரணமடைந்து 4 நாட்களுக்கு பின்வந்த புகாரின் விசாரணையில் அப்பெண்ணின் உடல் அருகிலுள்ள வேறு ஒரு வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார் ஐபிஎஸ் கருப்பசாமி. அடுத்த 4 நாட்களில் கொலையாளியையும் கண்டுபிடித்து கைது செய்தார்.

இச்சம்பவத்தில் அதிகாரி கருப்பசாமியின் புலன் விசாரணையைப் பாராட்டி மத்திய உள்துறை அமைச்சகம் 2022-ல் விருது அளித்து அவரை கவுரவித்தது. இதுதவிர, மாநில அளவிலும் புலனாய்வுகளுக்கான மேலும் சில விருதுகளை பெற்றுள்ளார். 2018-ல் கேரளாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தின்போது அர்ப்பணிப்புடன் ஆற்றிய நிவாரணப்பணிக்காக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கையெழுத்திட்ட பாராட்டுப் பத்திரத்தையும் கருப்பசாமி பெற்றார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in