நகை சீட்டு மூலம் தங்கம் வாங்கலாமா?

நகை சீட்டு மூலம் தங்கம் வாங்கலாமா?
Updated on
2 min read

தங்கத்தில் முதலீடு செய்வது குறித்த கட்டுரைகளை வாசித்த ஆசிரியர் ஒருவர், “நகை சீட்டு திட்டத்தின் வாயிலாக தங்கத்தை சேமிக்கலாமா?'' என்று கேட்டார். இந்த அத்தியாயத்தில் நகை சீட்டு திட்டத்தின் சாதக, பாதகம் குறித்து பார்ப்போம்.

பெரும்பாலும் எல்லா நகைக் கடைகளிலும் தங்க ந‌கை சேமிப்பு திட்டம் வெவ்வேறு பெயர்களில் இருக்கிறது. முதலீட்டு நோக்கத்திற்காகவும், குடும்ப தேவைக்காகவும் பலரும் இதில் இணைகிறார்கள்.

இன்றைய தேதியில் தங்கம் விற்கும் விலைக்கு அதை மொத்தமாக வாங்க முடியாது என்பதால், இந்த திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. இந்த‌ திட்டத்தின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் வாங்கி சேமிக்கின்றனர்.

100 ரூபாயில் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய்வரை கூட நகைச் சீட்டு திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டுவார்கள். முதிர்வு காலத்துக்கு பிறகு, மொத்த தொகைக்கு ஈடாக தங்க நகையைக் வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த திட்டத்தில் சேர்ந்த உடன் பரிசுகள், முதல் மாத தொகை இலவசம், செய்கூலி, சேதாரம் இல்லை போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன‌.

திட்டத்தில் சேருவதற்கு முன்... நகை சீட்டு திட்டத்தில் சேருவதற்குமுன் முதலில் அந்த திட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதுபெரும்பாலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் அல்ல. தனியார் கடைகளால் நடத்தப்படுவதால் கடையின் நம்பகத்தன்மையை, திட்டத்தின் விதிமுறைகளை நன்றாக விசாரித்துக்கொள்ள வேண்டும்.

இந்த‌ திட்டத்தில் எத்தனை மாதம் பணம் கட்ட வேண்டும்? முதிர்வடைந்த உடனே, தரமான‌ நகையை சரியாக கொடுக்கிறார்களா? பணமாக கொடுக்கிறார்களா? இடையில் பணம் கட்டாமல் போனால், அதுவரை கட்டிய‌ பணம் என்னவாகும்? எந்த மாதிரியான நகைகளை வாங்க முடியும்? வாங்கும் நகைக்கு செய்கூலி சேதாரம் செலுத்த வேண்டுமா? என்பதையெல்லாம் ஆராய வேண்டும். நகை சீட்டு திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற இயலாது. நகையாக மட்டுமே வாங்க முடியும்.

பெரிய கடைகளை பரிசீலிக்கலாம்

சிறிய கடைகளை காட்டிலும், பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஓரளவு பாதுகாப்பு இருக்கிறது. மேலும் அங்கு அதிக டிசைன் கொண்ட நகைகள் வாங்கலாம். இந்த கடைகளில் 2 வகையான நகை சேமிப்பு திட்டங்கள் இருக்கின்ற‌ன. ஒன்று வாடிக்கையாளர் செலுத்தும் தொகையின் மதிப்பில் (அன்றைய விலைக்கு) நகையை வாங்குவது, மற்றொன்று ஒவ்வொரு மாதமும் செலுத்தும் தொகைக்கு ஏற்ற‌ தங்கத்தின் எடை மதிப்பில் நகை வாங்குவது ஆகும். ஆகையால் இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் பாரம்பரியம் வாய்ந்த பெரிய நகை கடைகளை பரிசீலிக்க‌லாம்.

பெரும்பாலான கடைகளில் நகை சீட்டு திட்டத்தின் கால அளவு 11 மாதங்களாக நிர்ணயிக்கப்படுகிறது. 18 சதவீதம் வரையிலான சேதாரம் கொண்ட ஆபரணங்களுக்கு செய்கூலி, சேதாரம் வசூலிக்கப்படுவதில்லை. 18 சதவீத‌த்துக்கு மேல் சேதாரம் இருக்கும் நகைகளை தேர்ந்தெடுக்கும்போது, கையிலிருந்து பணத்தை செலுத்த வேண்டியிருக்கும். ஆண்டிக் நகைகள் வாங்கும்போது இந்த சிக்கல் இருக்கும்.

நாணயமாகவோ, கட்டியாகவோ வாங்கினால் ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவற்றை கடைக்காரர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்த வரி மிகவும் சொற்பமானது என்பதால் வாடிக்கையாளர்களுக்கு பெரிய லாபம் இல்லை. அதேவேளையில் ஆபரணமாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் இல்லாததால் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். நகை வாங்கும்போது 22 கேரட் தங்கமா? 916 தர சான்று அளிக்கப்பட்டதா? ஹால்மார்க் முத்திரை, கடையின் முத்திரை ஆகியவை இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்க‌ வேண்டும்.

நகை சீட்டு லாபகரமான முதலீடா?

முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தை வாங்குவோருக்கு இந்த சேமிப்பு திட்டம் சிறந்தது அல்ல. பிள்ளைகளின் திருமணம் போன்ற எதிர்காலத் தேவைக்காக தங்கத்தைச் சிறிது சிறிதாக சேர்ப்பதும் புத்திசாலித்தனமான முடிவு என்றும் கூற முடியாது. ஏனெனில் தங்கத்தில் இருந்து பெரிதாக எந்த ரிட்டர்னும் இல்லை. 1981 முதல் 2020 வரை தங்கத்தின் விலை ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற அளவிலே அதிகரித்திருக்கிற‌து.

நகை சீட்டு திட்டத்தை மாதந்தோறும் சேமிக்கும் பிற‌ முதலீட்டு திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வங்கியில் மாதந்தோறும் ஆர்.டி. செலுத்தினாலோ, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி. முறையில் மாதந்தோறும் முதலீடு செய்தாலோ, இதனைவிட அதிக லாபம் கிடைக்கும். அவ்வாறு சேமித்த பணத்தைக் கொண்டு நகை தேவைப்படும்போது வாங்கினால் லாபகர‌மாக இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதேவேளையில் முதலீடு பற்றிய விழிப்புணர்வு இல்லாத‌ ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தை சேகரிக்க நகை சீட்டு திட்டத்தை பரிசீலிக்கலாம்.

(தொடரும்)

- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in