

“என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் திவ்யா, பாக்கெட்ல அரிசியை வைச்சுட்டு, அதை அடிக்கடி சாப்பிடறா...சாக்பீஸ், மண் இதெல்லாம் வேற சாப்பிடறா... என்ன பண்றது டாக்டர்?" என்று தனது தோழிக்காக இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார் எட்டாம் வகுப்பு காவ்யா.
சமைக்கப்படாத அரிசி, சாக்பீஸ், மண் மட்டுமல்ல கரி, திருநீறு, செங்கல், சாம்பல், ஐஸ்கட்டி, கற்பூரம், பேஸ்ட், பவுடர், பேப்பர் என நீளும் இந்தப் பட்டியல், திவ்யாவைப் போலவே நம்மில் பலரிடம் காணப்படுகிறதல்லவா? இது சரிதானா? ‘PICA' என அழைக்கப்படும் இந்தப் பழக்கத்தை ஒருவிதமான உண்ணுதல் கோளாறு என்கிறனர் மனநல மருத்துவர்கள். இதனை மனவியல் சார்ந்த ஒரு நோயாகத்தான் குறிப்பிடுகிறார்கள்.
பைக்கா (pica) என்னும் இந்தச் சொல் உண்மையில் லத்தீன் மொழியில் மேக்பை (Magpie) குருவியைக் குறிப்பதாகும். காகம் வகையைச் சார்ந்த அனைத்துண்ணியான இந்த மேக்பை பறவைகள் பழங்கள், பூச்சிகள், அடுத்த பறவைகளின் முட்டைகள், இறந்த மிருகங்கள் என எதை வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உண்ணும் பழக்கம் கொண்டவை. ஆகவேதான் இந்த வகையான பழக்கத்தை பைக்கா என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உடலா, மனமா?
சமைக்கப்படாத அரிசி, தானியங்கள், பயறுகள், ஐஸ்கட்டி போன்ற உண்ணும் பொருட்களுடன், கற்பூரம், பேப்பர், பெயிண்ட், பவுடர், முடி, ஊசி போன்ற உண்ணத் தகாத பொருட்களையும் உண்ணத் துடிக்கும் இந்த ஆர்வம் ஒருவகையான உணவுக் கோளாறுதான் (Eating Disorders). பெற்றோரின் அன்பு மற்றும் அரவணைப்புக் குறைவுகளால் ஏற்படும் பாதுகாப்பற்ற உணர்வு, குடும்ப உணவுப் பழக்கங்களில் உள்ள குறைபாடுகள், ரத்தசோகை, மனவளர்ச்சிக் குறைபாடு போன்ற பல காரணங்களால் இது போன்ற எதையும் உண்ணும் தூண்டுதலும் பிறகு அதுவே பழக்கமாகவும் நீடிக்கிறது.
ஒரு மாதத்திற்கு மேலும் பைக்கா தொடர்ந்து காணப்படுமேயானால் மருத்துவ ஆலோசனை நிச்சயம் தேவைப்படுகிறது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. சாதாரணமாக இதை மனவியல் சார்ந்த கோளாறு என்று மனவியலாளர்கள் வரையறுத்தாலும் உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் ஊட்டச்சத்து குறைவான உணவை சாப்பிடுவதே முதன்மையான காரணம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
பருவப்பெண்ணுக்கு வருவது எதனால்?
உதாரணமாக, உணவு தேவைப்படும்போது பசிப்பது போல, நீர் தேவைப்படும்போது தாகம் எடுப்பது போல, உண்ணும் உணவில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் குறைபாடுகள் காணப்படும்போது நமது உடல் கொடுக்கும் சமிக்ஞையே உணவு அல்லாதவற்றை, அதாவது மண் அல்லது சாக்பீஸ் போன்றவற்றை உண்ணத் தூண்டும் ஆசை என்று கூறப்படுகிறது.
இந்த உணர்வு தவழும் குழந்தைகள் மற்றும்கர்ப்பிணிப் பெண்களிடையே காணப்படுவது இயல்பானது. ஆனால், தற்காலிகமான ஒன்றுதான் என்றிருக்க, வளரும் நாடுகளில் பருவப்பெண்களிடமும் இது அதிகம் காணப்படுகிறது என்கிறது புள்ளிவிவரம். அதிலும் ஊட்டச்சத்து குறைபாட்டில் முக்கியமானது இரும்புச்சத்து குறைபாடுதான்.
பொதுவாக நம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச்சத்து நம் உணவின் மூலம் போதுமான அளவு கிடைப்பதில்லை. இதனால் நமது இரும்புச்சத்து தேவையை நமது உடல் ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் தனது சேமிப்பிலிருந்து (Ferritin stores) ஆரம்பத்தில் எடுத்துக் கொள்கிறது.
அப்படி எடுத்துக்கொள்ளும்போது ஏற்கெனவே இருக்கும் உடலின் சேமிப்பு குறைவாக இருந்தாலோ, அல்லது தினசரி உணவில் இரும்பின் பற்றாக்குறை தொடர்ந்து இருக்கும்போதோ, பருவப்பெண்களுக்கு இவ்வாறு ஏற்படும் பற்றாக்குறை, மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கால் இன்னும் அதிகமாகிவிடுகிறது.
இதனாலேயே இந்த வயதுப் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு வெகு எளிதாக ஏற்படுவதுடன், இதன் வெளிப்பாடாக திவ்யாவைப் போல சாக்-பீஸ், அரிசி உள்ளிட்டவற்றை உண்ணத்தோன்றும் பைக்காவாகவும் வெளிப்படுகிறது. இதில் வேதனை என்னவென்றால் இப்படி பற்றாக்குறைக்காகச் சாப்பிடும் பொருட்களே சமயங்களில் குடலில் புழுக்களையும், காயங்களையும் ஏற்படுத்தி, அவை ரத்த சோகையை இன்னும் அதிகரித்துவிடுவதுடன், இந்த இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சோகை, பைக்கா வட்டத்தை தொடரச் செய்து விடுகிறது (vicious cycle) என்பதுதான்.
(ஆலோசனைகள் தொடரும்.)
- கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com