கையருகே கிரீடம் - 24: எல்லையில் ராணுவச் சாலைகள் அமைக்க ஆசையா?

கையருகே கிரீடம் - 24: எல்லையில் ராணுவச் சாலைகள் அமைக்க ஆசையா?
Updated on
2 min read

நாட்டின் எல்லைப்பகுதிகளில் சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள், ஓடுதளங்கள் என தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள், தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சாரமாக விளங்குகின்றன. எல்லைப்பகுதியில் வாழும் மக்களின் அன்றாட தேவைகளுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இத்தகைய கட்டமைப்புகள் இன்றியமையாதவை. இந்த கட்டுமானங்களை அமைத்து ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சேவையாற்றும் நிறுவனம், ‘எல்லை சாலைகள் நிறுவனம்’ (Border Roads Organisation-BRO).

எல்லை சாலைகள் நிறுவனம்: பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான பி.ஆர்.ஓ., சாலைகள், பாலங்களை இந்திய எல்லைகளில் மட்டுமின்றி, பூடான், இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளிலும் அமைத்திருக்கிறது. கட்டுமானங்களை அமைப்பதோடு அவற்றை பராமரிக்கும் பணியையும் நிறைவேற்றுகிறது பி.ஆர்.ஓ. உதாரணமாக, பனிமலைப் பிரதேசத்தில் சாலைகள் அமைப்பதோடு, சாலையில் படியும் பனியையும் நாள்தோறும் அகற்றும் வேலையையும் செய்கிறது இந்த நிறுவனம்.

இது போலவே காட்டாறுகளின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலங்கள், எல்லைப் பகுதிகளின் ஓடுபாதைகள் உள்ளிட்ட கட்டுமானங்களையும் பராமரிக்கிறது. இமய மலையின் பீர்பஞ்சல் மலைத்தொடர்களின் குறுக்கே ஏறக்குறைய 9 கி.மீ. நீள அடல் சுரங்கப்பாதை, இந்த நிறுவனத்தின் ஒரு பொறியியல் சாதனையாகும்.

பி.ஆர்.ஓ. வேலைவாய்ப்புகள்: பொறியியல் பணிகளில் ஈடுபடுவதால் பி.ஆர்.ஓ. நிறுவனத்தில் பெரும்பாலும் பொறியியல் துறை சார்ந்த பணியிடங்களே அதிகம். பொறியியல் பட்டதாரிகள் அதிகாரிகளாக இந்நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கட்டுமான பொறியியல், இயந்திரப் பொறியியல், மின் பொறியியல் ஆகிய துறைகளில் பி.இ., பி.டெக்., பட்டம் பெற்றவர்கள், யூபிஎஸ்சி நடத்தும் இந்திய பொறியியல் பணிகள் (Indian Engineering Services-IES) தேர்வின் மூலம், உதவி செயல் பொறியாளராக (Assistant Executive Engineer-AEE) இந்த நிறுவனத்தில் பணிக்கு சேரலாம். முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.

இது தவிர பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC) நடத்தும் இளநிலை பொறியாளர் தேர்வில் வெற்றி பெறுபவர்களும் இளநிலை அதிகாரிகளாக பி.ஆர்.ஓ. நிறுவனத்தில் பணியாற்றலாம். பி.இ., பி.டெக்., பட்டம் பெற்றவர்கள் சில ஆண்டுகள் பணி அனுபவமுள்ள பட்டயப் (டிப்ளமோ) பொறியாளர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். ஆண்களும், பெண்களும் இத்தேர்வுகளில் பங்கேற்கலாம்.

கட்டுமான பொறியியல், இயந்திரப் பொறியியல், மின்பொறியியல் உள்ளிட்ட துறைகளின் உபப்பிரிவுகளில் ஐ.டி.ஐ (ITI) படிப்பை முடித்தவர்களும், பி.ஆர்.ஓ. நிறுவனத்தில் தொழில்நுட்பப் பணியாளர்களாக இணையலாம். இதற்கான தேர்வை பி.ஆர்.ஓ. நிறுவனமே நேரடியாக நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு www.bro.gov.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

எல்லை கட்டமைப்புகள்: ராணுவ வீரர்கள் தேசம் காக்க களமாடவும், பொதுமக்களின் அன்றாட வாழ்வை சுலபமாக்கவும், தங்களின் அறிவின் கூர்மையை பயன்படுத்தும் பி.ஆர்.ஓ. பொறியாளராக நீங்களும் நாட்டுக்கு சேவையாற்றலாம்.

ஆயுதத்தையும் அறிவாயுதத்தையும் ஒருங்கே பயன்படுத்தி நாடு காக்க வாழ்த்துகள்.

(கனவுகள் தொடரும்.)

- கட்டுரையாளர், ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in