

சைபர் வெளியில் அனைவருக்குமான ஒரு சிக்கல் இருக்கிறது என்றால் அது சைபர்புல்லியிங். புல்லியிங் (Bullying) என்றால் கேலி செய்வது, குறிப்பாக வன்மமாகக் கேலி செய்வது. டிஜிட்டல் சாதனங்களை புழங்குவது, இணையத்தில் உலவுவது, சமூக வலைத்தள பயன்பாடு போன்றவற்றில் மாணவர்கள் இன்று அதிகம் ஈடுபடுவதால் சைபர் புல்லியிங் பற்றிப் பேச வேண்டியதாக உள்ளது.
வாட்ஸ்அப் பயன்பாடு இன்று மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. வீட்டுப்பாடங்களைப் பகிர்ந்துகொள்ள, ஆசிரியர்களுடனும், சக நண்பர்களுடனும் தொடர்பில் இருக்க வாட்ஸ்அப் பயனுள்ளதாக இருக்கிறது. அதே நேரம், தங்களுக்குப் பிடிக்காத சக மாணவரைக் குழுவாகக் கேலி செய்யவும் இது ஒரு வசதியைத் தந்துவிடுகிறது.
இணையத்தின் நோக்கம் தகவல் பகிர்வுதான். அதன் காரணமாக நம் கருத்துக்களைப் பகிரும் வசதி உள்ளது. ஆனால், மற்றவர்களை வசை பாடுவதும், கேலி செய்வதும், அவதூறு பரப்பவும் அது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
பல மாணவர்கள் சைபர் புல்லியிங் காரணமாக படிப்பில் ஆர்வம் இழப்பது முதல், தற்கொலை செய்துகொள்வது வரை விபரீதம் நீள்கிறது. உயிர் போன பின் பிற மாணவர்கள் வருந்தி என்ன பயன்?
பள்ளிகளை உலுக்கும் சிக்கல்: உடல் ரீதியான கேலிகள், அவதூறுகள், பொய்கள், வெறுப்பு என அனைத்தும் சக நண்பர்களாலேயே உமிழப்படுவதை எந்த மனம் தாங்கிக் கொள்ளும்? பள்ளிகளில் சைபர் புல்லியிங் இன்று பெரும் பிரச்சனையாகி வருகிறது. அமெரிக்கா முதலான நாடுகளில் சைபர் புல்லியிங் பற்றி மிகச் சீரான விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்தப்படுகிறது.
தங்கள் நண்பர்களை இழக்க நேரிடும் என்பதாலேயே சைபர் புல்லியிங்கை பல மாணவர்கள் சகித்துக் கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆரம்பத்திலேயே இதனை சைபர் புல்லியிங் கிள்ளி எறியப்படாவிட்டால் பிறகு பாதிக்கப்பட்ட மாணவரின் உயிரைக் குடித்துவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அமைதியான சுபாவம் கொண்ட மாணவர்கள் கூட நட்பு குழுவிலிருந்து தாம் விலக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்கிற அச்சத்தில் சைபர் புல்லியிங் செய்யும் மாணவர்களோடு சேர்ந்து கொண்டு சீண்டுவது அல்லது நடக்கும் அக்கிரமத்தைத் தட்டிக் கேட்காமல் அனுமதிப்பது நடந்தேறுகிறது.
மாணவர்கள் ஒரு அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டும். சைபர் புல்லியிங் எந்த விதத்திலும் நன்மை தரப்போவதில்லை. அப்படி அதில் ஈடுபடும் மாணவர்களை ஆரம்பத்திலேயே திருத்திவிடவும் வாய்ப்புள்ளது. அதைக் கண்டு கொள்ளாமல் விடுவதால் சைபர் புல்லியிங் செய்யும் மாணவர்கள் பின்நாட்களில் பல மனச் சிக்கலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இது இரு பக்க கத்தி, சைபர் புல்லியிங் செய்யும் நபரையும், செய்யப்படும் நபரையும் பலி வாங்கும் கத்தி.
(தொடர்ந்து பேசுவோம்)
- கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர், தொடர்புக்கு: write2vinod11@gmail.com