மகத்தான மருத்துவர்கள் - 23: மற்றுமொரு போதி தர்மர் டாக்டர் துவாரகநாத்
இந்தியாவிலிருந்து சீனா சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்த ஒருவருக்கு சீன அரசு சிலை வைத்துக் கொண்டாடி வருகிறது. அவர் பெயர் என்ன? என்று கேட்டால் போதி தர்மர் என்று பதில் சட்டென பலர் சொல்லிவிடுவோம். அதையே மும்பையில் கேட்டால் துவாரகநாத் கோட்னிஸ் என்கிறார்கள்.
ஆம், தெற்கே பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்து போதி தர்மர் போனது போலவே, வடக்கே சுதந்திரப் போராட்ட சமயத்தில் சீனாவுக்கு உதவச் சென்று போதிதர்மர் போலவே அங்கேயே வாழ்ந்து, அங்கேயே மடிந்த மற்றுமொரு மனிதர்தான் டாக்டர் துவாரகநாத்.
மகாராஷ்டிரா சோலாப்பூர் நகரில் 1910 அக்டோபர் 10-ம் தேதி நடுத்தர குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் துவாரகநாத் கோட்னிஸ். சிறுவயதிலிருந்தே படிப்பில் சிறந்து விளங்கிய அவர் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வியில் முதன்மை நிலையில் தேர்ச்சி பெற்றார்.
மும்பையில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட சேத் ஜி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற துவாரகநாத், அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கினார். மருத்துவரான பின்னர், 1938-ல் அறுவை சிகிச்சை மேற்படிப்புக்காக விண்ணப்பித்துக் காத்திருந்தபோது அவருக்கு வந்தது வேறொரு செய்தி.
நட்பு நாட்டுக்கு மருத்துவ உதவி: நடந்துகொண்டிருந்த சீன – ஜப்பான் போரில் மிகவும் பாதிக்கப்பட்ட சீனா, தனது வீரர்களைக் காக்க போதுமான மருத்துவர்கள் இல்லாததால் உலக நாடுகளிடம் உதவி கோரியது. அப்போதைய சீன முதல்வரான ஜெனரல் ஜூ டே இந்திய தேசியக் காங்கிரஸ்(Indian National Congress) கட்சித் தலைவர்களான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும்ஜவஹர்லால் நேருவுக்கு கடிதம் எழுதி உதவி நாடினார்.
அந்தத் தகவல் மருத்துவர்களிடையே அறிவிக்கப்பட, ஏற்கெனவே புதியஇடங்களுக்குச் செல்லவும் புதிய மருத்துவத்தைக் கற்கவும் ஆர்வத்துடன் இருந்த டாக்டர் துவாரகநாத் முன்வந்தார். போர்ச்சூழலில் அங்கே செல்வதை குடும்பமே எதிர்த்தாலும், தந்தை சாந்தாராம் ஒப்புதல் அளித்தவுடன் துணிந்து புறப்பட்டார் துவாரகநாத்.
சுதந்திரத்திற்காகப் பாடுபடும் ஒரு நாடு, தனது நட்பு நாட்டின் சுதந்திரத்திற்கு உதவுகிறது என்று அறைகூவல் எழுப்பினார் ஐஎன்சியின் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஒரு ஆம்புலன்ஸ் வாகனம், 22,000 ரூபாய் ரொக்கத்துடன் டாக்டர் அடல்தலைமையில் சீன மக்களுக்கு உதவும் இந்திய மருத்துவக் குழுவில் டாக்டர் சோல்கர்,டாக்டர் பாசு, டாக்டர் முகர்ஜி மற்றும் டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ் ஆகியோரை அனுப்பி வைத்தார். அவர்களை வழியனுப்பிய சரோஜினி நாயுடு, இந்திய மக்களும் சீன மக்களும் சகோதரர்கள் என்று கூறினார். அப்படி ஐவரில் ஒருவராக சீனாவின் வூஹான் நகரிலிருந்த யானான் போர் தளத்தை 1939-ல் அடைந்தார் துவாரகநாத்.
மலையிலும் பனியிலும்: சீனாவின் போர்முனையில் பணி என்பதால் ஆரம்பம் முதலே துவாரகநாத்துக்கு பணி அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான சீன வீரர்களுக்கு ஒரே சமயத்தில் சிகிச்சை அளிக்கவேண்டியிருந்தது. சமயங்களில் ஜப்பானின் வான்வழித் தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பியது போன்ற நிகழ்வுகள் நடந்தாலும், துளியும் பயமின்றி எட்டாவது வழி இராணுவப்படை (Eighth Route Army) எனும் சிறப்புப் போர்ப்படையை வழிநடத்திய மாவோ ஜிடாங்குடன் இணைந்து மலைகளிலும் பனிகளிலும் தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் துவாரகநாத்.
அதேசமயத்தில் கனடாவின் நார்மன் பெத்தூன், அமெரிக்காவின் ஜார்ஜ் ஹேட்டம் என பல்வேறு நாட்டு மருத்துவர்கள், போர் வீரர்களுக்கு அளித்துவந்த நவீன மருத்துவத்தைக் கவனித்த துவாரகநாத், டாக்டர் நார்மன் பெத்தூன் அவர்களின் சிகிச்சை முறையால் ஈர்க்கப்பட்டு, பின்னர் அவரது வழிமுறைகளையே பின்பற்றி மருத்துவம் புரிந்தார். காயமுற்றவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்றாலும் பாகுபாடின்றி சிகிச்சை அளித்தவர் டாக்டர் துவாரகநாத் என்பதுடன் வலியின்றி சிகிச்சை அளிப்பதிலும் மற்ற மருத்துவர்களைக் காட்டிலும் சிறந்து விளங்கினார் என்று கூறப்படுகிறது.
ஒரு மருத்துவராக சீனர்களுக்கு உதவச் சென்ற துவாரகநாத்துக்கு சீனாவையும், சீனர்களையும் மிகவும் பிடித்துப்போனது. போர் வீரர்களுக்குத் தனது உணவைப் பகிர்ந்தளிப்பது, தேவைப்படும்போது தனது குளிர்கால உடைகளை மற்றவர்களுக்கு வழங்குவது, தனது குதிரையை அத்தியாவசியத் தேவைகளுக்காக வீரர்களுக்கு அளிப்பது என்று கரிசனத்துடன் செயல்பட்டார் துவாரகநாத். இத்தகைய இரக்கக்குணத்துடன் தங்களுடன் பழகிய துவாரகநாத்தை சீனர்களுக்கும் எளிதில் பிடித்துப் போனது. சென்ற சில காலத்திலேயே சீன மொழியைக் கற்றுக் கொண்டதுடன், அதில் சரளமாகப் பேசவும் எழுதவும் ஆரம்பித்த டாக்டர் துவாரகநாத் மாண்டரின் மொழியில் மக்களிடையே ஆரோக்கியம் குறித்து உரையாற்றியும் செயல்பட்டும் வந்தார். (டாக்டர் துவாரகநாத்தின் மகிமை தொடரும்) கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
