

ஒல்லியான உடல்வாகு கொண்ட மாணவனான அவனை சக தோழர்கள் ரசிக்க, ரசிக்க ஆசிரியர் அடிக்கிறார். அடியோடு மட்டுமல்லாமல் குழுப்பாடல் போன்ற ஏற்பாடும் இதனோடு சேர்கிறது. இவ்வாறு ஒருமுறையல்ல பலமுறை நடைபெறுகிறது. ஒருவகையில் குழுக்கேலி போன்றது. ஒருபக்கம் வலி. மறுபக்கம் அவமானம் என்ன செய்வான் அந்த மாணவன். இப்படிப்பட்ட மோசமான பள்ளி வாழ்க்கை அவனுக்கு அமைந்தது.
இதே மாணவன் பின்னாளில் வாயுக்களைப் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொள்கிறார். ஒரு முறை தமது நண்பர்களுடன் நைட்ரஸ் ஆக்சைடு வாயு தொடர்பான ஆய்வினை மேற்கொள்கிறார். அப்போது ஒரு நண்பர் தமது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் நடனமாடத் தொடங்குகிறார். மற்றொரு நண்பர் அந்த விஞ்ஞானியின் மண்டையில் தடியால் அடிக்கிறார். மற்றொரு பெண் நண்பர் வெடிச்சிரிப்பால் பாதிக்கப்பட்டு விஞ்ஞானியின் வீட்டை விட்டு சுவர் மேலேறி எகிறி குதித்து ஓடுகிறார். அப்போது அங்கிருந்த நாயைத் தொந்தரவு செய்ய அது அவரைத் துரத்த அவர் இன்னும் வேகமாக ஓட்டம் பிடிக்கிறார். இப்படி ஆசிரியரால் அவமானப்படுத்தப்பட்ட மாணவனும், நைட்ரஸ் வாயுவின் குணத்தைக் கண்டறிந்தவரும் வேறு யாருமல்ல சர் ஹம்ப்ரி டேவி (1778-1829).
இழப்பால் கிடைத்த வாய்ப்பு: இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்னுடமிடத்தில் ஹம்ப்ரி டேவி பிறந்தார். வீட்டில் ஆறாவதாக பிறந்த கடைக்குட்டி இவர் படிப்பில் படுசுட்டி. சிறுவயதிலேயே பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து பார்க்கும் மனப்பான்மை கொண்டவர். பக்கத்து வீட்டுக்காரரான கார்னிஷ் சேடல்லர் வீட்டு உபயோக சாதனங்களைப் பழுதுபார்ப்பவர். அவர் பழுது நீக்குவதைக் கவனிக்கவே ஹம்ப்ரி டேவியின் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரித்தது.
ஹம்ப்ரி டேவி பதின்ம வயதை எட்டியபோது தந்தை மரணிக்கவே மருத்துவரிடம் உதவியாளராக சேர்ந்தார். இதனால் மருத்துவம் பயிலும் ஆர்வமும் மேலிட்டது. ஆனால் அது நனவாகவில்லை. பின்னர் மருந்தாளராக ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நல்வாய்ப்பாக அந்த நிர்வாகத்தினர் இவருக்கு பல்வேறு ஆய்வுகளைச் செய்து பார்க்கவும் உதவினர்.
வாசிப்புப் பழக்கம் இயல்பிலேயே இவருக்கு இருந்தது. பின்னாளில் பிரிஸ்டோல் என்ற இடத்துக்குச் சென்று வாயுக்களைப் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பணி மிகவும் பிடித்துப்போகவே பல்வேறு வாயுக்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த காலகட்டத்தில்தான் நைட்ரஸ் ஆக்சைடு தொடர்பான சம்பவம் நடந்தது.
பாராட்டு தட்டிச்சென்ற பாரடே: மேலும் வெப்பம், ஓளி தொடர்பான ஆய்வுகளையும் இவர் மேற்கொண்டார். இவர்து ஆய்வுத் திறமையைப் பார்த்து ராயல் நிறுவனம் இவரை பணியில் அமர்த்திக் கொண்டது. இங்கு அவர் பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அருமையான எளிமையான மொழிநடையில் இருந்த இவரது சொற்பொழிவு பலரையும் ஈர்த்தது. ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து வருகை புரியத் தொடங்கினர். அறிவியல் சாராத நபர்கள் கூட வந்தனர் என்றால் பாருங்களேன். அப்படி ஒருமுறை வந்து இவரது சொற்பொழிவைப் படி எடுத்துப் பாராட்டு பெற்றவர்தான் மைக்கேல் பாரடே.
பின்னாளில் பாரடே இவரிடமே உதவியாளராக சேர இந்த சந்திப்பு துணை புரிந்தது.
இவரது காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகளும் சுரங்கங்களும் இயங்கின. சுரங்க பணிகளில் ஈடுபடுவோர், சுரங்கங்களில் இயல்பாகவே நிலவும் இருளால் பாதிக்கப்பட்டனர். இருளைப் போக்க தொழிலாளர்கள் கொண்டு செல்லும் விளக்குகள் சுரங்கங்களில் கசியும் பல்வேறு வாயுக்களால் தீப்பிடித்துக் கொள்ள விபத்துகள் தொடர்கதையானது.
ஹம்ப்ரி டேவி இவ்வாறு தீப்பிடிக்காத ஒரு விளக்கினை வடிவமைத்து சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் விளக்கேற்றிவைத்தார். மேலும் சோடியம், பொட்டாசியம், குளோரின், அயோடின் போன்றவை தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டார். இவர் ஒரு கவிஞரும் கூட. நைட்ரஸ் ஆக்சைடை உட்கொண்ட பின்னர் கவிதை எழுதினால் எனக்கு தரமான கவிதைகள் வருவதில்லை என்றும் இவர் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். - கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com