

தமிழகத்தில் முன்னர் வெகு சில இடங்களில் மட்டுமே புத்தகக் காட்சிகள் நடைபெறும். கடந்த சில வருடங்களாக தமிழகத்தின் சிறு நகரங்களில் எல்லாம் புத்தகக் காட்சிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. வரும் 6-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை சென்னை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. அதிலும் மூன்று தினங்களுக்கு சர்வதேச புத்தகக் காட்சி நடைபெறவிருப்பதும் அதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவிருப்பதும் கூடுதல் சிறப்பு.
புத்தகக் காட்சிகளுக்கு செல்வது புத்தகங்களை வாங்குவதற்காக மட்டுமல்ல. அது ஒரு செயல்பாடு. புத்தகக் காட்சி ஏற்படுத்தும் தாக்கம் பிரம்மாண்டமானது. அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் வழியாக ஒரு பிரம்மாண்ட உலகம் அறிமுகமாகும். சிறிய அளவிலான முன் தயாரிப்புடன் புத்தகக் காட்சிக்கு சென்றால் அந்த அனுபவத்தைத் திருப்புமுனையாக மாற்றிக் கொள்ளலாம்.
கண்காட்சிக்கு முன்: கண்காட்சி எப்போது நடக்கிறது, எங்கு நடக்கிறது, யாருடன் செல்வது (பள்ளிகளும் அழைத்துச் செல்கின்றன), எத்தனை முறை செல்வது என திட்டமிட்டுக் கொள்ளவும். நண்பர்களுடன் இணைந்து செல்வதும் இன்னும் மகிழ்வான நினைவாக மாற்றும்.
கண்காட்சியில் எவ்வளவு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கப் போகிறீர்கள்? அதற்கான சேமிப்பு, பெற்றோரிடம் முன்னதாகவே கோரிக்கை ஆகியவற்றில் ஈடுபடவும். கண்காட்சி விவரங்கள் எங்கேனும் கிடைத்தால் பள்ளிக்கும், ஆர்வமிக்க ஆசிரியருக்குத் தெரியப்படுத்தி பள்ளியை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யலாம். வாசிப்பு கூட்டணி அணியினை உருவாக்குங்கள்.
கண்காட்சியில்...
பார்த்தவுடனே புத்தகங்களை வாங்க வேண்டாம். முழு கண்காட்சியையும் ஒரு சுற்று சுற்றி வந்த பிறகே புத்தகங்களை வாங்கவும். முதல் சுற்றில் என்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என நினைக்கின்றீர்களோ அதனைக் குறித்துக் கொள்ளுங்கள். முழுமையாக பார்த்தால் மட்டுமே உங்கள் விருப்பமான புத்தகத்தினை தேர்ந்து எடுக்க இயலும்.
தலைப்புகளை எல்லாம் பாருங்கள். அதுவே சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். புத்தக வகைமைகளை நோட்டம் விடுங்கள். கதைகள், கட்டுரைகள், நாவல்கள், படக்கதைகள், காமிக்ஸ், அறிவியல் புத்தகங்கள், பாடல்கள், ஓவியம் சொல்லித்தரும் புத்தகங்கள், பழங்கதைகள், க்ளாஸிக் புத்தகங்கள், ஆங்கிலப் புத்தகங்கள், இதழ்கள் என வகைவகையாக இருக்கும்.
விரல்கள் எப்படி ஒரே மாதிரி இருப்பதில்லையோ அதேபோல ஒவ்வொருவரின் ரசனையும் வேறுவேறாக இருக்கும். யாரோ ஒருவர் ஒரு புத்தகத்தை குறிப்பிட்டுச் சொல்லிவிட்டார் என அப்படியே வாங்கிவிட வேண்டாம். புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து இதனை முழுமையாக வாசிப்போமா, இது நம் ரசனைக்கு ஏற்றவாறு இருக்கிறதா என ஒருமுறை ஆராய்ந்து பின்னர் வாங்கலாம்.
உங்கள் வீட்டில், பள்ளி நூலகத்தில், அருகில் உள்ள நூலகத்தில் பார்க்காத வகைமைகள், அட்டைப்படங்கள், புதிய தலைப்புகளில் இங்கே புத்தகங்கள் கிடைக்கும். அவற்றை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். நூலகத்தில் எல்லாமே கிடைத்து விடாது,இவை அதனைவிட இன்னும் விசாலமானவை.
உங்கள் நண்பர்களுடன் ஒரு சிறந்த கூட்டணிக்கு ஏற்பாடு செய்யுங்கள். யார்யார் என்னென்ன புத்தகங்கள் வாங்கஇருக்கிறீர்கள் என்று பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரே புத்தகத்தினை இருவர் வாங்குவதை தவிர்க்கலாம். பல வகையான புத்தகங்களை கூட்டாக வாங்கலாம். படித்துவிட்டுப் பகிர்ந்து கொள்ளவும் இது வசதியாக இருக்கும். ஆரம்பத்திலேயே இந்த திட்டத்தினைப் போடலாம்.
வாங்கிய புத்தகங்களைத் தூசிதட்ட மட்டும் எடுக்காமல் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக வாசிப்பதன் வழியாகத்தான் புத்தகக் காட்சிக்கு சென்று வருவதை ஒரு பேரனுபவமாக மாற்றலாம். (தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
தொடர்புக்கு: umanaths@gmail.com