கதை கேளு கதை கேளு - 22: எது உண்மையான அறிவு?

கதை கேளு கதை கேளு - 22: எது உண்மையான அறிவு?
Updated on
2 min read

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பது திரைப்படப் பாடல்.நீ உன்னை அறிந்தால் முதலில் உன்னை வெல்லலாம். பிறகு உலகையும் ஆளலாம் என்கிறது உளவியல் நிபுணர் கார்டனரின் தன்னிலை அறியும் திறன் கோட்பாடு. நம் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவது நியாயம்தான். நாம் எதை வெற்றியாக கருதுகிறோமோ அதில் அவர்கள் வெற்றியாளர்களாக வேண்டும் என்பதுதான் கொஞ்சம் இடறுகிறது.

மனித மூளையின் செயல்பாடு எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருக்காது என்கிறார் கார்டனர். யார் இந்த கார்டனர்? ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒன்பது விதமான புத்திக் கூர்மைகள் காணப்படுகின்றன. நபருக்கு நபர் இதன் சதவீதம் வேண்டுமானால் மாறுபடும். ஆனால் சந்தேகத்துக்கே இடமில்லாமல் அனைவரிடமும் பன்முக அறிவுத் திறன்கள் உள்ளன என 1983-ல் தன் ஆய்வுகள் மூலம் பன்முக அறிவுத்திறன்களை கண்டறிந்த அமெரிக்க உளவியல் நிபுணர்தான் ஹாவர்ட் கார்டனர்.

ஒன்பது அறிவுத்திறன்கள்

1. மொழித்திறன்

2. கணிதம் மற்றும் தர்க்கம் பற்றிய திறன்

3. இசைத்திறன்

4. காட்சி மற்றும் வெளித்திறன்

5. உடல்கூறு மற்றும் விளையாட்டுத்திறன்

6. மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன்

7. சிந்தனைத் திறன்

8. இயற்கை சார்ந்த திறன்

9. இருத்தல்சார் அறிவுத்திறன்

இந்த ஒன்பது வகையான திறன்களில் எந்த அறிவுத்திறன் நமக்கிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள சிறிய ஆய்வுமுறையை பன்முக அறிவுத்திறன்கள் புத்தகம் கொண்டுள்ளது.

ஆய்வின் முடிவில் பள்ளிக்கூடங்களில் எது நமக்கு வரவில்லை என்று கவலைப்பட்டோமோ, எதன் மீது நமக்கு இயல்பாகவே நாட்டம் இருந்ததோ அதற்கெல்லாம் காரணம் நம் மூளையின் செயல்பாட்டில் இருக்கும் பன்முக அறிவுத்திறன்தான் என்று காரணம் விளங்கும்.

ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமான வர். ஒவ்வொருவரிடத்திலும் பலவிதமான அறிவுத்திறன்கள் இருக்கின்றன எனதெரிந்த பின்பும் எல்லோரையும் ஒரே பார்வையில் அணுகுவது மிகவும் மோசமான நியாயமற்ற கல்வி முறை அல்லவா? பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்வதும், எழுதிக்காட்டுவதும் திறன் என நம்பப்பட்ட காலம் மாறிவருகிறது. கல்விக்கூடங்களில் பன்முக அறிவுத்திறன்கள் பற்றிய புரிதல் தற்போது வளர்ந்து வருகிறது.

கல்வி முறையில் மாற்றம்

தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், லியனார்டோ டாவின்ஸி என ஏராளமானோர் பள்ளிக்கூடங்களால் தோல்வியுற்றவர் என அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஒருவருடைய பலம் எதுவோ அதுவே அவர் கற்பதற்கான ஊடகம். அவருடைய பலவீனத்தின் வாயிலாக அவரால் பெரிதாக எதையும் கற்க முடியாது. ஹார்வர்ட் கார்டனரின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பு தற்போது கல்விமுறைகளில் மாற்றம் ஏற்பட்டு வருவதுடன், பெற்றோர், ஆசிரியர் என குழந்தைகளுடன் நெருக்கமானோர் குழந்தைகளை புரிந்துகொள்வதற்கான சூழ்நிலையும் மாறிவருகிறது.

புத்தக ஆசிரியர் ம.சுசித்ரா இந்நூலின் வழி கார்டனரின் பன்முக அறிவுத்திறன் பற்றிய செய்திகளை நமக்கு தெளிவாக விளங்க வைக்கிறார். ஒன்பது அறிவுத்திறன்கள் என்ன என்பதையும், இந்த விதமான திறன்கள் கொண்டிருந்தவர்களையும் அறிமுகப்படுத்துவது டன், அவர்கள் எல்லாம் பள்ளிக் கல்வியில் தோல்வியுற்றாலும், தன் திறனை தான் அறிந்துகொண்ட கணத்தில் பெற்ற வெற்றிகளையும் கூறி, நம்மை நாம் அறிதலின் முக்கியத்துவத்தை புத்தகம் முழுவதும் வலியுறுத்துகிறார். இந்த அறிவியல் மனப்பான்மையை நமக்கு சிறு சிறு கதைகள் மற்றும் உதாரண நபர்களை அடையாளம் காட்டி விளக்கிச் செல்வதன் மூலம் ஆர்வத்துடன் புத்தகத்தை வாசிக்க வைக்கிறார்.

கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் தோல்வியுற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டு வெளியேறுவதை மிகவும் சாடுகிறார். அவர்களின் திறனை அறிந்துகொள்ள எப்படியான வாய்ப்புகளை அமைத்து தந்திருக்கலாம் என வாழ்க்கைஉதாரணங்களோடு விளக்குகிறார். கற்றல்என்பது ராணுவப் பயிற்சி போல இறுக்கமான வடிவில் இயங்க வேண்டியதில்லை. ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனை ஆற்றலைக் கண்டறிந்து அதை மென்மேலும் வளர்த்தெடுப்பதுதானே சரியான கல்வி என்கிறார்.

மாற்றம் தேவை

ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்வதில் பின்னடைவு ஏற்படக் காரணம் அவருடைய கற்கும் ஆற்றலில் உள்ள குறைபாடு அல்ல. அவருக்கு அந்தப் பாடம்கற்பிக்கப்பட்ட முறையில்தான் சிக்கல் உள்ளது என்கிறார் கார்டனர். எல்லா மாணவர்களும் கற்க முடியும். ஆனால் ஒருதகவலைப் புரிந்துகொண்டு உள்வாங்கும் விதம் நபருக்கு நபர் வேறுபடும். அதேபோல நாம் பார்த்து வியக்கும் பல புத்திசாலிகளிடம் ஒன்பது அறிவுத்திறன்களில் ஒரு சில திறன்கள்தான் அபரிமிதமாக இருக்கும். அவர்களும் மற்ற திறன்களில் பின்தங்கித்தான் இருப்பார்கள். இது மீண்டும் மீண்டும் சோதிக்கப்பட்டு கார்டனரால் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மை.

கல்விக் கூடங்கள் கார்டனரின் இந்த ஆய்வுகளை களத்தில் செயல்படுத்தி பார்க்க வேண்டும். அவ்வாறு செயல்படுத்தும் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றியும் புத்தக ஆசிரியர் இந்நூலில் குறிப்பிடுகிறார்.

கட்டுரையாளர்:

குழந்தை நேய செயற்பாட்டாளர்,

ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,

திருப்புட்குழி, காஞ்சிபுரம்.

தொடர்புக்கு:udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in