

`வீட்டுக்கு விருந்தினர் வரும்போதெல்லாம் தனது நோட்டை எடுத்துக் காட்டுவாள் இன்பா. நோட்டில் பட்டாம்பூச்சிகள், ஊசி தட்டான், வண்டுகள், அரச மர இலை, ‘கட்டிப் போட்டா குட்டி போடும்’ பிரையோபில்லம் இலை போன்றவற்றைச் சேகரித்து ஒட்டி வைத்திருக்கிறாள். ஒவ்வொன்றின் அருகிலும் எங்கே எப்போது எடுத்தாள் என்கிற குறிப்பும் எழுதியிருக்கிறாள்.
இன்று காலையில், ஹேமா சித்தி வீட்டுக்கு வந்தார்கள். இன்பாவின் நோட்டைப் பார்த்ததும் “அஸ்வதா பிஜு பேசிய காணொளி இருக்கிறது, பார்க்கிறாயா?” என்று கேட்டார்கள். “யாரது?” என்ற கேள்வியுடன் ஆர்வமாக கேட்கத் தொடங்கினாள் இன்பா.
புத்தகமும் அருங்காட்சியகமும்
2007-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் அஸ்வதா பிஜு. இரண்டு வயதில் சிப்பிகளையும் உயிரினங்களின் ஓடுகளையும் சேகரிக்கத் தொடங்கினார். மகளின் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்த தந்தை, ஐந்து வயதில் The New Children’s Encyclopedia வாங்கிக் கொடுத்தார். ஒன்றும் புரியாவிட்டாலும் படங்களை விரும்பிப் பார்த்தார் அஸ்வதா. அதிலிருந்த ஒரு படம் அழகாக இருந்தது. மீண்டும் மீண்டும் பார்த்தார். கடலில் வாழ்கிறது என்று நினைத்தார். அதன் பெயர்அம்மோனைட். அது முற்றிலும் அழிந்துவிட்டது. அதன் புதைபடிவங்கள் மட்டும்தான் இருக்கின்றன. புதைபடிவம் என்பது, பாறைகளில் படிந்துள்ள பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவாழ்ந்த விலங்குகள் மற்றும் தாவரங்களின் எச்சங்கள் அல்லது தடயங்களாகும்.
புதைபடிமவியல் படிப்பு
அம்மோனைட் எப்படி இருந்திருக்கும் என்கிற ஆர்வம் அஸ்வதாவுக்கு அதிகரித்தது. எழும்பூர் அரசு அருங்காட்சியகத்துக்கு மகளை அழைத்துச் சென்றார் அம்மா. அம்மோனைட்டைப் பார்ப்பதற்காகவே ஏறக்குறைய 17 முறை அருங்காட்சியகத்துக்குச் சென்றார் அஸ்வதா. எங்கே எடுத்தார்கள்? எப்படி எடுத்தார்கள்? எத்தனை ஆண்டுகள் பழமையானது? எப்படி புதைபடிவம் உருவாகிறது? இதைப் பற்றியபடிப்பு இருக்கிறதா? என்று ஒவ்வொரு முறையும் புதுப்புது கேள்விகள் எழுந்தன. பேலியன்டாலஜி (Paleontology) எனப்படும் புதைபடிமவியல் மீது ஆர்வம் அதிகரித்தது.
கள ஆய்வும் விழிப்புணர்வும்
புதைபடிமவியல் குறித்து இந்தியாவில் பெருமளவு விழிப்புணர்வு இல்லை. எனவே, விழிப்புணர்வு கொடுக்க நினைத்தார் அஸ்வதா. சொந்தமாக வாசித்தார். அருங்காட்சியகத்துக்குச் சென்றார். 11 வயதில் 24 புதைபடிவ மாதிரிகளுடன் உரையாற்றத் தொடங்கினார். பயிற்சிக்காக எழும்பூர் அரசு அருங்காட்சியகத்துக்கு வந்தகல்லூரி முதுகலை மாணவர்களுக்கும் கருத்தமர்வு நடத்தினார். அப்போது, அஸ்வதா 6-ம் வகுப்பு மாணவி. புதைபடிவம் குறித்து தான்முதன்முதலில் அறிந்த இடத்திலேயேஉரையாளராக நிற்பது அற்புதமல்லவா!
புதைபடிவ மாதிரிகளைக் கண்ணுக்கு முன்பாக காட்டி உரையாற்றினால் நிறையப் பேருக்கு எளிதாகப் புரியும். அவர்களால் கைகளில் தொட்டுப் பார்க்க முடியும் என்று அஸ்வதா நினைத்தார். அரியலூரில் முதுகெலும்பு இல்லாத உயிரினங்கள், முதுகெலும்பு உள்ள உயிரினங்கள், தண்டுவடமுள்ள விலங்குகள், தாவரயினங்கள், மற்றும் நுண் புதைபடிவங்கள் அதிகம் கிடைக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குண்டுபெரும்பேடு பகுதியில் தாவரயின புதைபடிவங்களே அதிகம் கிடைக்கின்றன. மகாராஷ்டிராவில் சிரோன்ச்சா பகுதியில் முதுகெலும்பு உள்ள மற்றும் தண்டுவடமுள்ள விலங்குகளின் புதைபடிவங்கள் கிடைக்கின்றன. மூன்று இடங்களுக்கும் அஸ்வதா சென்றார். 150-க்கும் மேற்பட்ட மாதிரிகளைச் சேகரித்தார். தன் வீட்டில் சிறு அருங்காட்சியகம் அமைத்தார். பலரும் சென்று பார்க்கிறார்கள்.
இதனிடையே, லக்னோவில் பீர்பால் சஹானி இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோ சயின்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். புதைபடிமங்களைப் பாதுகாப்பது பற்றி புனே அகர்ஹர் ஆய்வு மையத்தில் பயிற்சி பெற்றார். வீட்டிலுள்ள புதைபடிவங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி வருகிறார். எதிர்காலத்தில் புவி அறிவியல் தொடர்பாக உயர்கல்வி படிக்கும் கனவோடு வளர்கிறார். 14 வயதில் இந்தியாவின் மிக இளம் தொல்லுயிரியலாளர் என்கிற சிறப்பைப் பெற்றுள்ள அஸ்வதாவுக்கு இந்த ஆண்டு ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது கொடுத்து பெருமைப்படுத்தியது இந்திய அரசு.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு:sumajeyaseelan@gmail.com