பிளஸ் 2க்குப் பிறகு - 12: கணக்கற்ற கம்ப்யூட்டர் படிப்புகள்

பிளஸ் 2க்குப் பிறகு - 12: கணக்கற்ற கம்ப்யூட்டர் படிப்புகள்
Updated on
2 min read

இந்த கல்வியாண்டிலும் பொறியியல் முதல் கலை அறிவியல் வரையிலான கல்லூரிகளின் சேர்க்கையில், கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளையே அதிகமானோர் விரும்பி உள்ளனர். இந்தப் படிப்புகளில் சேர போட்டியும் நிலவியது.

இப்படி நேரடியாக கம்ப்யூட்டர் படிப்பதற்கு அப்பால், உயர்கல்வியில் எதில் சேர்ந்து படித்தாலும் கம்ப்யூட்டர் என்பது தவிர்க்க முடியாததாகி வருகிறது. உயர் கல்விக்கான படிப்புகள் அனைத்திலும் கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்கள் நிறைந்திருக்கின்றன. இவை தவிர்த்து எதிர்காலத் தேவையின் பொருட்டும் கூடுதலாக கம்ப்யூட்டர் படிப்புகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

பொறியியலில் கம்ப்யூட்டர்

உயர்கல்வியில் நேரடியாக கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை விரும்புவோரின் முதல்கட்டத்தேர்வு பொறியியல் படிப்பாக இருக்கிறது. பி.இ.,/பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ்இஞ்சினியரிங் மற்றும் பி.டெக்,. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவை இந்த வகையில் சேரும். இந்த இரண்டில், நேரடியாக ஐடி துறையில் சேர விரும்புவோர் மட்டுமே பி.டெக்., இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியை தேர்வு செய்கிறார்கள்.

அடிப்படையான இந்த 2 படிப்புகள் தவிர்த்து, நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான புதிய கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளும் பொறியியல் பிரிவுகளில் சேர்ந்திருக்கின்றன. கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் பிசினஸ் சிஸ்டம், கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட்டிஸைன், சைபர் செக்யூரிட்டி, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ், ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் அன்ட் மெஷின் லேர்னிங், இன்ஃபர்மேஷன் சயின்ஸ் அன்ட்டெக்னாலஜி, ரோபாடிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன் உள்ளிட்ட படிப்புகள் இவ்வாறு சேர்ந்திருக்கின்றன. முதுநிலை படிப்புகளில் மட்டுமே இருந்த இந்த பிரிவுகள் தற்போது தேவையின் பொருட்டு இளநிலையிலும் சேர்ந்திருக்கின்றன.

கலை அறிவியலில் கம்ப்யூட்டர் படிப்பு

கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி., மற்றும் பி.சி.ஏ. படிப்புகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் கிடைக்கின்றன. இவற்றில் பி.எஸ்சி.,-ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அனிமேஷன் அன்ட் மல்டிமீடியா படிப்புகள் ஆகியவை அடங்கும். பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை அடுத்தே பி.எஸ்சி., ஐடி மற்றும் பி.சி.ஏ. படிப்புகள் வரவேற்பு பெறுகின்றன.

இவற்றுக்கு அப்பால் தன்னாட்சி கல்லூரிகள் பலவும், மாறும் சூழலுக்கு ஏற்ப புதுமையான பாடப்பிரிவுகளை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்த்து வருகின்றன. பல்வேறு பெயர்களில் அவை இருப்பதால், உள்ளடக்கமாய் அவற்றில் எம்மாதிரியான பாடங்கள் அடங்கி இருக்கின்றன என்பதை ஆராயலாம். Front Office Management, Database Management, Networking, Operating Systems, Computer Languages, Software Engineering, Computer Architecture உள்ளிட்டவை அந்த பாடங்களில் இடம்பெற்றிருக்கிறதா என சரி பார்த்து சேரலாம்.

இணையான இன்னொரு பட்டப்படிப்பு

கம்ப்யூட்டர் துறை மாணவர்கள் மற்றும் இதர படிப்புகளில் சேர்ந்து படிப்போர் எனஇருதரப்பினரும், முழு நேர கல்லூரி படிப்புகளுக்கு அப்பால் பகுதி நேரமாக சில கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை தேடி படிக்க வேண்டியது அவசியமாகிறது. அவை நேரடியாக தங்கள் படிப்பு சார்ந்து இருக்கலாம் அல்லது வேலைவாய்ப்பு சார்ந்த கூடுதல் படிப்புகளாகவும் அமையலாம். சான்றிதழ், டிப்ளமா மற்றும் பட்டப்படிப்புகளாக இவற்றை பெறலாம்.

வழக்கமான பட்டப்படிப்பை மேற்கொள்ளும் கல்லூரி வளாகத்திலேயே இவை தற்போது கிடைக்கின்றன. பயிலும் பட்டப்படிப்புக்கு இணையாக இன்னொரு பட்டப்படிப்பை வழங்கவும் சில பல்கலைக்கழகங்கள் வழி செய்கின்றன. கம்ப்யூட்டர் சாராத பட்டங்களை பயில்வோர், தங்கள் வேலைவாய்ப்பு கருதி கம்ப்யூட்டர் சார்ந்த பட்டப் படிப்பை தேர்வு செய்யலாம். இந்த வகையில் கல்லூரியிலிருந்து வெளியேறும்போதே, இரட்டை பட்டங்களுடன் தகுதியை உயர்த்திக் கொள்ளலாம்.

இவற்றுக்கு அப்பால் கம்ப்யூட்டர் சார்ந்த, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கும் அந்த படிப்புகள் குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in