

அரபிக் கடலோரமாய் அதன் வடக்கு முனைவரை வந்து விட்டோம். இனி இங்கிருந்து தரை வழியே பயணிக்கத் தொடங்குவோம். மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரம் மும்பை. பரப்பளவில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம்.
மூன்று திசைகளில், மலைகளை எல்லைகளாகக் கொண்டு இருக்கிற மாநிலம் இது.
மேற்குத் தொடர்ச்சி மலைகள், மாநிலத்தின் எந்தத் திசையில் இருக்கிறது?
மேற்கு திசையில? ஆமாம். அப்படித்தானே இருக்க முடியும்! கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு, அரபிக் கடல், மேற்கு மலைத் தொடர்ச்சி ஆகிய இரண்டுமே, மேற்கு எல்லைகளாக அமைந்து உள்ளன.
இரு வேறு பண்பாடுகள்
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு, சாத்புரா மலை, வடக்கு எல்லை ஆகும். இதேபோல, மாநிலத்தின் கிழக்கு திசையில், பம்ராகாட், சிரோலி, கைகூரா குன்றுகள், எல்லையாய் அமைந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தை, வடக்கு மகாராஷ்டிரம், கொன்கன் பகுதி, மராத்வாடா, விதார்பா என்று நான்கு மண்டலமாகப் பார்க்கலாம்.
தென் கிழக்கே, தெலங்கானாவை ஒட்டியுள்ள மரத்வாடா ஹைதராபாத் மன்னருக்கு உட்பட்ட மண்டலமாக இருந்து, 1956-ல் மகாராஷ்டிராவில் இணைந்தது விதர்பா மாநிலத்தின் கிழக்குப் பகுதி. இவ்விரு பகுதிகளுக்கும் இடையே பண்பாடு, வாழ்க்கை முறை சற்றே வேறுபடுவதால், அரசியல் போக்குகளைப் பற்றி, ‘மரத்வாடா’, ‘விதர்பா’ என்று தனியே குறிப்பிட்டு விவாதிக்கப்படுவது உண்டு.
கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆகிய இரண்டும் இந்த மாநிலத்தின் முக்கிய ஆறுகள் ஆகும். இவற்றில் இருந்து பீமா, மஞ்சாரா, தபி, பூர்ணா என்று கிளை ஆறுகள் தோன்றி, நீர் வளம் சேர்க்கின்றன. ஆனாலும் மாநிலத்தில் வறட்சியான பகுதிகளும் அதிகம் உண்டு.
மண் வளம், மழை வளம் இரண்டிலுமே, மகாராஷ்டிரா மாநிலம் வலிமையானது அல்ல. இதனால், நமது நாட்டின் சராசரி வேளாண் உற்பத்தித் திறனை விடவும், இந்த மாநில உற்பத்தி, குறைந்தே இருக்கிறது. கடற்கரையோர மாநிலம் என்பதால், பெரும்பாலும் தமிழ்நாட்டைப் போன்ற தட்ப வெப்பமே நிலவுகிறது. ஆனாலும், மகாராஷ்டிர மாநிலத்தின் பருவ காலம், தமிழ் நாட்டில் இருந்து ஓரிரு மாதங்கள் வேறுபட்டுள்ளது. காரணம், தென்மேற்குப் பருவ மழை.
ஜூன் மாதம் தொடங்கி ஏறக்குறைய செப்டம்பர் மாதம் இறுதிவரை தீவிர பருவ மழைக் காலம். மேற்கு கடற்கரையை ஒட்டிய கொன்கன் பகுதியில் மழைப் பொழிவு மிக அதிகமாக உள்ளது. கிழக்கே நகர்ந்து வந்தால், தென் மேற்குப் பருவ மழையின் தாக்கம் குறைந்து, வட கிழக்குப் பருவ மழையை நம்பி இருக்க வேண்டி உள்ளது. இங்கே, மழைப் பொழிவு அவ்வளவு இல்லை. இதனால், இந்த மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகிற போது, இங்கே வறட்சி நிலவுகிறது எனலாம்.
காட்டு வளமும் மக்கள் வளமும்
மகாராஷ்டிரா மாநிலம், மேற்குக் கடற்கரை, மேற்குக் காடுகள், தக்காணப் பீடபூமி என்று மூன்று புவியியல் மண்டலங்களைக் கொண்டது. மகராஷ்ட்ராவின் மொத்த நிலப் பரப்பில் சுமார் 20 சதவீதத்துக்கு மேல், அதாவது 5-ல் 1 பாகம், வனப் பகுதி ஆகும். இதன் காரணமாக, இந்திய மாநிலங்களில், சுமார் 61500 சதுர கி.மீ. அளவுக்கு பதிவான வனப் பரப்பு அடிப்படையில், இரண்டாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது மகாராஷ்ட்டிரம். இதில், மிக அடர்த்தியான காடுகள் மட்டுமே 8,700 சதுர கி.மீ அளவுக்குப் பரவி இருக்கிறது.
இங்கு, வானரம், காட்டுப் பன்றி, புலி, சிறுத்தை, மான், நரி, முயல், பலவகைப் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. பல்லுயிரிப் பெருக்கத்தில், மகராஷ்ட்ர வனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்துடன், அரபிக் கடல் மூலம், 150-க்கு மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களும் இங்கே இருக்கின்றன. சுமார் 12 கோடி மக்கள்தொகையுடன் இந்தியாவின் அதிக மக்கள் கொண்ட இரண்டாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிற மகாராஷ்டிரம், இந்தியப் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரமான மும்பை, இந்தியாவின் வரத்தகத் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது.
வணிகம், அரசியல், கலை, பண்பாடு என்று அத்தனை தளங்களிலும், முக்கிய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதால், மகாராஷ்டிரா மாநிலம், மேற்கத்திய உலகில், இந்தியாவின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
சரி, இனி நாம் செல்ல இருப்பது காந்தி பிறந்த மண்.
இந்த வாரக் கேள்வி:
இந்தியாவில், வனப் பரப்பில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் எது? வனப் பரப்பு எவ்வளவு?
(வளரும்)
கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com