ஊடக உலா - 23: யூடியூபில் 130 கோடி பார்வைகள் கடந்த என்பிடிஇஎல்

ஊடக உலா - 23: யூடியூபில் 130 கோடி பார்வைகள் கடந்த என்பிடிஇஎல்
Updated on
1 min read

இணையம் வழியாகக் கல்வி வழங்கும் நிறுவனங்கள் இன்று பல இருந்தாலும், அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன சில நிறுவனங்கள் மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றுச் செயல்பட்டு வருகின்றன.

அவற்றுள் என்பிடிஇஎல் எனப்படும் தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட கற்றல் பற்றிய தேசிய திட்டம் (NPTEL National Programme on Technology Enhanced Learning) பற்றி பார்ப்போம்.

எந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு என்பிடிஇஎல் வழங்கும் பாடத்திட்டங்கள் உதவும் என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியம். இந்தியக் கல்வி அமைச்சகத்தால் (MoE) நிதியளிக்கப்பட்ட ஐஐடிக்கள் மற்றும் ஐஐஎஸ்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்த இணையவழி கல்வித்திட்டம் 2003-ல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தரமான கல்வி பெறுவதற்கான திட்டமாகத் தொடங்கப்பட்டது என்றாலும், தற்போது 22 துறைகளில் ஒவ்வொரு பருவத்திற்கும் 600-க்கும் கூடுதலான படிப்புகளை என்பிடிஇஎல் வழங்கி வருகிறது. பொறியியல், அடிப்படை அறிவியல் மற்றும் மனிதவியல் (humanities) மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான உலகின் மிகப்பெரிய இணையவழி களஞ்சியமாக இது திகழ்கிறது.

தமிழிலும் படிக்கலாம்: அதிக சந்தாதாரர்களை பெற்ற கல்வி அலைவரிசையாக என்பிடிஇஎல்-க்கான யூடியூப் சேனல் உள்ளதை வைத்தே இதன் தரத்தினை அறிந்துகொள்ள முடியும். 130 கோடி பார்வைகள் கண்டதுள்ளதோடு, 40 லட்சத்துக்கும் கூடுதலான சந்தாதாரர்களை கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய கல்வி இணையமாக திகழ்கிறது.

இதுவரை 56,000 மணிநேரத்திற்கும் மேலான காணொலி பதிவுகளும், அதன் எழுத்து வடிவங்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியோடு பதிவேற்றப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் இருந்து தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு பாடப்பகுதிகள் 12,000 மணிநேரத்திற்கும் மேலான இந்த இணையக் கல்வித் திட்டத்தில் கிடைப்பதால், அனைவராலும் எளிதாக கற்றுக் கொள்ள முடிகிறது.

மார்ச் 2014-ல் திறந்த இணையவழிப் படிப்புகளை என்பிடிஇஎல் வழங்கத் தொடங்கியது. இப்போது ஐஐடிக்கு வெளியே உள்ள எவரும் என்பிடிஇஎல்-லிருந்து இணையவழி சான்றிதழ் படிப்பை மேற்கொள்ளுவதோடு, ஐஐடி வழங்கும் சான்றிதழைப் பெற முடியும்.

ஐஐடி வழங்கும் இலவச கல்வி: ஐஐடி ஆன்லைன் போர்டல் மூலம், 4, 8 மற்றும் 12 வார ஆன்லைன் படிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மார்ச் 2014 முதல் டிசம்பர் 2021 வரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இதுவரை 3496 படிப்புகள் நிறைவடைந்துள்ளன.

அவற்றில் மொத்தம் 1.58 கோடிக்கும் மேலான மாணவர்கள் சேர்ந்து படித்துள்ளனர். இதில் வழங்கப்படும் படிப்புகள் தொடர்பான அனைத்து புள்ளிவிவரங்களும் beta.nptel.ac.in/courses எனும் இணையதளத்தில் கிடைக்கிறது. இதில் வழங்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளும் முற்றிலும் இலவசம். ஆனால், சான்றிதழ் தேவையெனில் தேர்வுக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in