

இருமலும் தும்மலும் எந்த ஒரு ஒவ்வாத பொருளும் நம் உடலுக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளும் நம் உடலின் தூய்மைப் பணி என்று கடந்த வாரம் பார்த்தோம். இப்போது மழைக்காலம் அல்லது குளிர்காலம் தொடங்கியவுடன் சிலருக்கு மட்டும் இருமல் ஏற்படுவது ஏன்?, அதை எப்படித் தவிர்ப்பது? என்ற வருணின் தாயாரது கேள்விக்கு வருவோம். பொதுவாக வானிலை வெப்பமாக அல்லது குளிராக இருந்தாலும், நமது மூச்சுக்காற்றின் வெப்பநிலை மற்றும் அதன் ஈரப்பதம் (temperature & humidity) அதற்கு தகுந்தாற்போல மாறுவதில்லை.
அது எப்போதும் சமநிலையில்தான் இருக்கிறது. இந்த சமநிலையை சீராக வைத்திருக்கும் வேலையைத்தான், நாம் ஏற்கெனவே பார்த்த நமது காப்லெட் செல்களும், நமது மூக்கைச் சுற்றியுள்ள சைனஸ்களும் (sinuses) பார்த்துக் கொள்கின்றன.
ஆனால், மழை மற்றும் குளிர்காலத்தில் தொடர்ந்து குளிராகவும் பனியுடனும் இருக்கும் வெளிக்காற்றை நாம் சுவாசிக்கும்போது, ஈரப்பதம் குறைந்த மூச்சுக்காற்றும் அதில் அவ்வப்போது உள்ளிழுக்கப்படும் பூஞ்சை மற்றும் பூந்தாதுகளின் (mold & pollen) அளவுகளும் அதிகரிப்பதால் நம் சைனஸ் மற்றும் காப்லெட் செல்கள் அதிகம் தூண்டப்படுகின்றன. அவை சேமிக்கும் அதிகளவு கழிவானது, இயல்பைவிட அதிகளவு சளியாக வெளியே வருகிறது. இவற்றுடன் ஒருசிலருக்கு ஒவ்வாமையையும் இது ஏற்படுத்தும். இதனால் நமது வெள்ளை அணுக்களின் eosinophils & mast cells எனப்படும் அலர்ஜி செல்கள் தூண்டப்படும்.
கொசுவர்த்தி தவிர்ப்பது நல்லது! - அதன் காரணமாக அடுத்தடுத்து நிகழும் சுவாசப்பாதை குறுகல், இருமல், மீண்டும் சுவாசப்பாதை குறுகல் ஆகியன தொடர்ந்து ஏற்படுவதுடன், இந்த நிகழ்வுகள் அனைத்தும் குளிர் அதிகமாக இருக்கும் இரவிலும் முக்கியமாக அதிகாலையிலும் இன்னும் அதிகரிக்கிறது. அதேசமயம் குளிர் மற்றும் மழைக்காலத்தில் இயல்பாகவே அதிகம் காணப்படும் ஃப்ளூ மற்றும் ஆர்எஸ்வி வைரஸ் தொற்றுகள் ஏற்படும்போது காய்ச்சலுடன் கூடிய இருமலாகவும் இது வெளிப்படுகிறது.
பொதுவாக மழைக்கால இருமல் தொல்லை உள்ளவர்கள் அது வராமல் தடுக்க முதற்கட்டமாய் நாம் எல்லோரும் செய்யும் சரியான குளிர்கால உடைகளைத் தேர்வு செய்வதும், சுத்தமான படுக்கை மற்றும் படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்துவதும், வசிக்கும் அறைகளை தூய்மையாகவும், வெப்பமாகவும் வைத்திருப்பதும் மிகவும் உதவும். குறிப்பாக சிகரெட், கொசுவர்த்தி, சாம்பிராணி உள்ளிட்ட புகைகளைத் தவிர்ப்பதும் இதில் மிகவும் அவசியமாகிறது.
இத்துடன், மிதமான வெப்பத்துடன் பருகப்படும் அதிகப்படியான தண்ணீர் தொண்டைக்கு இதமளிப்பதுடன் உடலின் நீர்த்தன்மை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. அத்துடன் தொண்டைக் கரகரப்பைக் குறைக்க உதவும் உப்புநீர் கொப்பளித்தல், lozenges எனும் மிட்டாய்கள் மற்றும் நீராவி பிடித்தல் ஆகியனவும் பலனளிக்கும்.
பாட்டி வைத்தியம் உதவும்: மேலும் நோயெதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் பழவகைகள், பயறு வகைகள் மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவு வகைகளை உட்கொள்வதும் நலம். இங்கு பாட்டி வைத்தியமான துளசி, மிளகு, மஞ்சள் ஆகியனவும் நிச்சயம் உதவும். உணவு, உடை, உறைவிடத்தில் காட்டும் அக்கறை மட்டுமன்றி, வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிவதும், குளிர்காற்றைத் தவிர்க்க ஸ்கார்ஃப் அணிவதும் காற்று மாசு நம்மை பாதிப்பதை தவிர்க்க உதவுவதுடன், எளிய மூச்சுப் பயிற்சிகளான 'pursed lip breathing, belly breathing' எனும் நமது பிராணாயாமம் மற்றும் நாடிசுத்தி செய்வதும் இந்த மழைக்கால இருமல் மற்றும் அலர்ஜி இருமலில் நல்ல பயனளிக்கிறது என்கிறது சர்வதேச நுரையீரல் அமைப்பு.
இவை அனைத்தும் உதவவில்லை என்றாலோ, பத்துப்பதினைந்து நாட்களுக்கு மேலாகவும் தொடர்ந்து இருமல் இருந்தாலோ, அல்லது காய்ச்சலுடன் கூடிய சளி இருமல் அல்லது மூச்சுத்திணறல் இருந்தாலோ மருத்துவரை அணுகுவது அவசியமாகும். மருத்துவரின் பரிந்துரைப்படி இருமலைக் கட்டுப்படுத்தும், அலர்ஜியை மட்டுப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வது நல்லது. மொத்தத்தில், மழைக்காலம் என்றாலும் மாசற்ற காற்று என்பதுதான் நமது ஆரோக்கியத்தின் முக்கியத் தேவை. (ஆலோசனைகள் தொடரும்) - கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com