

தங்கத்தின் விலை அதிகரிக்க அதிகரிக்க அதனை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. பணக்காரர்கள் தங்கத்தை முதலீட்டு நோக்கில் கட்டிகளாக (gold biscuit) வாங்குகிறார்கள்.
ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் ஆபரண நகையாகவும் (Jewel), நாணயமாகவும் (coins) வாங்குகிறார்கள். அண்மை காலமாக நகர்ப்புறங்களில் தங்கத்தை டிஜிட்டல் வடிவிலும், தங்க பத்திர (gold bonds) வடிவிலும் கூட வாங்கும் முறை பரவலாகி வருகிறது.
தங்கத்தை நாணயமாகவோ, ஆபரணமாகவோ வாங்கும்போது சிலவற்றை கட்டாயம் கவனிக்க வேண்டும். வாங்கும் ஆபரண நகை 22 கேரட் தங்கம் என்பதற்கான 916 தர சான்று அளிக்கப்பட்டதா? என பார்த்து வாங்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை, பிஐஎஸ் (Bureau of Indian Standards) முத்திரை, கடையின் முத்திரை ஆகியவை இருக்கிறதா? என்பதனையும் பரிசோதிக்க வேண்டும்.
இந்த முத்திரைகள் இல்லாத தரமற்ற நகைகளை சில கடைக்காரர்கள் அப்பாவி மக்களிடம் அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள். இதனால் தங்கத்தின் நிறம் நாளாக நாளாக மங்க ஆரம்பித்துவிடும். மீண்டும் அதனை விற்கவும் முடியாத நிலை ஏற்படும். எனவே தங்கம் வாங்கும்போது கடையின் பின்புலத்தையும் அறிந்து, நகையை நன்றாக ஆராய்ந்து வாங்க வேண்டும்.
ஆபரணத்தில் ஒளிந்திருக்கும் சிக்கல்: தங்கத்தில் முதலீடு செய்யும் பெரும்பாலானோர் ஆபரணமாக வாங்குவதையே விரும்புகின்றனர். ஆபரணமாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி வரி ஆகியவை கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) நகை வாங்கும்போது ஒரு கிராம் தங்கத்தின் விலையை விட கூடுதலாக செய்கூலி,சேதாரம், ஜிஎஸ்டி வரி ஆகியவை வசூலிக்கப்படுகிறது.
இதுதவிர ஆபரணத்தின் விலைடிசைன், கல் பதிக்கப்பட்டது, பீட்ஸ் வைக்கப்பட்டது ஆகியவற்றை பொறுத்தும் மாறுபடுகிறது. பல நேரங்களில் மிக குறைந்த விலைகொண்ட கற்களை கூட தங்கத்தின் விலைக்கு விற்று விடுகிறார்கள். இதனால் வாங்குபவருக்கு பெரும் நஷ்டமே ஏற்படுகிறது. இதுதவிர, ஆபரண நகைகளை நீண்ட காலத்துக்கு பராமரிப்பதும், பாதுகாப்பதும் கூட சிக்கலாக இருக்கிறது.
இந்த ஆபரணங்களை விற்கும்போது செய்கூலி, சேதாரம் எதுவும் கிடைப்பதில்லை. நகையில் இருக்கும் முத்து, கல் ஆகியவற்றுக்கு எந்த விலையும் வழங்கப்படுவதில்லை. மாறாக நகையின் தேய்மானம், பழுது, அதில் படிந்த அழுக்கு என சில மில்லி கிராம்கள் குறைக்கப்பட்டே விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே முதலீட்டு நோக்கில் தங்கத்தை ஆபரணமாக வாங்கும்போது, லாபத்தைவிட நஷ்டமே மிஞ்சுகிறது.
அதேவேளையில் குடும்ப தேவைக்காகவோ, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காகவோ தங்கத்தை ஆபரணமாக சேமிக்கலாம். அப்போதும் கல், முத்து, பீட்ஸ் வைக்கப்பட்ட நகைகளை தவிர்க்க வேண்டும். அதேபோல செய்கூலி, சேதாரம் ஆகியவை 3 % முதல் 10 % வரை இருக்கும் நகைகளை மட்டுமே வாங்க வேண்டும். டிசைன், ஆன்ட்டிக், மாடர்ன் என்ற பெயரில் 18 சதவீதத்துக்கும் அதிகமாக செய்கூலி, சேதாரம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
நாணய சேமிப்பு சிறந்தது: குறுகிய கால தங்க முதலீட்டில் ஆபரண நகையாக சேமிப்பதை விட நாணயமாக சேமிப்பதே சிறந்தது. எனவே தங்கத்தின் விலை குறையும்போதெல்லாம் 100 மில்லி கிராமில் தொடங்கி 10 கிராம் வரை நாணயமாக வாங்கலாம். மாணவர்களும், நடுத்தர குடும்ப பெற்றோரும் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஒரு கிராம் வீதத்தில் தங்க நாணய முதலீட்டில் ஈடுபடலாம். நம்முடைய சேமிப்புக்கு ஏற்றவாறு 2 கிராம், 4 கிராம், 8 கிராம் என நாணயங்களாகவும் வாங்கலாம். இவ்வாறு நாணயங்களை வாங்கும்போது 1 சதவீதத்துக்கும் குறைந்த செய்கூலி, ஜிஎஸ்டி வரி ஆகியவை மட்டுமே வசூலிக்கப்படும். எனவே இதனை வாங்கும்போதும் 916, ஹால்மார்க், பிஐஎஸ் முத்திரை ஆகியவற்றை பரிசோதித்து வாங்க வேண்டும். பாரம்பரியமான கடைகளிலும், யூனியன் பேங்க் போன்றவற்றிலும் 22 கேரட், 24 கேரட் தங்க நாணயங்களை வாங்கலாம்.
தங்க நாணயங்களுக்கு அதிகளவிலான செய்கூலி, சேதாரம், டிசைன் கட்டணம், கல், தேய்மானம், பழுது, அழுக்கு போன்ற பிரச்சினைகள் இல்லை. இந்த நாணயங்களை பின்னாளில் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், அவசர தேவைகளுக்காக எளிதாக ஆபரணமாக மாற்றிக் கொள்ளலாம். 916 தர சான்று பெற்ற நாணயமாக இருந்தால் அதனை விற்கும் நாளில் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு ஏற்றவாறு பணம் கிடைக்கும். ஆனால், ஆபரண நகையாக இருந்தால் அன்றைய தேதியில் தங்கத்தின் விலையை விட தேய்மானத்தினால் குறைந்த அளவிலே பணம் வழங்கப்படும். (தொடரும்) - கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in