

கடலும் அதன் அலைகளும் சிறுவர்களுக்கு கொள்ளை பிரியம். தூரத்திலிருந்து கடலை ரசிப்பதை விட, கப்பலில் பணியாற்றுவது மிகவும் சுவாரசியம். அதிலும் நீர்மூழ்கிக்கப்பலில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தால் சாகசமும் சுவாரசியமும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா? நீர்மூழ்கியில் பணியாற்ற இந்தியாவில் வாய்ப்புகள் உண்டா?
இந்தியாவில் இந்தியக் கடற்படை நீர்மூழ்கிகளை இயக்குகிறது. நீர்மூழ்கிக்கப்பலில் பணியாற்ற கடற்படை அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.என்.எஸ். சத்வாஹனா கப்பற்படை தளத்தில் நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சிப்பள்ளி உள்ளது. இங்கு நீர்மூழ்கி சார்ந்த அடிப்படை பயிற்சிகளோடு, ஆபத்து காலங்களில் நீர்மூழ்கியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள், நவீன கடலடி போர்முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இருபாலருக்கும் வேலைவாய்ப்பு: பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பிளஸ் 2 படித்தவர்களும் இந்தியக் கடற்படையில் அதிகாரி ஆகலாம். யூபிஎஸ்சி, தேசிய பாதுகாப்புப் பயிற்சிப்பள்ளியில் (National Defence Academy -NDA) சேருவதற்கான என்.டி.ஏ. நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு, ராணுவம், கடற்படை, விமானப்படைகளில் அதிகாரியாக சேருவதற்கான பொதுவான நுழைவுத் தேர்வாகும்
பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல் கணிதத்தை படித்திருப்பது கடற்படை அதிகாரியாக சேருவதற்கான அடிப்படை கல்வித் தகுதி ஆகும். யூபிஎஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் எஸ்எஸ்பி (Services Selection Board-SSB) நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமின்றி படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவ, மாணவிகள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
கடற்படை அதிகாரி மற்றும் வீரர்: யூபிஎஸ்சி நடத்தும் என்டிஏ நுழைவுத் தேர்வின் மூலம், எழிமலா-ஐஎன்ஏ பள்ளிக்கும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பித்தவர்கள், யூபிஎஸ்சி தேர்வு மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்ற பின்பு நான்கு ஆண்டுகள் எழிமலா ஐஎன்ஏ-வில் பயிற்சி உண்டு. பயிற்சியின் முடிவில் கடற்படை அதிகாரிகளாக பணியமர்த்தப்படுவார்கள். பி.டெக்., பட்டமும் வழங்கப்படும். ஆண்களும் பெண்களும் இத்தேர்வுகளில் பங்கேற்கலாம்.
பிளஸ் 2 முடித்தவர்கள் கடற்படையில் அதிகாரியாக இன்னொரு வழியும் உண்டு. அதாவது நேரடியாக ஐஎன்ஏ-வில் சேருவது. இந்த முறைக்கு 10 2 (B.Tech.,) நுழைவு என்று பெயர். இதில் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை பிளஸ் 2-வில் படித்திருப்பது கட்டாயம். பிளஸ் 2 படிப்பில் 70 % மதிப்பெண்களோடு, ஜேஈ.ஈ -முதன்மைத் தேர்வில் (JEE-Mains) பங்கேற்றிருப்பதும் அவசியம்.
இது தவிர பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்களும் கடற்படை அதிகாரியாகி நீர்மூழ்கிக்கப்பலில் பணியாற்றும் வாய்ப்பை பெறலாம் பிளஸ் 2 படித்தவர்கள் ‘அக்னி வீர்’ திட்டத்தின் மூலம் வீரராக கடற்படையில் இணையலாம். கணிதம், இயற்பியல் பாடங்களோடு வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் ஒன்றை படித்திருக்க வேண்டியது அவசியமாகும்.
கடலின் ஆழங்களில் களமாடி தேசத்தின் எல்லை காக்க வாழ்த்துகள்! (கனவுகள் தொடரும்) கட்டுரையாளர், ‘’போர்முனை முதல் ஏர்முனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com