

இணைய உலகம் பெண்களுக்கு நிறைய கதவுகளை திறந்துவிட்டிருக்கிறது. தகவல், கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் தொடங்கி பொதுச் சமூகத்துடன் கலந்து விவாதிப்பது, தங்கள் உரிமைகளைப் போராடி பெறுவது என்பதுவரை இணைய உலகம் பெண்கள் முன்னேற்றத்தின் முக்கிய கருவி.
ஆனால், அதே இணைய உலகம் பெண்களை முடக்கவும் தயங்குவதில்லை. பெண்களின் வாயடைக்க இதில் பயன்படுத்தும் ஒரு யுக்திதான் ‘ஸ்லட் ஷேமிங்’. பெண்களை சைபர் வெளியில் திட்டமிட்டு குழுவாக சேர்ந்து கொண்டு அவமானப்படுத்துவது, பாலியல் ரீதியான வசை மொழி பேசுவது, மீறி புகார் அளித்தால் அவர்களின் நடத்தையை சமூக வெளியில் கேள்விக்குள்ளாக்குவது என அனைத்து தந்திரங்களாலும், பெண்களை முடக்குவது அதிகமாகி வருகிறது.
"நீ ஏன் இணையத்திற்குப் போனாய்?" - நம் வீட்டு பெண்கள், மாணவிகள் உலகின் மிகச் சிறந்த அறிவை பெற இணையம் உதவுகிறது. அத்தகைய இணைய வெளியில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் கடமை. ஆனால் அதற்கு நேரெதிராக, பாதிக்கப்படும் பெண்களை பார்த்து, “நீ ஏன் இணையத்திற்குப் போனாய்?” என்று குடும்பத்தாரும் உறவினர்களும் கேள்வி எழுப்பி முடக்கப்படுவதுதான் அதிகமாக நிகழ்கிறது.
இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களுக்குப் பாதுகாப்பான இணைய வெளியை உருவாக்கவில்லை என்றால் அதுவும் ஒருவகை ஏற்ற தாழ்வுதான். உலகம் முழுவதும் தகவல் பகிர்வில் புரட்சி நடந்து கொண்டிருக்கும்போது பெண்களை ‘சைபர் ஸ்லட்ஷேம்’ எனும் ஆயுதம் மூலம் முடக்குவது சட்டப்படி குற்றம்.
இதனால் மாணவிகள், பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்இணையம் பெண்களுக்குப் பாதுகாப்பானதுதான். அப்படிச் சிறு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தாலும் சட்டப்படி அவை அனுமதிக்கப்படுவதில்லை. ஒருபோதும் இணையத்தை விட்டு விலகுவதும், முடங்குவதும் தீர்வு கொடுக்கப் போவதில்லை.
பெற்றோர் அவசியம் தங்கள் பெண் குழந்தைகளுக்கு இணையத்தை அறிமுகப்படுத்தவும், ஒருவேளை ‘ஸ்லட் ஷேம்’ செய்யப்பட்டால் உறுதியான ஆதரவும், ஆலோசனையும் வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதையில் வழிநடத்த வேண்டியதும் அவர்களது கடமை. அதைவிடுத்து பெற்றோர் தங்களது மகள்களை ஒருபோதும் முடக்கக் கூடாது. (தொடர்ந்து பேசுவோம்) - கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர் தொடர்புக்கு: write2vinod11@gmail.com