மகத்தான மருத்துவர்கள் - 22: தனது கல்லூரியை அரசுக்கு தானமாக வழங்கியவர்!

மகத்தான மருத்துவர்கள் - 22: தனது கல்லூரியை அரசுக்கு தானமாக வழங்கியவர்!
Updated on
2 min read

நாட்டின் முதல் பல் மருத்துவமனை என்கிற அங்கீகாரம் பெற்றதை அடுத்து கொல்கத்தா டெண்ட்டல் கல்லூரி மூலம் எண்ணற்ற பல் மருத்துவர்களை உருவாக்கத் தொடங்கினார் டாக்டர் அகமது. பல் மருத்துவம் என்பது வெறும் பற்சிதைவுக்கான சிகிச்சை என்ற அன்றைய நிலையை மாற்றி, பற்களின் அமைப்பு குறித்த புரிதல்கள், வாய் சுகாதாரம், வலியில்லா தீர்வுகள், வருமுன் காக்கும் உத்திகள் என பல முன்மாதிரிகளை உருவாக்கினார்.

ஒரு சிறந்த ஆசிரியராக விளங்கிய அவரிடம், அப்படிப் பயின்றவர்கள்தான் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் முதல் பெண் பல் மருத்துவராகவும், பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானின் முதல் பெண் பல் மருத்துவராகவும் இன்றளவும் கொண்டாடப்படும் முகமது அலி ஜின்னாவின் சகோதரியான ஃபாத்திமா அலி ஜின்னாவும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முதல் பெண் பல் மருத்துவரான தபிதா சாலமனும்.

பல் மருத்துவர்களின் வேர்: கற்பிக்கும் பணிகளுக்கிடையே தனது பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த டாக்டர் அகமது, ‘Handbook of Operative Dentistry' எனும் கையேடு ஒன்றையும் எழுதினார். இன்றளவும் பல் மருத்துவ மாணவர்களுக்கு பைபிள் இந்த கையேடு. இவற்றுடன், இந்திய பல் மருத்துவர்களுக்கான மாதாந்திரப் பத்திரிக்கை, கொல்கத்தா பல் மருத்துவ சட்டம் என்று தனது துறை சார்ந்த பல முன்னேற்றங்களுக்கும் வித்திட்டார்.

அப்படி 1925-ம் ஆண்டு, அவர் தொடங்கிய மாநில பல் மருத்துவர்கள் அமைப்பு பின்னாளில் 'ஐடிஏ' (Indian Dental Association) என பெயர்மாற்றம் கொண்டு, தேசிய அளவில் வேர் பரப்பி இன்றும் லட்சக்கணக்கான பல் மருத்துவர்களுக்குத் துணைநிற்கிறது.
1928-ல் முழுமையான மருத்துவக் கல்லூரியாக உருவெடுத்த அவரது கொல்கத்தா பல் மருத்துவக் கல்லூரி, பின்னர் 1936ம் ஆண்டிலிருந்து அரசு சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட்டது.

தான் நினைத்தபடியே தனது நிறுவனம் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் போலவே சிறந்து விளங்குவதைக் கண்டு மனநிறைவடைந்த டாக்டர் அகமது, அதன் பயன் இன்னும் பல்லாயிரக்கணக்கானோரை சென்றடைய தனது கல்லூரியை 1949-ல் மேற்கு வங்க அரசுக்கே தானமாக வழங்கினார்.

மேற்கு வங்க அமைச்சரானார்: தனது துறையில் மட்டுமன்றி அரசியலிலும் ஈடுபட்ட டாக்டர் அகமது, கொல்கத்தா மாநகராட்சியின் மூத்த குழு உறுப்பினராக 1932 முதல் 1944வரை செயலாற்றியதோடு, 1949-ல் மேற்கு வங்கத்தின் அமைச்சர் பொறுப்பை ஏற்று அங்கும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

தொடர்ந்து கல்வி, வேளாண்மை, பொது சுகாதாரம் என பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர், "இந்த தேசத்தின் முதன்மைத் தேவை கல்விதான். அதனை அனைவருக்கும் வழங்கும் அரசால்தான் நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்த முடியும்" என்று ஆணித்தரமாக கூறியதோடு, ஆசிரியர்களின் ஊதியத்தை முறைப்படுத்தினார்.

அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டாலும், தனது துறை முன்னேற்றத்துக்கு சிறிதும் தடங்கல் நேராமல் பார்த்துக் கொண்ட டாக்டர் அகமது, கொல்கத்தா பல் மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வராகவும், இந்திய பல் மருத்துவ அமைப்பின் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்றியதுடன் பல்வேறு சீர்திருத்தங்களையும் செய்தார்.

எண்ணற்ற சேவை செய்த அவரை சிறப்பிக்கும் விதமாக, கொல்கத்தா பல் மருத்துவக் கல்லூரியின் பெயரையே ரஃபியுதீன் அகமது பல் மருத்துவக் கல்லூரி என்று மாற்றிய இந்திய அரசு, அவரது உயரிய பணிகளைப் பாராட்டி பத்மபூஷண் விருதை 1964-ல் வழங்கி சிறப்பித்தது.

ழும் காலமெல்லாம் கடின உழைப்பால் தனது கனவுகள் அனைத்தையும் நனவாக்கிக் காட்டிய டாக்டர் ரஃபியுதீன் அகமது 75வது வயதில், 1965 பிப்ரவரி 9ம் தேதியன்று உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இன்றளவும் டாக்டர் ஆர்.அகமதின் பிறந்தநாளான டிசம்பர் 24 தேதி தேசிய பல் மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவுகளைப் போலவே அவரது கனவுகளும் சிந்தனைகளும் நம் அனைவரையும் வழிநடத்தட்டும். (மகிமை தொடரும்) - கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in