

சும்மா இருப்பதென்றால் சும்மா இருப்பதுதான். எந்த காரியமும் செய்யாமல் அமைதியாக அமர்ந்து இருப்பது. இதோ இன்னும் சில நாட்களில் அரையாண்டு தேர்வு விடுமுறை வந்துவிடும். எல்லோருக்கும் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கும். நண்பர்கள் வீட்டிற்குச் சென்று விளையாடுதல், வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரித்தல், குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உதவுதல், வீட்டில் பெற்றோர்களின் தினசரி வேலைகளில் உதவுதல் என நீண்ட பட்டியலை இந்நேரம் தயாரித்து இருப்பீர்கள். நீங்கள் தயாரிக்க முற்படவில்லை என்றாலும் பெற்றோர்களும், உறவினர்களும் நண்பர்களும் இந்நேரம் திட்டமிட்டு இருப்பார்கள்.
கரோனா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை ஏதாவது செயல்பாட்டில் ஈடுபட வைக்கவேண்டும். இந்த வகுப்பில் சேர்க்கலாமா அந்த வகுப்பில் சேர்க்கலாமா எனத் துடித்தனர். ஒரு புறம் இணைய வசதியே இல்லாத வீடுகளும் இருக்கவே செய்தன. எதையாச்சும் ஒன்றினை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும், இடைவெளியே விடாமல் செயல்பட வேண்டும், கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான். அந்த ஆர்வத்தில் ஒரு குறை ஏது மில்லை. ஆனால், கொஞ்சம் அறிவியல்பூர்வமாக சிந்திக்கவும் வேண்டும் அல்லவா.
சும்மா இருத்தல்:
ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுங்கள். இரண்டு மணி நேரம் எதுவும் செய்வதில்லை என முடிவெடுங்கள். எந்த வேலையும் இல்லை. உகந்த நேரம் விடியற்காலை. சும்மா இருத்தல் என்பது தியானமோ, உறங்குவதோ அல்ல. சும்மா இருக்கும்போது ஏராளமான எண்ணங்கள் வந்து குவியும்.
பள்ளியில் செய்ய வேண்டியது, வகுப்பில் செய்யலாம் என்ற புதிய முயற்சி, வீட்டில் சின்ன மாற்றம், இப்படி பல உதிக்கும். நண்பர்களுடனான அரட்டை நினைவிற்கு வரும், வீட்டில் நடந்த திருவிழா, வெளியூர் சுற்றுலா, செய்ய வேண்டிய புதிய முயற்சிகள் – சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் கற்றுக்கொள்வது, புதிய ஓவியம் வரைவது இப்படி பட்டியல் நீளும்.
இரண்டு மணி நேரத்தின் முடிவில் எடுத்த புதிய முடிவுகளைப் பட்டியலிடுங்கள். பட்டியலில் உள்ள மிக எளிமையான, சீக்கிரம் செய்யக் கூடிய காரியத்தை உடனே செய்துவிடுங்கள். அது பெரும் உற்சாகம் கொடுக்கும். வெற்றியை சுவைக்கத் தொடங்கி விட்டோம் என்ற பெருமிதம் உண்டாகும்.
இக்கால குழந்தைகளுக்குப் பொறுமை இல்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஒரு வரிசையில் நிற்பது, முடிவெட்டும் கடையில் அமர்வது, பேருந்தில் நீண்ட தூரம் பயணம் செல்வது, என எல்லா சமயங்களிலும் பொறுமையே இல்லை என்பார்கள். இதனை வென்றெடுக்கலாம். சுற்றி இருப்பதைக் கவனித்து உள்வாங்குவதுவே முக்கியம். இவை ஒவ்வொன்றும் மனதிற்கு உள்ளீடுகள்.
செயலற்ற மனம்: வழக்கமான ஒரு கூற்று உள்ளது Idle brain is devil’s workshop – ‘செயலற்ற மூளை பிசாசின் கூடாரம்’ என்பார்கள். செயலற்ற மனத்திற்கு ஏராளமான உள்ளீடுகள் ஏற்கெனவே இருக்கின்றன. அதனை வெளியே கொண்டு வர ஒரு இடைவெளி தேவை. ஒரு மௌனம் தேவை. எதுவும் செய்யாமல் இருக்கும்போது ஒரு பெரும் சக்தியும் உருவாகும்.
சும்மா இருப்பது என்பது சும்மாவே இருப்பதில்லை, இடைவெளி தருவது. மூச்சு விட்டுக்கொள்வது. திரளான உற்சாகத்தைப் பெறுவது. இது வளரிளம் பருவத்தில் மட்டுமல்ல, வாழ்வின் எந்த நிலையிலும் உதவும். உண்மையில் Idle brain is creator’s workshop - ‘செயலற்ற மூளை படைப்பாளியின் கூடாரம்’. இப்படி மாற்றி யோசியுங்கள். முயன்று பாருங்கள். (தொடரும்) - கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், தொடர்புக்கு: umanaths@gmail.com