அறிவியல்ஸ்கோப் - 22: நுண்ணோக்கி மூலம் மூடநம்பிக்கைகளை விரட்டியடித்தவர்!

அறிவியல்ஸ்கோப் - 22: நுண்ணோக்கி மூலம் மூடநம்பிக்கைகளை விரட்டியடித்தவர்!
Updated on
2 min read

பல்வேறு லென்சுகளை கடைவதில் பயிற்சி எடுக்க முயலும் ஒருவர் அதில் கைதேர்ந்தவராகிறார். அந்த லென்சுகளைக் கொண்டு பல்வேறு பொருட்களை உருப்பெருக்கிப் பார்க்க முயல்கிறார். முதலாவது ஒரு குளத்து நீரை முகந்து எடுத்து அதனைப் பார்க்கிறார். நம்பவே முடியாத அளவுக்கு எக்கச்சக்க உயிரினங்கள் நெளிகின்றன. பின்னர் பெய்யும் மழைநீரை எவ்விதமான சேர்க்கையும் அடையாமல் கவனமாக பிடித்துப் பார்க்கிறார்.

அதில் அதுபோன்ற உயிரினங்கள் நெளியவில்லை. பின்னர் வேறு குளத்து நீரை உருப்பெருக்கிப் பார்க்கிறார். மீண்டும் அதே போன்று உயிரினங்களைக் காண நேர்கிறது. ஆகவே நீர் பூமியில் சேர்ந்த பிறகோ அதனோடு வேறு வகை உயிரினங்கள் சேர்ந்த பின்போ இப்படிப்பட்ட உயிரினங்கள் அதில் சேர்ந்து பெருகுவதைக் கணிக்கிறார்.

பாராட்டு எதிர்பார்க்காதவர்: பேய் பிடிப்பதினால்தான் நாய் மனிதனை கடிக்கிறது; எனவே நாய் கடித்த இடத்தை செருப்பால் அடித்தால் அல்லது சூடு வைத்தால் அங்கிருந்து பேய் ஓடிவிடும், மாட்டின் சாணத்திலிருந்துதான் வண்டுகள் பிறக்கின்றன போன்ற தவறான நம்பிக்கைகள் நிலவிய காலத்தில் பாக்டிரியாவையும், பாரசைட்டையும் உருப்பெருக்கி மூலம் பார்த்து அவற்றின் இருப்பை கண்டறிந்த பெருமை இவருக்குண்டு. நுண்ணுயிரியலின் தந்தையும் இவரே.

யார் இவர்? நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆண்டன்வான் லீவான்ஹூக் (1623- 1723) இவர் உள்ளூரிலிருந்த இலக்கணப் பள்ளியின் மூலமாக அடிப்படை அறிவை மட்டுமே கற்றவர் எந்த பல்கலைக்கழகத்திற்கோ, கல்லூரிக்கோ சென்று மேற்படிப்பு பயின்றவரில்லை. அறிவியல் உலகம் புறக்கணிக்க இது ஒன்றே போதும். ஆனால், தன்னுடைய விடா முயற்சியாலும், சீரிய ஆராய்ச்சி மனப்பான்மையினாலும், அர்ப்பணிப்புணர்வாலும் தாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளில் வெற்றி கண்டவர். அவரே அவரைப் பற்றிச் சொல்வதைக் கவனியுங்கள்.

“எந்த பாராட்டையும் பெற வேண்டி நான் மேற்கொண்ட பணிகளை இத்தனை காலமாக செய்து கொண்டிருக்கவில்லை. மாறாக பலரையும் விட என்னுள் இருந்த அறிவை நான் கண்டுகொண்டு அதன் தூண்டலின்பேரிலேயே செய்தேன். இதனால் நான் என்ன புதுமைகளைக் கண்டறிந்தேனோ அவை அனைத்தையும் எழுதிவைக்க வேண்டும் என்பதை எனது கடமையாக உணர்ந்தேன். சக மனிதர்களும் இவற்றை பிற்காலத்தில் அறிந்துகொள்ளட்டும் என்ற அவாவின் வெளிப்பாடன்றி வேறில்லை”.

பல மடங்கு பெரியது: இத்தகைய சாதனையை படைக்க இவருக்குத் உறுதுணையாக இருந்தது இவர் வடிவமைத்த நுண்ணோக்கி. 250-க்கும் மேற்பட்ட விதவிதமான நுண்ணோக்கிகளை வடிவமைத்துள்ளார். ஆனால், நுண்ணோக்கியை செழுமைப்படுத்திய பெருமை மட்டுமே இவருக்குண்டு. ஏனென்றால் இவர் பிறப்பதற்கு 42 ஆண்டுகள் முன்னமே சாக்கரையாஸ் ஜான்சன் என்பவர் ஒரு நுண்ணோக்கியை வடிவமைத்திருந்தார்.

ஆனால், ஆண்டன் வான்லீவாஹூக் தயாரித்த நுண்ணோக்கி செழுமைப்படுத்தப்பட்டதாகவும் உயிர்களை 277 மடங்கு உருப்பெருக்கிக் காட்டுவதாகவும் அமைந்திருந்தது. இவ்வாறான நுண்ணோக்கி மூலம் தேனியின் கொடுக்கு, கம்பளி, நூல், தண்ணீர், ஒயின் போன்றவற்றை உருப்பெருக்கிப் பார்த்தார். தேனியின் கொடுக்கில் தாம் கண்டவற்றை அந்நாளைய ராயல் கழகத்திற்கு அனுப்பினார்.

இதனைக் கண்டு வியந்த அந்த கழகத்தினர் தனது கண்டுபிடிப்புகள் குறித்து தொடர்ந்து எழுதுமாறு இவரை கேட்டுக்கொண்டதினால் 50 ஆண்டுகளுக்கு மேல் எழுதி வந்தார். இவற்றில் பச்சை ஆல்காக்கள், பற்களிலுள்ள அழுக்கு உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான ஆய்வுகளும் அடங்கும். ஒரு மனிதன் எதிலாவது வெற்றியடைய வேண்டுமென்றால் அவர் மிகவும் மும்முரமாக அதனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார் லீவன்ஹூக். - கட்டுரையாளர்: கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in