கதை கேளு கதை கேளு 21: வாழ்வியலாகும் கல்வி

கதை கேளு கதை கேளு 21: வாழ்வியலாகும் கல்வி
Updated on
2 min read

தனித்தன்மைக்கு மதிப்பளிக்காத கற்றல், சுதந்திரமில்லாத பள்ளி மற்றும் வகுப்பறை செயல்பாடுகள், மதிப்பீட்டு முறைகளால் மனம் சுருங்கிப்போகுதல் மொத்தத்தில் அதிகாரத்துக்கு கீழ்படிதல் என்பது மாதிரியான கற்பித்தல் கற்றல் முறையே பள்ளிகளில் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

உலக புகழ்பெற்ற கல்வியாளர்கள் காலம் காலமாக கல்விமுறை மாற்றம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜான்டுயி, பெர்ட்ரெண்ட் ரஸ்ஸல், ஜான் ஹோல்ட், பாவ்லோ ப்ரேயர் போன்றோர் புதுமையான கல்விமுறை மாற்றங்களை செயல்படுத்தியுள்ளனர்.

இந்திய அளவிலும் பண்பாடு, கலைகளை இணைத்து வழங்கிய தாகூரின் கல்வி உலகம், காந்தி முன்வைத்த செயல்வழிக் கற்றல்முறை , மாண்டிசோரி குறிப்பிடும் சுதந்திரமான கற்றல் முறை, அம்பேத்கரின் கல்விச் சிந்தனை, செயல்பாடுகள் என ஏராளமான கல்வி மாதிரிகள் உள்ளன.

மதிப்பெண் சார்ந்து மட்டுமே இயங்கக்கூடிய கல்விமுறையாக கல்வி முறை உள்ளது. சமூக மாற்றத்தைப் பற்றி சிந்திக்கும் சிலரால் கல்விசார் சிந்தனைகள் ஒருங்கிணைக்கப்பட்டு மாற்றுக்கல்வி முறை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பண்புக்கூறுகள்

1. தங்களுக்கான கல்விக் கோட்பாட்டின் அடிப்படையில் கற்றலை முன்னெடுத் துச் செல்லல்.

2. செயல்முறை கல்வியுடன் கூடிய சமூக மாற்றம், சமூகத் தேவைகள் ஆகியவற்றையும் இணைத்துச் செயல் படுத்துதல்,

3. புரிந்து கற்றல், கற்றதை வாழ்க்கையில் பயன்படுத்தி பார்த்தல், சுயஒழுக்கம் வளர்த்துக்கொள்ள உதவுதல், மற்றகுழந்தையுடன் இணைந்து செயல் படுதல்,

4. தண்டனைக்கு உட்படுத்தாமலிருத்தல், தவறு செய்த குழந்தைக்கு அந்த தவறைச் செய்ய எது தூண்டியது என்ற பின்புலங்களை ஆராய்ந்து அதற்கு தீர்வு காணல்.

இப்படி மாற்றுக்கல்வி முறையில் பின்பற்றப்படும் செயல்பாடுகள் நமக்கு ஆச்சரியத்தையும் இதேபோன்ற கல்வி முறைஅனைத்து குழந்தைகளுக்கும் கிடைத் திடாதா என்ற ஏக்கத்தையும் தருகின்றன.

மாற்றுக்கல்விக்கூடங்கள்: நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி வழங்க வித்யோதயா பள்ளி உருவாக்கப்பட்டது. சுனாமியால் அனாதையாகிப்போன குழந்தைகள் மற்றும் நிரந்தர முகவரி இல்லாத பூம்பூம் இனத்தை சேர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது வானவில் பள்ளி.

பாரம்பரிய தெருக்கூத்துக் கலைஅழிந்துவிடாமல் அடுத்த தலைமுறையினருக்கும் தொடர்ந்து செல்ல உருவாக்கப்பட்டது உறைவிடத்துடன் கூடிய காஞ்சிபுரம் கட்டைக்கூத்து பள்ளி.

தர்மபுரியில் புவிதம் பள்ளி மற்றும் துளிர் கல்வி மையம், திண்டிவனம் தாய்த்தமிழ் பள்ளி, ஆனைக்கட்டி வித்யாவனம் பள்ளி, திருவண்ணாமலை மருதம் பார்ம் பள்ளி, கொடைக்கானல் சோலைப்பள்ளி, திருச்சி கிரியா சில்ரன்ஸ் அகாடமி, பெரம்பலூர் பயிர் பள்ளி, பட்டுக்கோட்டை இந்தியன் வங்கி ஊழியர் சங்கப் பள்ளி, சேலம் சூர்யா பள்ளி, பாண்டிச்சேரி ஆரோவில் பள்ளி, கடலூர் வெள்ளைத் தாமரை பள்ளி போன்றவை தமிழகத்தில் செயல்பட்டுவரும் மாற்றுக்கல்வி கூடங்கள் ஆகும்.

தனித்துவம்: ஒவ்வொரு பள்ளியும் தமிழ்நாட்டு பாடநூல்களுடன் இணைந்து தங்களுடைய தனிப்பட்ட கற்பித்தல் முறைகளுடனும் இயங்கி வருகின்றன. தங்களின் குழந்தைகள் படைப்பாற்றலை வெளிக்கொண ரும் கல்வியைப் பெறவேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் இதுமாதிரியானை மாற்றுக்கல்விக் கூடங்களை அணுகுகின்றனர்.

மாற்றுக்கல்வி வழங்கும் பள்ளிகள் மாணவர்களுடன் களப்பயணம் மேற்கொள்கின்றன. மாணவர்களின் சூழ்நிலைக்கேற்ற முறையில் கற்றலை உள்வாங்கச் செய்கின்றன. சூழலியல் மேல்அக்கறையுடன் இருத்தல், கதை, நாடகம், பாடல் என மொழித்திறன்களில் சிறந்திருத்தல், தாவரம், பயிர் பற்றிய அறிவு,வானவியல் அறிவு, மரம் வளர்த்தல், வாழ்க்கைக்கு பொருந்தும் அறிவு பெறுதல் என்பதாக மாற்றுக் கல்விக்கூடங்கள் கற்றலை தருகின்றன.

சமூக அக்கறை: சமூகம் மீது அக்கறையுடன் சகமனிதனின் நலத்தை பாதுகாக்கும் செயல்பாடுகளை செய்யும் விதமாகவும், பூமியின் மீது அக்கறையுள்ளவர்களாயும் மாற்றுக்கல்வி பயிலும் குழந்தைகள் திகழ்கின்றனர். புத்தகத்தின் ஆசிரியர் சாலை செல்வம் மாற்றுக்கல்வி வழங்கும் பள்ளிகளுக்கு சென்று அவர்களுடன் நேரடியாக உரையாடி மாணவர்களின் செயல்பாடுகளை உற்றுநோக்கி, இந்து தமிழ் திசை செய்தித்தாளுக்காக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே வாழ்விய லாகும் கல்வி புத்தகமாக மலர்ந்துள்ளது.

அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மாற்றுக்கல்வி வழங்கும் பள்ளிகளின் ஆசிரியர்களுடன் ஓர் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்ந்தால் பெரும்பான் மையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் கல்வி கிடைக்கும்.

ஆசிரியர்கள் வாசித்தால் தங்கள் வகுப்பறை செயல்பாடுகளில் மாற்றம் செய்ய உதவும். பெற்றோர்கள் வாசித்தால் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி எது என்ற புரிதலை தரும். மீண்டும் குழந்தையாகி மாற்றுக்கல்வி பயிலச் செல்லலாமா என்ற ஆசையை ஏற்படுத்தும் விதத்தில் மாற்றுக்கல்வி பள்ளிகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. - கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம். தொடர்புக்கு:udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in