

மார்கழி மாத குளிரில் தன்யா கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கிவிட்டு பிரசாதம் பெற்று வருவாள். அதை பக்கத்து வீட்டுக்கெல்லாம் கொடுத்து மகிழ்வாள். கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் இறைவனிடம் நீ தான் உலக உயிர்களுக்கெல்லாம் தலைவன். நாங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும். உலகத்துக்கு ஒரே நிலா, ஒரே சூரியன் போல் ஒரே தலைமை.
எனக்கு ஒரே ஒரு ஆசை. அதை நீ தான் நிறைவேற்றி தரணும் சாமி. நான் ஆதிவாசிகளை பார்க்கனும். அவர்களுக்கு படிப்பு சொல்லித் தர வேண்டும் என்று வேண்டினாள். அந்த நேரத்தில் குடியரசு தினத்திற்கு பள்ளியில் கட்டுரைப் போட்டி நடத்தினார்கள். தன்யா பங்கேற்று முதல் பரிசு பெற்றாள்.
பின்னர் மாநில அளவில் வெற்றி பெற்றாள் அந்தமான் அழைத்துச் செல்வதாக அறிவிப்பு செய்தார்கள். அங்கு சென்று ஆதிவாசியை பார்க்கலாம் என்ற ஆசையில் கட்டுரைக்கான தகவல்களை தேடி தேடி படித்து மாநில அளவிலும் பரிசு பெற்றாள். முதல் முறையாக விமானத்தில் பறப்பதை அவளால் நம்பவே முடியவில்லை. மேகக் கூட்டத்திற்கு நடுவில் விமானம் பறப்பதை பார்த்து மெய்சிலிர்த்தே போனாள்.
அவள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆதிவாசி மக்களை காண அழைத்துச் சென்றார்கள். ஆடையே இல்லாது அரைகுறையாக ஆடை அணிந்து இருப்பதைக் கண்டு வேதனை அடைந்தாள். பிறகு மெல்ல மெல்ல தொட்டு பார்க்கும் ஆசை வந்தது. அருகருகே சென்று முயற்சி செய்து தொட்டு பார்த்தாள். அவர்கள் காடுகளுக்கு நடுவில் மரத்தின் மேலே வசிப்பதை பார்த்து வியந்தே போனாள்.
அவர்கள் பேசும் ஊ, ஆ என்ற ஒலிக்குறிப்பை பார்த்துவிட்டு இவர்களுக்கு எப்படியாவது நாம் ஊருக்குசெல்வதற்கு முன் எழுத்துகளை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாள். ஒரு சிறுமி மட்டும் தன்யாவிடம் நெருங்கிப் பழகினாள். அவளுக்கு எழுத்துகளை கற்றுத் தந்தாள். நாம் இறைவனிடம் வேண்டியது நிறைவேறியதை எண்ணி ஆனந்த கண்ணீர் விட்டாள்.
இதைத்தான் வள்ளுவர் எழுத்துகள் அகரத்தை முதலாக உடையது போல் இறைவனை உலகம் முதன்மை யாக கொண்டு விளங்குவதாக கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்