

அறையிலிருந்து வெளியில வரும்போது விளக்க அணைச்சிட்டு வாங்க செல்லம். எத்தன முறை சொல்லிருக்கேன். நாங்கள்லாம் மெழுகுவர்த்தி வெளிச்சத்துலயும், அதுவும் தீர்ந்துபோனதும் உருகிப்போன மெழுகுவர்த்தியெல்லாம் சேர்த்து ஒரு கிண்ணத்துல வெச்சு அதுல திரி போட்டு விளக்கு மாதிரி ஏத்தி படிச்சு வளந்தோம், தெரியுமா? என்று மகள் ஒளியினிடம் சொன்னார் தந்தை. இப்படி அப்பா சொன்னதும், கடந்த வாரம் ஆண்டு விழாவில் ஆன்டினி பற்றி, சிறப்பு விருந்தினர் பேசியது ஒளியினிக்கு ஞாபகம் வந்தது.
போலந்து நாட்டு தந்தைக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டு தாய்க்கும் மகளாக 1997-ல் பிறந்தவர் ஆன்மேக்கசின்ஸ்கி. செல்லப் பெயர் ஆன்டினி. கனடாவில் வாழ்கிறார். ஆன்டினி குழந்தையாக இருந்தபோது பெற்றோர் விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க வில்லை. எனவே, வீட்டில் இருந்த பழைய பொருட்களை எடுத்து, பிரித்து, ஒட்டி விளையாடினார். ஒட்டுவதற்கு, Hot Glue Gun பயன்படுத்தினார்.
இது, துப்பாக்கி போல்இருக்கும். பசை உள்ள குழாயை அதில் வைத்து அழுத்தினால், ஒரேசீராக பசை வெளியேறும். 9 வயதில்பழைய ட்ரான்ஸிஸ்டர் கிடைத்தது. அதையும் பிரித்து, சால்டரிங் செய்துவிளையாடினார். 11 வயதில் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றார்.மாற்று எரிசக்தி கண்டுபிடிக்கும்ஆர்வம் அதிகரித்தது.
கையில் திறமை இருந்தால்... ஒருமுறை, பிலிப்பைன்ஸில் உள்ளதோழியிடம் ஆன்டினி பேசினார். வீட்டில் மின்சார வசதி இல்லை. மாலை 6 மணிக்குப் பிறகு படிக்கஇயலவில்லை என்று யதார்த்தமாக தோழி சொன்னார். இப்பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு காண விரும்பிய ஆன்டினி, Hollow Flashlight கண்டுபிடித்தார். இதற்கு பேட்டரி தேவையில்லை. கையில் உள்ள வெப்பம் மின்சாரமாக மாறும். விளக்கு எரியும். அப்போது, ஆன்டினியின் வயது 14.
உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, தோழிகளுடன் ஆன்டினி காபி குடித்துக் கொண்டிருந்தார். ஒரு மாணவி, காபி எவ்வளவு சூடாஇருக்குது பார். சூடு குறையவே மாட்டேங்குது. ஆனா, திறன்பேசியில உள்ள சார்ஜ் மட்டும் சீக்கிரமா குறைஞ்சிடுது என்று சொன்னார். எல்லாரும் சிரித்தார்கள். சிரிப்போடு நிறுத்திவிடாது, ஆன்டினிசிந்தித்தார். eDrink கண்டுபிடித்தார். அதாவது, காபியில் தேவைக்குஅதிகமாக உள்ள சூட்டை மின்சாரமாக மாற்றி திறன்பேசிகளுக்கு சார்ஜ் ஏற்றுவது.
தேடி வந்த விருதுகள்: ஆன்டினியின் கண்டுபிடிப்புகள் வைரலாகின. பல்வேறு ஊடகங்களில் இவரின் பேட்டிகள் வெளியாகத் தொடங்கின. கல்லூரிகளிலும், தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பேச அழைத்தார்கள். இதுவரை, 5 முறை TEDx Teen-ல் பேசியுள்ளார். குறிப்பாக 12-ம் வகுப்பு முடிப்பதற்குள் 3 முறை பேசினார். உலகை மாற்றும் 30 வயதுக்குட்பட்ட 30 பேரில் ஒருவராக டைம்ஸ் இதழ் 2013-லும், போர்பஸ் இதழ் 2017-லும் ஆன்டினியைத் தேர்ந்தெடுத்து விருது கொடுத்தன.
2017-ல் மூளை வீக்க (encephalitis) நோயினால் ஆன்டினி பாதிக்கப்பட்டார். 5 மாதங்கள் முற்றிலும் ஓய்வில் இருந்தார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு, பேச, நடக்க, சராசரி வாழ்க்கை வாழ ஏறக்குறைய மறுபடியும் கற்றுக் கொள்ளும் நிலைஏற்பட்டது. அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொண்டார். மீண்டார்.
கடந்த காலத்தில் வாழ்ந்த கண்டுபிடிப்பாளர்கள் பலரும், இலக்கியத்திலும் ஆர்வத்தோடு இருந்துள்ளார் கள் என்று சொல்லி, அறிவியல் ஆய்வுகள் செய்துகொண்டே, ஆங்கில இலக்கியம் படித்தார்.
“குழந்தைகளின் மூளை படைப்பாற்றல் மிகுந்தது. அதனால்தான், வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் கிடைக்கின்ற கல், மண், குச்சி எதை வைத்தும் தங்களுக்கான விளையாட்டுப் பொருட்களை அவர்கள் உருவாக்குகிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்காதீர் கள். அவர்களது மூளையை செயல் பட விடுங்கள். அவர்களுக்குத் தேவையானதை அவர்களால் உருவாக்க முடியும்” என்கிறார் இந்த இளம் கண்டுபிடிப்பாளர். - கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com