சுவாரசியம், சாகசம் நிறைந்த கடல்சார் வேலை வேண்டுமா?

சுவாரசியம், சாகசம் நிறைந்த கடல்சார் வேலை வேண்டுமா?
Updated on
2 min read

கடல் போலவே பரந்த வேலைவாய்ப்புகளை கொண்டிருப்பவை கடல்சார் படிப்புகள். போக்குவரத்து, வணிகம், சுற்றுலா, கட்டுமானம், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு என பரந்திருக்கும் கடல்சார் பணிகளில் ஆர்வம் கொண்டோர் இதற்கு தயாராகலாம்.

இதன் பணிச்சூழல் சவால்கள் நிறைந்தது என்பதோடு, கடல்மார்க்கமாய் உலகம் சுற்றும் வாய்ப்பும், சுவாரசியமான வாழ்க்கை அனுபவங்களும் உத்திரவாதமாக கிடைக்கும். படிப்பை மேற்கொள்வதற்கான கல்விக் கட்டணம் சற்று அதிகம் என்ற போதும், இதர பணிகளைவிட கடல்சார் பணிகளில் ஊதியமும் பல மடங்கு அதிகம். பல்வேறு கடல்சார் பொறியியல் படிப்புகளில் சேர IMU CET(Indian Maritime University - Common Entrance Test) என்ற பொது நுழைவுத் தேர்வு உதவுகிறது.

அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகள்: மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலான இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. மரைன் இஞ்சினியரிங் உட்பட பல்வேறு பொறியியல் படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் பயிற்றுவிக்கிறது. இவற்றுக்கு அப்பால் கப்பல் போக்குவரத்து மற்றும் மின் வணிகம் தொடர்பான பி.பி.ஏ., கப்பல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடர்பான இளங்கலை அறிவியல் பட்டம் ஆகியவற்றையும் வழங்குகிறது.

இந்த இளநிலை படிப்புகளின் தொடர்ச்சியாக எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., ஆகியமுதுநிலை படிப்புகளையும் கடல்சார் பல்கலைக்கழகம் மூலமே பயிலவும் வாய்ப்பு உள்ளது. பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவனங்கள் மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 7 துறைமுக நகரங்களிலும், இதனுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் 22 இடங்களிலும் செயல்படுகின்றன.

இதர பொறியியல் படிப்புகளைவிட கடல்சார் படிப்புகளுக்கு கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால், பொறியியல் படிப்பில் நாட்டம் உள்ளவர்கள், வழக்கமான பொறியியல் படிப்புகளுக்கு மாற்றாக கடல்சார் பொறியியலை பரிசீலிக்கலாம். உடனடி வேலைவாய்ப்பு மற்றும் ஆரம்ப நிலை ஊதியமே லட்சத்தில் தொடங்கும் என்பதால், கடல்சார் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கடன் பெறுவதும் எளிது.

விண்ணப்பிக்கத் தகுதி: பி.டெக்., படிப்புகளில் சேர விரும்புவோர் பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தது 60 சதவீதமும், ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ஆங்கிலம் தவிர்த்த இதரப் பாடங்களில் 5 சதவீதம் தளர்வு உண்டு. 17 - 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுகிறார்கள். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இதில் 5 ஆண்டு தளர்வு உண்டு. உடல் தகுதியில் கண் பார்வைக்கான தகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

விண்ணப்ப நடைமுறைகள்: ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும். கடல்சார் பல்கலைக்கழகத்தின் imu.edu.in என்ற இணையதளத்தில் முறையாக பதிவு செய்து, ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பம் மற்றும் கட்டண பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1000; எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.700 ஆகும். விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரலில் தொடங்கும். ஜூன் முதல் வாரத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெற்று, ஒரே வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

பொது நுழைவுத் தேர்வு: இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். தேர்வு காலம் 3 மணி நேரம். இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம், பொது அறிவு என கொள்குறிவகையிலான 200 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். தவறான விடையளிப்புக்கான நெகட்டிவ் மதிப்பெண் முறை கிடையாது. பத்தாம் வகுப்பில் தொடங்கி, பிளஸ் 2 வரையிலான பாடங்களில் இருந்தே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழான பாடப் புத்தகங்களையும் இந்த தயாரிப்பில் சேர்த்துக்கொள்ளலாம். - கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in